உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

சுதந்திரப் பொருளாதாரத்தில் அடிமையாகும் இந்தியா

Go down

சுதந்திரப் பொருளாதாரத்தில் அடிமையாகும் இந்தியா Empty சுதந்திரப் பொருளாதாரத்தில் அடிமையாகும் இந்தியா

Post by nandavanam on Thu Dec 15, 2011 12:41 am

சுதந்திரப் பொருளாதாரத்தில் அடிமையாகும் இந்தியா India

வளர்ச்சி' "வளர்ச்சி' என்று மூச்சுக்கு மூச்சு கூட்டத்தில் கூடிநின்று கூறும் மன்மோகன் சிங்கும், மதிப்புக்குரிய பிரதமரின் கூட்டாளி அமைச்சர்களும், காங்கிரஸ் கட்சி கனவான்களும், இந்தியாவை ஒட்டுமொத்தமாக ஒபாமாவுக்கு - அதாவது அமெரிக்காவுக்கே விற்றுவிட முடிவு செய்துள்ளதாகத் தோன்றுகிறது.

பி.ட்டி விதைகளுக்காகவும் வேறுபல உயிரித் தொழில்நுட்பங்களுக்காகவும் விவசாயத்தை அடகு வைத்தார்கள். அடகு வைத்தால் மீட்கும் வழி தேடலாம். இப்போது விற்பனை தொடங்கப் போகிறது. இந்தியாவில் ""சில்லறை விற்பனை'' செய்ய அன்னிய மூலதனத்துக்கு அனுமதி வழங்கப் போகிறார்கள்.

ஆரம்பத்தில் 51 சதம். வால்மார்ட், ஜெனரல் மில், கார்கில் எல்லாம் நுழைந்து இந்திய விவசாயிகளைக் காப்பாற்றப் போகிறார்கள். இப்படித்தான் நம்மை மன்மோகன் சமாதானப்படுத்துகிறார். இந்தியாவுக்கு டாலர் முதலீடு வேண்டும்.

கடந்த மூன்றாண்டுகளாக இந்தியாவில் நிகழ்ந்துவந்த பொருளாதார நெருக்கடிகள், அப்படிப்பட்ட பல நெருக்கடிகளுக்கு மத்திய அரசு வழங்கிய சில தீர்வுகள், அப்படி வழங்கப்பட்ட தீர்வுகள் எதுவுமே வேலை செய்யாததால் சரி, ""கூப்பிடு வால்மார்ட்டை. போடு கடைகளை, நடத்துங்க ராஜா'' என்று உத்தரவு போட்டது சோனியாவா? மன்மோகனா? என்றெல்லாம் ஆராய்வதில் என்ன பயன்?

ஆளும் கூட்டணியின் மெஜாரிட்டி பலம் நிகழ்த்தும் பொம்மலாட்டத்தில் கைதூக்கி, இந்தியர்களை அடிமையாக்கும் எம்.பி.க்களை வாழ்த்துவோம். இந்தியச் சில்லறை வர்த்தகத்தில் 51 சதவிகித அனுமதிக்குரிய சட்டம் நிறைவேறப்போவதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம். இப்போதைக்கு ஒத்திவைப்பது ஒரு கண் துடைப்பு.

கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவில் விலைவாசி நோய் விஷம்போல் ஏறிக்கொண்டுள்ளது. நடுத்தர மக்களும் அடித்தட்டு மக்களும் விலை ஏற்றத்தால் செலவைச் சமாளிக்க முடியாமல் கடன் வாங்குவதும் வட்டி கட்டுவதும் வாடிக்கையானது.

விலைவாசி ஏறுவது ஏன் என்றால் பணவீக்கம் என்றார்கள். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டியை உயர்த்த வேண்டும் என்று சில நிபுணர்கள் கூறினர். வட்டியை உயர்த்தினால் ரூபாய் முதலீடு பிரச்னையாகும். ஆகவே, வட்டியை உயர்த்தக் கூடாது என்று சில நிபுணர்கள் கூறினர். எனினும் ரெப்போ வட்டியைப் பலமுறை உயர்த்தினார்கள்.

ஒவ்வொரு முறையும், அதாவது காலாண்டுக்கு ஒரு தடவை அரைக்கால், கால், அரை, முக்கால், ஒன்று என்று உயர்த்தும்போது இதனால் உற்பத்திக்குப் பங்கம் வராது, முதலீடு பிரச்னை ஆகாது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் கூறுவதுண்டு. ஆனால், வட்டியை உயர்த்தியதால் ரூபாய் முதலீடு குறைந்து வளர்ச்சி குறைந்துவிட்டதாக சமீபத்தில் பிரணாப் முகர்ஜி ஒப்புக்கொண்டுள்ளதன் பொருள் இப்போது புரிகிறது.

வளர்ச்சிக்கு டாலர் முதலீடு தேவை என்ற எண்ணத்தில் வட்டி உயர்த்தப்பட்டதா? உண்மையில் வட்டி உயர்ந்ததால் பணவீக்கம் குறைந்ததா? இல்லையே. உண்மை புரிந்தது.

வளர்ச்சிக்காக நாட்டையே அடகு வைக்கும் மதியூகிகள் குளோபலிசேஷன் என்ற மாயவலைக்குள் சிக்கி ஏற்றுமதி செய்து பணம் திரட்டலாம் என்றனர். அப்படி வரக்கூடிய பணத்தால் உள்ளூரில் உற்பத்தியை உயர்த்தலாம் என்று கருதி, ஏற்றுமதியாளர்களின் நன்மைக்காகப் பணமதிப்பைக் குறைத்தனர்.

பணமதிப்பைக் குறைப்பதன் மறுபெயர் பணவீக்கம். இன்று ரூபாயின் மதிப்பு குறைந்துவிட்டது. இன்னும் குறையத்தான் போகிறது. பணம் வீங்கத்தான் போகிறது.

கடந்த ஆண்டு 47 - 48 ரூபாய்க்கு விற்ற டாலர் இன்று ரூ. 54-க்கு உயர்ந்துள்ளது. அடுத்த ஆண்டு ரூ. 63 - 64 ரூபாய்வரை உயரும். ரூபாயின் மதிப்பைக் குறைத்தால் ஏற்றுமதிக்குரிய பொருள் அளவும் கூடும்.

இப்படிப் பணமதிப்பைக் குறைக்கும்போது டாலர் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் இருக்கும். உள்ளூர் விலைவாசியை ஒருக்காலும் கட்டுப்படுத்த இயலாது.

ஒரு குறிப்பிட்ட பொருளை மலிவாக ஏற்றுமதி செய்து பெறக்கூடிய லாபத்தை வைத்து அப்பொருள் உற்பத்தியை உயர்த்தியதாகவோ, அடக்க விலை குறைந்ததாகவோ இந்திய வரலாறு இல்லை. ஏற்றுமதி மூலம் பெறும் டாலர் அதிக விலையில் இறக்குமதிக்கு உதவுகிறது. ஏற்றுமதி மதிப்பைவிட எப்போதுமே இறக்குமதி மதிப்பு கூடுவதால் அன்னியச் செலாவணிப் பற்றாக்குறையும் நீடித்தவண்ணம் உள்ளது.

உள்ளூர் உற்பத்தி உயரப் போதிய மூலதனம் இல்லாததால் அரசுக்கடன் பத்திரங்களை விற்க வேண்டியுள்ளது. இதனால் பொது மூலதனம் உயரும். சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் வாராத கடன் கருதி அமெரிக்க ராஜமுத்திரைக் கடன் பத்திரங்களை "மூடி' இன்வெஸ்ட்மென்ட் ஏஏஏ+ என்ற நம்பும் நிலையை ஏஏ+ என்று குறைத்தபோது, இந்தியாவில் ஏகப்பட்ட சர்ச்சை. அமெரிக்காவே குடிமுழுகிவிட்டதாக ஊடகங்களும் மிகைப்படுத்தின.

அண்மையில் அதே "மூடி' இன்வெஸ்டர் ஸ்டேட் வங்கியின் வாராத கடன் அளவு இன்னமும் மோசம் என்று அளந்து ஏ+ ஐக்கூட வழங்கவில்லை. ""இந்திய ரூபாய் வலுவாக உள்ளது. எந்தப் பயமும் வேண்டாம்'' என்று அலறிய வங்கி உயர்நிலை அதிகாரிகள் அன்று அமெரிக்கக் கடன் பத்திரங்கள் மதிப்பிழந்து விட்டதாக "மூடி' மதிப்பிட்டதை ஏற்றார்கள். அதே கருத்தை "மூடி', ஸ்டேட் வங்கிக்கு வழங்கியபோது மறுத்தார்கள்.

விலைவாசி உயர்வதைக் கட்டுப்படுத்தப் பணவீக்கத்தைக் குறைக்க வேண்டும். பணவீக்கத்தைக் குறைக்க வட்டியை உயர்த்த வேண்டும். வட்டியை உயர்த்தினால் ரூபாய் முதலீடு குறைந்து உற்பத்தி குறையும்.

ஆகவே, உற்பத்தியை உயர்த்த 51 சதவிகித அன்னிய முதலீடு என்பது உற்பத்தி - மொத்த வியாபாரத் துறைகளில் குளோபலிசேஷன் அறிமுகமான காலகட்டத்திலேயே தொடங்கிவிட்டது.

உதாரணம்: சுரங்கத் தொழில், உயிரித் தொழில்நுட்பம், மின்சாரம், பொதுச் சேவையில் குடிநீர், வங்கித் தொழில், எஃகு, அலுமினியம், இயந்திரங்கள், கார், லாரி, பல்வேறு மின்சாரச் சாதனங்கள், குளிக்கும் சோப்பு வகையறா உள்பட, விதைகள்.

அப்போதெல்லாம் ""ஆமாம் சாமி'' போட்ட எதிர்க்கட்சிகள், இப்போது சில்லறை வர்த்தகத்தில் 51 சத அன்னிய முதலீடு என்றதும் எதிர்ப்பானேன்?

குளோபலிசேஷன் - அதாவது உலக வர்த்தக அமைப்பின் சட்ட-திட்ட விதி ஒழுங்கு முறைகளில் (டங்கல் திட்டம்) இந்தியா கையெழுத்துப் போட்டபோது சில்லறை வர்த்தகத்தில் 51 சதம் விட்டுப்போனதால் இன்று சட்டமோ. யாருக்குத் தெரியும்?

சமையல் கூடத்தையே விட்டுக்கொடுத்து விட்டோம். பரிமாறுவதற்கு ஏன் தடை என்று பிரணாப் முகர்ஜி கேட்பது நியாயந்தானே? மம்தாவின் எதிர்ப்பு ஓயும்வரை ஒத்தி வைக்கலாம். அலைகள் ஓய்ந்தபின்னர் சட்டம் ஒப்புதலாகும் என்று சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.

டிசம்பர் 4-ம் தேதி செய்தியில் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை விவசாயிகள் ஆதரிப்பதாக மத்திய அமைச்சர்களும் மன்மோகனும் கூறினார்கள். மறுநாள் டி.வி.யில் ஆரஞ்சு டர்பனுடன் குர்தா - தோத்தி அணிந்த கூட்டம் தங்களை விவசாயிகள் என்று கூறிக்கொண்டு அன்னிய முதலீட்டைத் தாங்கள் ஆதரிப்பதாகப் பிரதமரிடம் தெரிவித்த காட்சி... நாடகத்தில் சிவாஜியே தோற்றுவிடுவார்! வெள்ளை வெளேரென்று உடை அணிந்த கிளீன் விவசாயிகளை பார்த்ததே இல்லை. இப்போது அரசுக்கு உணவு மானியம் மிகவும் சுமையாக உள்ளது.

விவசாயிகளுக்கு அதிக விலை கொடுத்து வாங்கி நுகர்வோர்களுக்குக் குறைந்த விலையில் வழங்கவா அன்னிய முதலீடு வருகிறது?

நஷ்டத்துக்கு வியாபாரம் செய்ய அவனுக்கென்ன பைத்தியமா? 1970-களில் விவசாயிகளுக்குக் கிடைக்கும் அங்காடி லாபம் பற்றி அமெரிக்காவில் ஆய்வு நடத்தப்பட்டது.

நுகர்வோர் வழங்கும் விலை 1 டாலர் என்றால் அதில் 70 சென்ட் விவசாயிகளின் பங்கு என்று அமெரிக்கப் புள்ளிவிவரம் கூறியது. பரவாயில்லை.

இன்னமும்கூட இந்தியாவில் விவசாயிக்கு நுகர்வோர் விலையில் சராசரி 50 முதல் 65 சதவிகிதமாவது இன்று கிட்டுகிறது.

சரக்கு - சில்லறை வர்த்தகத்தில் 51 சதவிகிதம் அன்னிய முதலீடு - அதாவது அமெரிக்காவில் நிகழ்ந்த அதே உணவுச்சங்கிலி வரும்போது பழைய இடைத்தரகர்கள் வேலை இழப்பார்கள்.

வால்மார்ட் - டெஸ்கோ - கார்கில் இடைத்தரகர்கள் சூட்டுக்கோட்டுப் போட்ட நவநாகரிகம் படைத்தவர்களாயிருப்பார்கள். தரக்கட்டுப்பாட்டு அலுவலர்கள் என்று அழைத்துக்கொண்டு விளைபொருள்களைக் கசக்கிப் பிழிந்து சோதிப்பார்கள். பின்னர் வழங்கப்படும் விலையைப் பார்த்து, ""நம்மூர் இடைத்தரகரே தேவலாம்'' என்ற முடிவுக்கு விவசாயிகள் வருவார்கள். உணவுச்சங்கிலி வால்மார்ட் கடை வந்தது. ""எல்லாம் கொள்ளை மலிவு'' என்ற விளம்பரத்துடன் தொடங்கும். மெல்ல மெல்ல பாரம்பரிய வணிகர்கள் போட்டி போட முடியாமல் அழிவர்.

இனி வாங்க ஆளில்லை என்ற நிலைக்கு வந்ததும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விலை குறைந்து, நஷ்டம் தாங்க முடியாமல் விவசாயிகள் நிலத்தை விற்ற பிறகு, கார்ப்பரேட்டு விவசாயம் சக்கை போடு போடும் நாள் அதிக தூரத்தில் இல்லை.

1947 ஆகஸ்டு 15-ல் நாம் பெற்ற சுதந்திரத்தை காந்தி ஒப்புக்கொள்ளவில்லை. இந்தியர்கள் பொருளாதாரச் சுதந்திரம் பெறவில்லை என்று கூறியதை, மன்மோகன் - சோனியா தவறாகப் புரிந்துகொண்டு குளோபலிசேஷன் என்ற சுதந்திரப் பொருளாதாரத்தையும், டாலர் மூலதனங்களையும் அள்ளிக்கொண்டு வந்துவிட்டார்கள். இந்தியப் பொருளாதாரத்தை நிமிர்த்த டாலர் சமபங்கில் வேண்டும்.

அப்படிப்பட்ட டாலர் சுதந்திரத்தில் அடிமையாகக் கட்டுண்டு வாழ்வதில் என்ன தவறு? 1947-க்கு முன் நாம் வாழ்ந்த வரலாறு புத்துருவம் பெற்றுத் திரும்புகிறது. மலர் தூவி வரவேற்பதா? கல்லை எறிவதா? முடிவு உங்கள் கையில்.

நன்றி தினமணி

nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum