உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

மாற்றுவழிதான் என்ன?

View previous topic View next topic Go down

மாற்றுவழிதான் என்ன?

Post by nandavanam on Wed Jan 04, 2012 3:33 am

மத்தியப் பிரதேச மாநிலத்தில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்துள்ளதாக 114 மருத்துவ மாணவர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது அந்த மாநில மருத்துவக் கல்வித் துறை. இவர்கள் மீது என்ன நடவடிக்கை? இவர்களைக் கல்லூரியிலிருந்து நீக்கிட நடவடிக்கை எடுப்பார்களா என்பது இது தொடர்பாக நடைபெறும் கூடுதல் விசாரணையைப் பொறுத்துள்ளது.

நுழைவுத் தேர்வில் ஆள்மாறாட்ட முறைகேட்டை வடஇந்திய பத்திரிகைகள் முன்னாபாய் முறைகேடு என்று (தமிழில் வசூல்ராஜா முறைகேடு) வர்ணித்துள்ளன. இந்த முறைகேட்டுக்குப் பின்னால் பெரும்புள்ளிகள் இருக்கிறார்கள். ஒவ்வொரு மாணவரிடமும் பல லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு, அறிவுக்கூர்மையுள்ள மருத்துவ மாணவர்களை வைத்து ஆள்மாறாட்டம் செய்வது தெரியவந்துள்ளது.

இதற்குக் காரணம், நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மருத்துவப் படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடப்பதுதான். தமிழ்நாட்டில் மதிப்பெண் அடிப்படையில்தான் மருத்துவக் கல்விக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என்றாலும், மறுமதிப்பீடு, மறுகூட்டல் ஆகியவற்றின் மூலம் மருத்துவப் படிப்பில் சேருபவர்களைக் கண்காணிக்க வேண்டியது அவசியம்.

இதேபோன்று பல் மருத்துவம் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளிலும் நுழைவுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, கல்லூரியில் சேர்ந்திருப்பது தெரியவந்துள்ளதால் அதுகுறித்தும் மத்தியப் பிரதேச மாநில அரசு விசாரிக்கத் தொடங்கியிருக்கிறது.

இது மத்தியப் பிரதேச மாநிலத்தின் பிரச்னை, இதனால் நமக்கென்ன பாதிப்பு? என்று கேட்கலாம். தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புகளில் சேர முடியாதவர்கள் பலர், இதுபோல வெளிமாநிலங்களில் ஏதாவது ஒரு வழியில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படித்துவிட்டு, தொழில் செய்ய தமிழ்நாட்டுக்கு வந்துவிடுகிறார்கள். ஆகவே, இது அந்த மாநிலத்தின் பிரச்னை என்று விட்டுவிட முடியாது. அந்தப் பிரச்னையின் பின்விளைவுகள் மற்ற மாநிலங்களுக்கும் இருக்கவே செய்யும்.

இத்தகைய ஆள்மாறாட்ட முறைகேடுகள் எம்பிபிஎஸ் கல்லூரி சேர்க்கையில் மட்டும் அல்ல; முதுகலைக் கல்வியிலும் நடைபெறுகின்றன. இதில் பொதுமருத்துவத்தைக் காட்டிலும், பல் மருத்துவத்தில் இத்தகைய முதுகலைப் படிப்பு முறைகேடுகள் மேலதிகமாக நடைபெறுகின்றது என்று மருத்துவர்களே அங்கலாய்த்துக் கொள்ளும் நிலைமை இருக்கிறது.

ஓர் ஊரில் தொடர்ந்து தனது மருத்துவமனையில் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வருபவரின் பெயர்ப் பலகையில் திடீரென எம்.டி உதித்துவிடும். மருத்துவ முதுகலைப் படிப்புகள் நிச்சயமாக அஞ்சல் வழி மூலம் அளிக்கப்படுவதில்லை என்பது உறுதி. விசாரித்தால், இந்தப் பட்டம் உத்தரப் பிரதேசம், பிகார், அசாம் மாநிலத்தில் கேள்விப்படாத பெயரில் ஒரு மருத்துவக் கல்லூரியில் பெற்றதாக இருக்கும்.

இத்தகையோர் மிகக் குறைவானவர்கள் என்று மருத்துவச் சங்கங்கள் வாதிடலாம். ஆனால், இந்தக் குறைவான நபர்களால்தான் பெரும் பிரச்னைகளும் மருத்துவ உலகுக்குக் கெட்ட பெயரும் வந்து கொண்டிருக்கின்றன.

அடிப்படையான அறிவுக்கூர்மையும், அத்துறை சார்ந்த புலமையும் இல்லாமல், இவர்கள் பணத்தை மட்டுமே முன்வைத்து எம்பிபிஎஸ் மருத்துவர்களாக, பல் மருத்துவர்களாகத் தொழில் தொடங்கும்போது, தவறான சிகிச்சை அளிப்பதும் அதனால் நோயாளிக்குப் பாதிப்பும் தொடர்வினைகளாக மாறிவிடுகின்றன.

மருத்துவ உலகில் பணம் கொட்டுகிறது என்பது ஒருபுறம் இருந்தாலும், மருத்துவம் படிக்கத் தேவைப்படும் பாடங்களில் ஆர்வமும், ஈடுபாடும் உள்ள மாணவர்கள் மருத்துவக் கல்வியைத் தேர்ந்தெடுத்து, மருத்துவர்களாக மாறும்போது, நமக்குச் சிறந்த மருத்துவர்களாக தொழில் புரிகின்றார்கள். திறமையான மருத்துவர்களாகவே வலம் வருவார்கள். இவர்கள் கேட்கும் தொகை அதிகமாக இருந்தாலும் நோயாளிகள் மனமகிழ்ச்சியுடன் அளிக்கத் தயாராக இருக்கிறார்கள்.

ஒரு மருத்துவரின் திறமை, தகுதியை அறிந்துகொள்ள சாதாரண குடிமகனுக்கு இப்போதுள்ள ஒரே வழி- மற்ற நோயாளிகள் மூலம் வாய்மொழியாக அறிந்துகொள்வதுதான். இந்திய மருத்துவக் குழுமம் வழங்கும் மருத்துவத் தொழில் அங்கீகாரச் சான்றிதழ்கள் நோயாளிகளின் பார்வைபடும் இடத்தில் இருப்பதில்லை. ஏதோ ரகசியமாக, யாராவது கேட்டால் எடுத்துக்காட்டும் அளவில்தான் இருக்கின்றன. இதனால், இருக்கிற சிக்கல் போதாதென்று போலி மருத்துவர்களும் உள்ளே புகுந்துவிடுகிறார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மருத்துவமனையிலும், கார்ப்பரேட் மருத்துவமனை தொடங்கி சிறிய கிளீனிக் வரை எத்தகைய மருத்துவமனையாக இருந்தாலும், ஒரு மருத்துவர் எம்பிபிஎஸ் படிப்பை எந்த மாநிலத்தில், எந்தக் கல்லூரியில் படித்தார், எம்டி படிப்பை எந்த மாநிலத்தில், எந்தக் கல்லூரியில் படித்தார் என்கிற விவரங்களுடன், மருத்துவத் தொழில் சான்றிதழை நோயாளிகள் பார்வையில் எளிதில் படும்படியாக வைக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தினால் நோயாளிகளுக்குப் பேருதவியாக இருக்கும்.

ஒவ்வொரு மருத்துவருக்கும் அங்கீகார எண் இருக்கின்றது. இணைய தளத்தில் இந்த எண்களைத் தட்டினால் அவர் குறித்த அனைத்து விவரங்களையும் ஒருவர் அறிந்துகொள்ளவும் வகை செய்ய வேண்டும். தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக வழக்குகள் இருந்தால் அதுகுறித்த தகவலும் இடம்பெறச் செய்தல் வேண்டும்.

போதிய செயல் அனுபவம், தொடர் பயிற்சி எதுவும் இல்லாமல் மதிப்பெண்களும், பட்டமும் மட்டுமே மருத்துவர்களின் தரத்தை நிர்ணயிக்க முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த மதிப்பெண்களும்கூட முறைகேடாகப் பெறப்படுகின்றன என்றால் நோயாளிக்கு என்னதான் பாதுகாப்பு, சிகிச்சைக்கு வேறு மாற்றுவழிதான் என்ன?

மருத்துவர் தனது நாடியைப் பிடித்துப் பார்க்கும் முன்பாக, அவரது நாடியை நோயாளி பிடித்துப் பார்த்தால் என்ன தவறு?

நன்றி தினமணி

avatar
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

View user profile http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum