உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கட்சி நிதியின் நிறம் கறுப்பு

Go down

கட்சி நிதியின் நிறம் கறுப்பு Empty கட்சி நிதியின் நிறம் கறுப்பு

Post by nandavanam on Mon Dec 19, 2011 3:30 am

கட்சி நிதியின் நிறம் கறுப்பு World

லோக்பால் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை எப்படியாவது சமாளித்துவிடலாம் என்று நினைத்திருந்த பிரதமருக்கு பெருத்த ஏமாற்றம். யாரும் வசப்படவில்லை. முன்னேற்பாடாக கூட்டணிக் கட்சிகள் மத்தியில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தியிருந்த அவர், எதிர்க்கட்சிகள் அனைத்தும் எதிரும்புதிருமாகக் கருத்துகளைத் தெரிவிக்கும் என்று எதிர்பார்த்திருக்கமாட்டார்.

ஒவ்வொரு கட்சியும் தங்களது நிலையில் பிடிவாதமாக இருந்ததால், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை. முக்கியமான மூன்று அம்சங்கள் எதிலும் கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நீடித்தன. ஏமாற்றத்துடனேயே, பிரதமர் ரஷியாவுக்குப் பறந்துவிட்டார்.

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு பின்வாங்கியதற்குக் கூட்டணிக் கட்சிகளே முஷ்டியை மடக்கியதுதான் காரணம். கூட்டணிக் கட்சிகளின் முழுமையான ஆதரவு மட்டும் இருந்திருந்தால் மற்ற எந்த எதிர்ப்பையும் பற்றி அரசு கவலைப்பட்டிருக்காது. ஆனால், அந்தச் சிக்கல் இப்போது இல்லை. லோக்பால் விஷயத்தில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இருக்கிறது. எல்லா எதிர்க்கட்சிகளையும் சமாதானப்படுத்த முடியாது என்று தெரிந்துவிட்டால், மசோதா நிறைவேறுவதற்குத் தேவையான எண்ணிக்கையை மட்டும் உறுதி செய்து கொண்டு, அரசு களத்தில் இறங்கிவிட முடியும்.

எதிர்க்கட்சிகளைக்கூட சமாளித்துவிடலாம். ஆனால் லோக்பாலின் மூன்று அம்சங்களில் உறுதியாக இருந்துவரும் அண்ணா ஹசாரேவை யாராலும் எளிதில் சமாதானப்படுத்திவிட முடியாது. பிரதமரும் காங்கிரஸ் கட்சியும் இதை நினைத்துதான் கவலைப்பட வேண்டும். தனது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், வரும் 27-ம் தேதி மீண்டும் போராட்டத்தைத் தொடங்குவேன் என்பதை பொட்டில் அடித்தது போலக் கூறிவிட்டார் ஹசாரே. தில்லி குளிர் போராட்டத்துக்கு ஏற்றதல்ல என்பதால் மும்பையில் இடம் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

லோக்பால் விவகாரத்தில் அரசு ஒருபுறமும் எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களாக உருவெடுத்திருப்பவர்களும் மற்றொருபுறமும் முறுக்கிக் கொண்டு நிற்கிறார்கள். ஒவ்வொருவரும் லோக்பால் மசோதாவுக்கு வெவ்வேறு விதமான விளக்கம் தருகிறார்கள். சமூக ஆர்வலர்களுக்கு எந்த உள்நோக்கம் ஏதும் இருக்கிறதா என்பது பற்றி உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் எதிர்க்கட்சிகளுடன் நெருக்கமாக இருப்பதைப் பார்த்தால் சில சந்தேகங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

பாஜக போன்ற எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தை அரசியல் ரீதியாகவே அணுகுகின்றன. பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளான அகாலிதளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகியவற்றுக்கு பஞ்சாப், உத்தரகண்ட் மாநிலத் தேர்தலில் வெற்றி பெறுவது மிக முக்கியம். உத்தரப் பிரதேசத்தில் தங்களது இருப்பை நிலைநிறுத்த வேண்டியது அவசியம். அண்ணா ஹசாரேவுக்கு இப்போது ஆதரவாக இருந்தால், தேர்தல் நேரத்தில் அவர் கைகொடுப்பார் என்பது அவர்களது கணக்கு. அரசியல் என்று வந்துவிட்டபிறகு, இப்படியெல்லாம் செய்கிறார்களே என்று எல்லாவற்றுக்கும் அதிர்ச்சியடைந்து கொண்டிருக்கக்கூடாது. குறைசொல்வதற்கு இதில் ஒன்றுமில்லை.

இப்போதைய சேர்க்கைகளைப் பார்க்கும்போது, இரு தரப்பும் திட்டமிட்டே எல்லாவற்றையும் செய்வது போலத் தெரிகிறது. சமூக ஆர்வலர்கள் அனைவரும் இப்போது அரசியல் கற்றுக் கொண்டுவிட்டார்கள். முந்தைய போராட்டங்களில் இருந்ததைவிட அண்மையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர்கள் அரசியல்வாதிகளைக் கையாண்டவிதத்தில் வியத்தகு முதிர்ச்சியைக் காண முடிந்தது. எல்லா நடவடிக்கைகளிலும் அரசியல் இருக்கிறது.

தங்களது இலக்குகளை அடைவதற்கு அரசியலைக் கையிலெடுப்பதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை என்று அண்ணா ஹசாரே வாதிடக்கூடும். இதுகூட நல்லதுதான். நமது நாட்டில் ஜனநாயகம் தழைத்திருப்பதற்கு தேர்தல் நடைமுறைகளே அடிப்படைக் காரணம். அண்ணா ஹசாரே குழுவினரும் பாபா ராம்தேவ் போன்றோரும் தேர்தலில் குதித்தால் அது மக்களாட்சியை மேலும் வலுப்படுத்தும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்குள் 5 மாநிலத் தேர்தல்கள் வரப்போகின்றன. அதனால் மற்றப் பிரச்னைகளை மறந்து பெரும்பாலான மக்கள் தேர்தலைக் கவனிக்கத் தொடங்கிவிடுவார்கள். சமரசம் ஏற்படாவிட்டால், இந்தத் தேர்தலில் காங்கிரஸýக்கு எதிராக அண்ணா ஹசாரே குழுவினர் பிரசாரம் செய்வார்கள். நேரடியாகச் சொன்னால், இது எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவளிக்கும் நடவடிக்கை. இன்னும் துல்லியமாகப் பார்த்தால், உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜுக்கும், பஞ்சாபில் பாஜக-அகாலி தள கூட்டணிக்கும், உத்தரகண்டில் ஆளும் பாஜகவுக்கும் ஹசாரேவின் பிரசாரம் ஆதரவாக அமையும்.

உத்தரப் பிரதேசத் தேர்தலில் அஜீத் சிங்கின் வரவால் காங்கிரஸ்-ராஷ்ட்ரீய லோக் தளம் கூட்டணி, சமாஜவாதிக் கட்சியை முந்துவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியிருக்கின்றன. இருந்தாலும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு இவர்களால் எந்த அச்சுறுத்தலும் கிடையாது. கொஞ்சம் சவால் விடுவார்கள். அவ்வளவுதான். வழக்கம் போலவே எதிர்ப்பதற்கு ஆளில்லாமல் மாயாவதியின் கட்சி போட்டியில் முதலிடத்தில் சென்று கொண்டிருக்கிறது. சமாஜவாதிக் கட்சியில் ஓரங்கட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர்கள் ரஷீத் மசூத், சலீம் ஷெர்வானி ஆகியோர் இந்தத் தேர்தலில் சிறுபான்மை வாக்குகளை காங்கிரஸýக்குப் பெற்றுத் தருவார்கள். அதுவும் அவர்களைப் பயன்படுத்திக் கொள்வதைப் பொறுத்தது.

புதிது புதிதாகப் பிரச்னை எழுந்திருப்பதால் கறுப்புப் பண விவகாரம் பின்னுக்குப் போய்விட்டது. நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக நடந்த விவாதம் பெரிய முக்கியத்துவம் பெறவில்லை. ஏதோ வந்தார்கள், பேசினார்கள், போனார்கள் என்றுதான் இருந்தது. இது தொடர்பான ஒத்திவைப்புத் தீர்மானமும் தோற்றுப் போய்விட்டது. எனக்கு நீண்ட காலமாகவே ஒரு சந்தேகம் இருக்கிறது. வெளிநாட்டு வங்கிகளில் பல லட்சம் கோடி ரூபாய் முடங்கியிருப்பது பற்றி மட்டுமே எல்லோரும் பேசுகிறார்களே, உள்நாட்டில் கறுப்புப் பணத்தைப் பதுக்குவது மட்டும் சரியென்றாகி விடுமா என்ன?

கறுப்புப் பணத்தை ஒழிக்கப் போவதாகவும், ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் இந்த அரசியல்வாதிகள் சூளுரைப்பதெல்லாம் வெறும் வெளி வேஷம்தான். ஊழலின் ஆணிவேரே இவர்கள் வசூலிக்கும் கட்சி நிதியில் இருந்துதான் தொடங்குகிறது. அதுதான் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவதற்கான முதல் வழி. கட்சி நிதி வசூலிப்பதில் எந்தக் கணக்கும் கிடையாது. பொறுப்பும் கிடையாது. இதில் வெளிப்படையாக எதுவும் நடக்காது. இது மட்டும் மோசடியில்லையா? இப்படிக் குறுக்கு வழியில் வரும் பணம் மட்டும் வெள்ளை, பச்சை, சிவப்பு என்று வேறு ஏதோ நிறத்தைக் கொண்டிருக்குமா? இதைப் பற்றி பேசுவதற்கு வாயைத் திறக்காதவர்கள், வெளிநாட்டிலிருக்கும் கறுப்புப் பணத்தைப் பற்றி மட்டும் பேசுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

தேர்தல் காலத்தில் யாரும் தனது சொந்தப் பணத்தைச் செலவழிப்பதில்லை. இது கட்சிகளின் தலைமைகளுக்கும் தெரியும். எல்லா அரசியல்வாதிகளுக்கும் தெரியும். வரவிருக்கும் 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் சுமார் 600 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடக்கப் போகிறது. இதில் போட்டியிடுவதற்கு சுமார் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் கோடி ரூபாயை அரசியல் கட்சிகள் செலவழிக்கப் போகின்றன. இந்தப் பணம் எங்கிருந்து வருகிறது?

இந்த வழியைக் கண்டுபிடித்து அழித்தால் மட்டுமே அரசியல் சுத்தமாகும். கறுப்புப் பணத்தை ஒழிக்க முடியும். அரசியலில் நல்லவர்கள்கூட தங்களது பணிகளைச் செய்ய முடியாத நிலை மாறும். இந்த அடிப்படைப் பணியை விட்டுவிட்டு, பிரச்னையை மேலோட்டமாகவே நமது மக்கள் பிரதிநிதிகள் அலசுகிறார்கள். இதை நம்பும் நமது மக்களும், ஏதோ சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் மட்டும்தான் கறுப்புப் பணம் இருப்பதாக நினைத்துக் கொண்டு அந்த நாட்டுடன் உடன்பாடு ஏற்பட்டுவிட்டதா, பட்டியல் தருவார்களா என்று அப்பாவியாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மை நிலையைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், கூகுள் இணையதளத்துக்குச் செல்லுங்கள். உலகில் எந்தெந்த நாடுகளெல்லாம் கறுப்புப் பணம் பதுக்கி வைக்கப்படுகிறது என்று தேடிப் பாருங்கள். ஏ முதல் இஸட் வரை எல்லா எழுத்திலும் நாடுகள் இருக்கின்றன. இதில் பல நாடுகளின் பெயர்களை நீங்கள் கேள்விப்பட்டிருக்கவே முடியாது. ஒவ்வொரு நாட்டிலும் வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப பணத்தைப் பதுக்குவதற்கு விதவிதமான சேவைகள் கிடைக்கின்றன.

லஞ்சம் வாங்குவதே குற்றம் என நமது நாட்டுச் சட்டம் சொல்கிறது. கடுமையான தண்டனைகூட கிடைக்கும். ஆனால், உலகின் பல நாடுகளில் வரி ஏய்ப்பதும், கறுப்புப் பணத்தைச் சேமித்து வைப்பதும் அங்கீகரிக்கப்பட்ட தொழில்களாகவே இருக்கின்றன. இந்த முரண்பாடுதான் கறுப்புப் பணத்தைப் பதுக்குவோருக்கு வசதியாக இருக்கிறது.

நன்றி தினமணி


nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum