உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இப்படியே போனால் எப்படி?

Go down

இப்படியே போனால் எப்படி? Empty இப்படியே போனால் எப்படி?

Post by nandavanam on Fri Dec 23, 2011 4:26 am

இப்படியே போனால் எப்படி? Tamilnadu-kerala1


இந்தியா, பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் போர்க்காலங்களில் ஏற்படும் பதற்றத்தைப்போல இப்போது தமிழக, கேரள எல்லைப் பகுதிகளில் பதற்ற சூழ்நிலை நிலவுகிறது. கேரள மாநில அரசியல்வாதிகள் தங்களின் சுயநலத்துக்காகவும், குறுகியகால அரசியல் லாபங்களுக்காகவும் இத்தகைய ஓர் அசாதாரணமான சூழ்நிலையைத் திட்டமிட்டு உருவாக்கியுள்ளனர்.

கேரளத்தில் இதுவிஷயத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, உதிரிக்கட்சி என்கிற பேதங்கள் ஏதுமில்லை. அவரவர் பங்குக்கு போட்டி போட்டுக்கொண்டு கள்ளங்கபடமற்ற மலையாள மக்களின் மனதைக் கெடுத்து வருகின்றனர்.

பரசுராமனால் கடலில் இருந்து வெளிக்கொணரப்பட்ட புராதனமான நிலப்பரப்பாக கருதப்படுகிற மலையாள தேசத்தை ""தெய்வத்திண்ட சொந்த நாடு'' என்று பெருமிதத்தோடு மலையாள மக்கள் கூறுவார்கள். மலைக்கும் ஆழிக்கும் (கடல்) இடைப்பட்ட பகுதியில் வாழுகிற காரணத்தால் மலையாளிகள் என்றழைக்கப்படுகிற தெய்வத்தின் தேசத்தில் தற்போது அரசியல் சாத்தான்கள் குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றனர். கேரளத்தில் அரசியலில் செல்வாக்குப் பெற்றுள்ள அரசியல் கட்சிகளில் மாநிலவழி அல்லது மொழிவழிக் கொள்கைகள் கொண்ட அரசியல் கட்சிகள் ஏதும் இல்லை.

இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கித் தந்து இந்திய ஒருமைப்பாட்டைக் கட்டிக்காத்து வருவதாக மார்தட்டிக் கொள்ளும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி கேரள மாநிலத்தில் ஆளுங்கட்சியாக உள்ளது. தேசியவாதம், தேசிய ஒருமைப்பாடு, தேசபக்தி ஆகியவை குறுகிய கண்ணோட்டம் என்றும் சர்வதேசிய வாதம் மற்றும் உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்று சிந்திப்பதே பரந்த மனப்பான்மை என்றும் ஓங்கி முழங்குகிற கம்யூனிஸ்ட் கட்சி கேரளத்தில் பிரதான எதிர்க்கட்சியாகும்.

உதிரிக்கட்சிகளான மானி காங்கிரஸ், எஸ்.என்.டி.பி, என்.எஸ்.எஸ், முஸ்லிம் லீக்குகள் உள்ளிட்ட கட்சிகளின் கொள்கைகளும் மாநில சிந்தனையுடைய கொள்கைகளல்ல. ஆனால், இக்கட்சிகள் அனைத்துமே தமது குறுகியகால அரசியல் சுயலாபங்களுக்காக தமிழக மக்களுக்கு எதிரான மற்றும் இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான தீய சிந்தனைகளைக் கேரளத்தில் பரப்பி வருகின்றனர்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மட்டுமல்ல, நொய்யாறு, முல்லையாறு, சாலியாறு, பாம்பாறு, பரம்பிக்குளம் ஆழியாறு, சிறுவாணி, பவானி, அச்சங்கோவில் ஆறு, கல்லட ஆறு என கேரள தமிழக எல்லையில் ஓடும் ஆறுகளின் தண்ணீரிலும் தமிழகத்துக்கு உரிமை இல்லை என்கிற அடிப்படையிலேயே கேரள மாநில அரசியல்வாதிகள் பிரசாரம் செய்து வருகின்றனர். இத்தனைக்கும் கேரள மாநில மக்களின் உணவுத் தேவைக்கான அத்தியாவசியப் பொருள்களான அரிசி, பருப்பு, காய்கறிகள், பழங்கள், பால் என சைவ உணவாக இருந்தாலும் சரி, அசைவ உணவுக்கான ஆடு மாடு, எருமை, கோழி, முட்டை உள்ளிட்ட அனைத்துமே தமிழகத்திலிருந்துதான் அன்றாடம் செல்கின்றன.

தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் ஒரு பகுதி கேரளத்துக்கு வழங்கப்படுகிறது. தற்பொழுது கேரள மாநிலத்தில் தமிழக வாகனங்களையும், தமிழகத்தைச் சேர்ந்த அய்யப்ப பக்தர்களையும் தாக்கி வன்முறையில் ஈடுபடும் அரசியல் கட்சித் தொண்டர்கள் இதை ஏன் புரிந்து கொள்ளவில்லை? பதிலுக்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தொண்டர்கள் கேரள மாநிலத்துக்குச் செல்கிற உணவுப்பொருள்களைத் தடுத்தால் கேரளத்தில் நிலைமை என்னவாகும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

தேசிய ஒருமைப்பாடு பேசுகின்ற இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் முல்லைப் பெரியாறு அணையின் மதகுகளை உடைக்க முயற்சிக்கின்றனர். இந்திய அரசியல் சட்டத்தை அமல்படுத்த வேண்டிய காங்கிரஸ் முதலமைச்சர் உம்மன்சாண்டியும், அவரது சகாக்களும் சட்டவிரோதமான போராட்டங்களை அரசியல் நோக்கத்துடன் நடத்தி வருகின்றனர். தேசமே தெய்வம் என்கிற கொள்கை கொண்ட கேரள மாநில பா.ஜ.க.வினர் கடப்பாறை, மண்வெட்டிகளுடன் முல்லைப் பெரியாறு அணையை இடிக்க ஊர்வலமாகச் செல்கின்றனர். சர்வதேசியம் பேசுகின்ற கம்யூனிஸ்டுகள் கேரள மாநிலம் முழுக்க பந்த், மறியல், வேலைநிறுத்தம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குமுளி, இடுக்கி ஆகிய பகுதிகளில் முழுமையாகச் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது.

தமிழகத்திலிருந்து கேரளத்துக்குச் செல்லும் கூலித் தொழிலாளிகள் கேரள மாநிலத்தவரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். கேரள மாநில அரசும் சரி, கேரள மாநில போலீஸôரும் சரி வன்முறையாளர்களின் வெறியாட்டத்துக்குத் துணையாகவே உள்ளனர் என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.

தமிழகத்து அரசியலில் எப்போதும் மாநிலக் கட்சிகளின் சக்தியே ஓங்கி இருக்கிறது. தமிழகத்தில் ஆளுங்கட்சியான அ.இ.அ.தி.மு.க., எதிர்க்கட்சியான தே.மு.தி.க. மற்றும் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. ஆகிய அனைத்துமே மாநிலக் கட்சிகளே. தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க., கம்யனிஸ்ட் ஆகியவை அனைத்துமே தமிழகத்தில் வலுவான கட்சிகளல்ல. ஆனால், இங்கு மலையாள மக்களுக்கு எதிராகவோ, கேரள மாநிலத்துக்கு எதிராகவோ யாரும் பகைமை உணர்வுடன் செயல்படவில்லை. இந்தியாவின் ஒருமைப்பாட்டைச் சிதைக்கும் வகையில் கேரள மாநில அரசியல் கட்சிகள் செயல்படுவதை மத்திய காங்கிரஸ் அரசு வேடிக்கை பார்க்கிறது. மத்தியில் பிரதான கட்சியான பி.ஜே.பியின் அகில இந்திய தலைமையும் வாய்மூடி மெüனமாகவே உள்ளது.

நதிநீர் விஷயத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

இரண்டு மாநில அரசாங்கங்கள் செய்து கொண்ட ஒப்பந்தங்களை கேரளம் என்றும், எப்போதும் மதிப்பதில்லை. இவற்றையெல்லாம் பார்க்கிறபொழுது கேரளம் இந்திய அரசின் இறையாண்மைக்கு எதிராகத் தொடர்ந்து செயல்படுகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்திய நாடாளுமன்ற அதிகார வரம்பு, உச்ச நீதிமன்ற அதிகார வரம்பு ஆகியவற்றுக்கு கேரளம் கட்டுப்படுவதில்லை.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த தேசிய கட்சிகள் தங்கள் தேசியத் தலைமைக்குக் கட்டுப்படுகிறார்களா அல்லது தேசிய கட்சிகள் இது விஷயத்தில் இரட்டை வேடம் போடுகிறார்களா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தமிழகத்தில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட கேரள மாநிலத்தைச் சேர்ந்த மலையாள மக்கள் வசிக்கின்றனர். தமிழகத்தில் கேரள மாநிலத்தவர்களின் வீடுகளுக்கோ, தொழில் நிறுவனங்களுக்கோ எதிராக எந்தவித எதிர்வினைச் சம்பவங்களும் நிகழவில்லை. தமிழக மக்கள் பரந்த மனப்பான்மை கொண்ட பாரம்பரியம் உள்ளவர்கள். கேரள மாநிலத்தைச் சேர்ந்த எம்.ஜி.ஆரைத் தமிழகத்தின் முதலமைச்சராகவும், தங்களின் தன்னிகரற்ற தலைவராகவும் தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். தற்போது கூட எம்.ஜி.ஆர். கட்சியான அ.இ.அ.தி.மு.க. ஆட்சிதான் நடைபெற்று வருகிறது.

கேரளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் படத்துக்குச் செருப்புமாலை போட்டு அவரது உருவ பொம்மையை எரிக்கும் கேரள மாநிலத்தவர் இதைத் தெரிந்துதான் செய்கிறார்களா? கேரள மாநிலத்தில் அய்யப்ப பக்தர்களைத் தாக்குகின்றவர்கள் ஒரு விஷயத்தைச் சிந்திக்க வேண்டும். அய்யப்பனே பாண்டிய ராஜகுமாரன்தான்.

தற்போது அய்யப்ப மலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விக்ரகம் தமிழக மக்களின் நன்கொடைதான். இதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டாமா? ஒருவேளை தமிழகத்தைச் சேர்ந்த அய்யப்ப பக்தர்களும் குருவாயூரப்பன் பக்தர்களும், மூகாம்பிகை பக்தர்களும் கேரளத்துக்குச் செல்லாமல் இருந்தால் கேரள மாநிலத்தின் கதி என்னவாகும்?

இதைப்பற்றியெல்லாம் கேரள மாநில அரசியல்வாதிகள் கவலைப்படவில்லை. அரசியல்வாதிகள் இருக்கட்டும், கேரள மாநிலத்தைச் சார்ந்த நாளிதழ்கள், தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களும் மிகத்தவறாகவே நடந்து கொள்கின்றன.

நடுநிலையோடு தேசிய நலன் கருதி செய்திகளை வெளியிடாமல், கேரள மாநில மக்களின் மனதில் பிரிவினை நஞ்சைக் கலக்கும் வகையிலேயே செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக கேரளம், தமிழகம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் செயல்படும் செய்தி ஊடகங்கள் அந்தந்த மாநிலத்துக்குச் சாதகமாகச் செய்திகள் வெளியிடுகிறோம் என்கிற பெயரில் பிரிவினைக் கருத்துகளையே மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றன.

இதிலும் இவர்களின் வியாபார நோக்கமே மேலோங்கி நிற்கிறது. மத்திய அரசாங்கத்தில் உயர் பதவிகளை ஆக்கிரமித்துள்ள 35-க்கும் மேற்பட்ட கேரள அதிகாரிகள் குறுகிய கண்ணோட்டத்துடன் தமிழகத்துக்கு எதிராகவே செயல்பட்டு வருவதாகவும் கேள்விப்படுகிறோம். இது இப்படியே தொடர்ந்தால் எப்படி?

பொதுவாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் உலகம் முழுவதும் சென்று குடியேறி வேலைவாய்ப்பைப் பெற்று பொருளீட்டி வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து அவர்கள் அனுப்புகின்ற பணம்தான் கேரள மாநிலத்தின் பொருளாதாரத்தைத் தாங்கிப்பிடித்து வருகிறது. வெளிநாடுகள் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கேரள மக்கள் குடியேறி வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளார்கள்.

தமிழகத்தில் கல்வி, மருத்துவம், பேக்கரி, டீக்கடை, நகைக்கடைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றை அதிக அளவில் மலையாள மக்களே நடத்தி வருகின்றனர். பழனிமலையில் முருகன், கேரளம் நோக்கி அருள்பாலிக்கிற காரணத்தால் ஏராளமான கேரள மாநிலத்தவர் பழனிக்கும், தமிழகத்தின் இதர திருக்கோவில்களுக்கும் அன்றாடம் வந்து செல்கின்றனர். ஏன், எல்லைப் பகுதிகளில் கொள்வினை, கொடுப்பினைகூட உண்டு.

தமிழக மூவேந்தர்களில் ஒருவரான சேரன் ஆண்ட காரணத்தால் சேரநாடு என்று கேரளம் ஒரு காலத்தில் அழைக்கப்பட்டு, தமிழகத்தின் ஒரு பகுதியாகவே கருதப்பட்டது. மொழி அடிப்படையில் கூட தமிழுக்கு நெருக்கமான மொழியே மலையாளம் ஆகும். கேரளத்தில் காலடி என்ற ஊரில் பிறந்த ஆதிசங்கரர், "துர்லபம் பாரதே ஜன்மா' (பாரத பூமியில் பிறப்பதே அரிது) என்று குறிப்பிட்டாரேயொழிய துர்லபம் கேரள ஜன்மா என்று கூறவில்லை.

தமிழகத்தில் திருநாவலூரில் அவதரித்த சுந்தரர், கேரளத்து சேரமான் பெருமானோடு நட்பு பூண்டு கேரள மாநிலம் மகோதை பட்டினத்திலிருந்து வானகம் சென்றதாக வரலாறு கூறுகிறது. ஆனால், தற்போது கேரள மாநில மக்கள் மத்தியில் பிரிவினை எண்ணங்களை வளர்க்கும் கேரள அரசியல் கட்சிகள் நிரந்தரப் பகையுணர்வை உருவாக்கி வருகின்றனர். தேசபக்தியுள்ள எவரும் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. மத்திய அரசாங்கம் கேரள மாநிலத்தில் இந்திய இறையாண்மையை நிலைநாட்டுவதற்குப் போதுமான சட்டநடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

கேரளத்தில் குறுகிய அரசியல் சுயலாபங்களுக்காகச் செயல்படும் அரசியல் கட்சிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும். இளைதாக முள்மரம் கொல்க என்கிற அறவுரைக்கேற்ப தற்போது கேரளத்தில் பிரிவினைவாதம் இளையதாக இருக்கும்போதே நசுக்கப்பட வேண்டும். இல்லையேல், கேரளத்தின் மூலம் இந்தியத் திருநாடு மாபெரும் வேதனையைச் சந்திக்கும்.

இந்திய ஒருமைப்பாட்டில் நம்பிக்கை உள்ள எவரும் இனி சும்மா இருக்கக்கூடாது. இந்தியாவை நேசிக்கின்ற தேசபக்தியுள்ள தேசிய சக்திகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு கேரளத்தில் நீதியை நிலைநாட்ட வேண்டும்.

நன்றி தினமணி

nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum