உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

எங்கள் நாடு விற்பனைக்கல்ல!

Go down

எங்கள் நாடு விற்பனைக்கல்ல! Empty எங்கள் நாடு விற்பனைக்கல்ல!

Post by nandavanam on Sat Dec 10, 2011 2:42 am

எங்கள் நாடு விற்பனைக்கல்ல! Usa_kazhthai_jeya
இந்தியாவின் தலைவிதியைத் தீர்மானிக்கும் நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறது? அரசியல் கட்சிகளின் கூச்சலும், குழப்பமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதற்குக் காரணம் என்ன? இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கிக் கிடக்கின்றனவே, உலக நாடுகள் இந்திய அரசியலைப் பற்றி என்ன நினைக்கும்?

மக்களுக்கான மசோதாக்களை நிறைவேற்ற விடாமல் நாடாளுமன்றத்தை முடக்குவதாக எதிர்க்கட்சிகள் மீது ஆளும் கட்சியும், மக்கள் பிரச்னைகளுக்காக இவ்வாறு செயல்படுவதும் நாடாளுமன்ற நடைமுறைதான் என்று எதிர்க்கட்சிகளும் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி பதில் கூறிக் கொள்கின்றனர்.

நமது நாட்டில் பிரச்னைகள் திட்டமிட்டு வளர்க்கப்படுகின்றன. எல்லா இடங்களிலும் எதிர்க்கட்சிகள்தான் இப்படிப்பட்ட செயல்பாடுகளைத் தூண்டிவிடும். ஆனால் இந்த நாட்டில் ஆளும் கட்சியும், அரசாங்கமுமே இதனைச் செய்கின்றன. ஏனென்றால் இன்று ஆளும் அரசாங்கம் தங்கள் குடிமக்களுக்குச் சேவை செய்வதை விடவும் அமெரிக்காவுக்கும், அன்னிய நாடுகளுக்கும் சேவை செய்வதையே பெருமையாக நினைக்கின்றன.

விலைவாசி உயர்வு, ஊழல், கறுப்புப்பண விவகாரம், தெலங்கானா கோரிக்கை, முல்லைப் பெரியாறு பிரச்னை, மீனவர் மீது இலங்கை கடற்படைத் தாக்குதல், கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு எனப் பிரச்னைகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டிருப்பதற்கு மத்திய அரசின் தவறான அணுகுமுறையே காரணமாகும்.

உறங்குகிறவர்களை எழுப்பி விடலாம்; ஆனால் உறங்குவது போல பாவனை செய்கிறவர்களை யாராலும் எழுப்ப முடியாது. நாட்டுக்கும், மக்களுக்கும் எதிரானது எனத் தெரிந்தும் செய்கிறவர்களைக் காலம் மன்னிக்காது.

இருக்கும் பிரச்னைகள் போதாது என்று இப்போது சில்லறை வணிகத்தில் 51 விழுக்காடு அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது நாடாளுமன்றத்தை மட்டுமல்லாமல் நாட்டையே உலுக்கியுள்ளது. கோடானுகோடி சிறிய வணிகர்களின் வாழ்வோடு மத்திய அரசு விளையாடுகிறது. சுதந்திரப் போராட்டத்தின் முழக்கமான,"செய் அல்லது செத்துமடி' மறுபடியும் கேட்கிறது.

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் இரு அவைகளும் இதுவரை செயல்படவில்லை. இதுபற்றி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது; அதிலும் தீர்வு காண முடியவில்லை.

அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முடிவை ஒட்டு மொத்தமாகத் திரும்பப் பெறாதவரை நாடாளுமன்றத்தை நடத்த விடமாட்டோம் என முக்கிய எதிர்க்கட்சியான பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் தெரிவித்துள்ளன. அத்துடன் வாக்கெடுப்புடன் கூடிய ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டுள்ளன.

பாஜக ஆளும் மாநிலங்களில் சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கமாட்டோம் என்று பாஜக திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையிலும் பிரதமர் மன்மோகன் சிங்கின் பிடிவாதம் குறைந்தபாடில்லை; சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை திரும்பப் பெற முடியாது என்று தெரிவித்துள்ளார். தில்லியில் நடந்த இளைஞர் காங்கிரஸ் மாநாட்டில் இதுபற்றி பேசியுள்ளார். இந்த முடிவு அவசர கதியில் எடுக்கப்பட்டதல்ல, தீவிர பரிசீலனைக்குப் பிறகே எடுக்கப்பட்டது. இது நாட்டின் வளர்ச்சிக்கு வழிகோலும் என்று கூறியுள்ளார்.

அரசாங்கத்தில் பங்கு கொண்டுள்ள கூட்டணி கட்சிகளும் ஏற்றுக் கொள்ளாத நிலையில், இதுபற்றி யாருடன் தீவிரமாகப் பரிசீலனை செய்யப்பட்டது? அன்னிய நாட்டு அரசுடனா? அன்னிய நாட்டு நிதி நிறுவனத்துடனா? என்பது தெரிவித்தால்தானே தெரியும். இந்நாட்டை ஆளும் வாய்ப்பைப் பெற்றவர்கள் அதனை வழங்கிய மக்கள் கருத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டாமா?

"ஏற்கெனவே பல நாடுகள் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்திருக்கின்றன. அங்கெல்லாம் சிறு வணிகர்களும், பெரிய நிறுவனங்களும் ஒரே நேரத்தில் சில்லறை வணிகத்தில் ஈடுபட முடிகிறது. நம்மைப் போன்ற பெரிய நாடுகளில் இது சாத்தியமாகும்.

அன்னிய நிறுவனங்கள் சில்லறை வணிகத்தில் நுழைவதால் நம் நாட்டில் உள்ள சிறிய தொழில்கள் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இது தவறான கருத்தாகும். சிறிய தொழில்கள் நலிவடையாமல் இருப்பதற்குத் தேவையான பல கட்டுப்பாடுகள் அன்னிய நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கின்றன' என்றும் பிரதமர் கூறுகிறார்.

அன்னிய நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் என்னென்ன என்பதை அவர் கூறவில்லை. மக்களாட்சியில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்பதை ஆளுங்கட்சியாக வந்ததும் மறந்து விடுகின்றனர்.

"இந்தப் பிரச்னைக்காக நாடாளுமன்றத்தை முடக்குவது, வாக்களித்த மக்களுக்கு அநீதி இழைப்பதைப் போன்றது, இதனால் நாட்டின் மரியாதைதான் குறையும். எல்லாப் பிரச்னைகளும் நாடாளுமன்றத்தில் விவாதித்து ஒரு முடிவுக்கு வரலாம்' என்றும் பிரதமர் பேசியுள்ளார்.

"சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவை திரும்பப் பெற முடியாது' என்று அறிவித்துவிட்ட பிறகு நாடாளுமன்றத்தில் விவாதித்து முடிவெடுப்பது எப்படி என்பதுதான் தெரியவில்லை; இந்தப் பேச்சே முன்னுக்குப் பின் முரணாக இருப்பது புரியவில்லையா? இந்தப் பிரச்னையில் காங்கிரஸ் கட்சியிலேயே கருத்து வேறுபாடு இருக்கிறது; அதன் தோழமைக் கட்சியான திரிணமூல் காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வும் இதனைக் கடுமையாக எதிர்க்கின்றன.

நாடெங்கும் உள்ள வணிகர்களும், ஏழை எளிய மக்களும் இதனை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்தியுள்ளனர். இந்த மக்களின் எதிர்ப்பு உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல், "குறுகிய அரசியல் ஆதாயத்துக்காக சில அரசியல் கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன' என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். தில்லியில் "இந்துஸ்தான் டைம்ஸ்' நாளிதழ் ஏற்பாடு செய்திருந்த நிறுவனத் தலைவர்கள் மாநாட்டில் இவ்வாறு பேசியுள்ளார். இப்போது இவரே அதனை நிறுத்திவைக்க முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தியா ஒரு காலத்தில் கலை பண்பாட்டுத் துறைகளில் மட்டுமல்ல, செல்வத்திலும் சிறந்து விளங்கியது. இதனைக் கேள்வியுற்ற ஐரோப்பியர் இந்நாட்டிற்கு வருவதற்கு கடல் வழிகளைத் தேடி அலைந்தனர். ஆங்கிலேயர், போர்ச்சுகீசியர், டச்சுக்காரர் மற்றும் பிரெஞ்சுக்காரர்கள் இடையே ஏற்பட்ட வியாபாரப் போட்டி புதிய நாடுகளையும், புதிய வழித் தடங்களையும் தேட வேண்டிய தேவை ஏற்பட்டது.

புதிய கடல்வழிகளைக் கண்டுபிடிக்க போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் நாட்டு மன்னர்கள் தம் நாட்டு மாலுமிகளை ஊக்குவித்தனர். வாஸ்கோடகாமா என்னும் போர்ச்சுகீசிய மாலுமி 1498-இல் இந்தியாவிற்கு வந்து சேர்ந்தார். இரண்டாம் முறையாக 1501 ஆம் ஆண்டு வந்து சேர்ந்தபோது கோழிக்கோடு, கொச்சி, கண்ணணூர் ஆகிய இடங்கள் வணிகத் தலங்களாயின.

இவர்களைத் தொடர்ந்து 1600 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசியான எலிசபெத் மகாராணி அனுமதியுடன் ஆங்கிலக் கிழக்கிந்திய வணிகக் குழு வணிகம் செய்வதற்காகவே வந்தது, பிறகு ஆட்சி செய்ய ஆரம்பித்தது. 1857 இல் நடைபெற்ற மாபெரும் எழுச்சிக்குப் பிறகு, 1858 முதல் இந்தியாவின் ஆட்சியை இங்கிலாந்து அரசாங்கம் நேரடியாக எடுத்துக் கொண்டது.

இந்த அடிமைத்தனத்திலிருந்து நாம் விடுதலை பெறுவதற்கு கொடுத்த விலை கொஞ்சமா? அன்றைய தினம் காங்கிரஸ் கட்சியே தலைமை தாங்கி பெரும் போராட்டங்களை நடத்தின. சிறைகளை நிரப்பின. உடல் பொருள் உயிரையே தியாகம் செய்தனர். தீவிரவாதமும், மிதவாதமும் போட்டியிட்டுக் கொண்டு போராடின. இறுதியில் காந்தியாரின்அகிம்சை மூலமே இந்தியா விடுதலை பெற்றது. பெற்ற விடுதலையைப் பேணிக்காக்க வேண்டாமா?

இந்திய விடுதலையை மறுபடியும் அயல்நாட்டாரிடம் அடகு வைக்கும் பணியில் அதே காங்கிரஸ் கட்சி இறங்கியிருப்பது வேதனையாக இருக்கிறது. உலக மயம், தனியார் மயம், தாராள மயம் என்ற பெயரால் பிரதமர் மன்மோகன்சிங் இப்பணியைச் செவ்வனே செய்து வருகிறார். இந்தியாவை வேட்டையாடுவதற்கு வெளிநாட்டுத் திமிங்கலங்களுக்கு அழைப்பு விடப்படுகிறது. சிவப்புக் கம்பளம் விரிக்கப்படுகிறது. மகாத்மா காந்தி காலத்தில் பெற்ற சுதந்திரம் சோனியா காந்தி காலத்தில் விற்பனை செய்யப்படுகிறதா?

முதல் பிரதமர் நேரு வகுத்தளித்த "ஜனநாயக சோஷலிசம்' மற்றும் "கூட்டு சேராக் கொள்கை' எல்லாம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. பிரதமர் இந்திராகாந்தி காலத்தில் அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கிகள் எல்லாம் இப்போது தனியாருக்கு விற்பனை செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

கதர் மற்றும் கிராமத் தொழில்களை வளர்க்க வேண்டும்; சுதேசிப் பொருள்களையே பயன்படுத்த வேண்டும்; அன்னிய நாட்டுப் பொருள்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்த காங்கிரஸ் கட்சி இப்போது அன்னிய நாட்டுத் தொழில் நிறுவனங்களை அறைகூவி அழைக்கிறது.

"சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்' என்ற பெயரால் பாரம்பரிய ஏழை விவசாயிகளின் நிலங்கள் பறிக்கப்பட்டன. அன்னியத் தொழில் நிறுவனங்களுக்கு தடையற்ற மின்சாரமும், குடிநீரும் இலவசமாக வழங்கப்பட்டது. சொந்த நாட்டுத் தொழில் நிறுவனங்களுக்குக் கிடைக்க வேண்டிய மின்சாரமும் மறுக்கப்படுகிறது. இதுதான் இந்தியாவின் மாபெரும் தொழில் புரட்சியா?

வெளிநாட்டு நிறுவனங்கள் வந்தால் விலைவாசி குறையும், வேலை வாய்ப்புகள் பெருகும் என்பது உண்மைக்கு மாறானது. வால்மார்ட்டின் வெற்றியைக் குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒரு குழு 2004-இல் வெளியிட்ட ஓர் அறிக்கையில், "இத்தகைய குறுகிய லாப நோக்கம் கொண்ட உத்திகள் இறுதியில் நம் பொருளாதாரத்தையே அரித்து வீழ்த்திவிடும்' என்று முடிவுரையாகக் குறிப்பிட்டுள்ளது. ஐரோப்பியப் பொருளாதார மந்தநிலைக்கும், சீர்குலைவுக்கும் காரணம் புரிகிறதா?

தங்கள் பிரார்த்தனை நிறைவேறுவதற்காக தெய்வங்களுக்கு உயிர்களைப் பலியிடுவது போல அடுத்த நாட்டு உறவு தொடர வேண்டும் என்பதற்காக சொந்த நாட்டு நலன்களைப் பலியிட வேண்டுமா? "எங்கள் நாடு மொத்தமாகவோ, சில்லறையாகவோ விற்பனைக்கல்ல' என்பதை நாம் எல்லோரும் எழுந்து நின்று ஒரே குரலில் உறுதி எடுப்போம்.

நன்றி தினமணி


nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum