உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

அன்பு எது? அறிவு எது?

Go down

அன்பு எது? அறிவு எது? Empty அன்பு எது? அறிவு எது?

Post by nandavanam on Sat Dec 17, 2011 12:28 am

அன்பு எது? அறிவு எது? Evening-Tamil-News-Paper_1943171025

பள்ளி, கல்லூரிகளில் விலங்கியல் மற்றும் உயிரியல் பாடப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் படிப்பு தொடர்பாக பூச்சிகள் மற்றும் பிராணிகளை அறுத்துக் காட்டும் நிகழ்வுகளைப் படிப்படியாகக் குறைத்துக்கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டுள்ளது பல்கலைக் கழக மானியக் குழு.

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ள முக்கியமான ஐந்து பரிந்துரைகள் இவைதான்: 1. மேனிலைப் பள்ளி மாணவர்கள் தங்கள் செய்முறைப் பாடத் தேர்வுக்காக ஊர்வன, பறப்பன, பூச்சிகளை அறுத்தல் கூடாது. 2. இவற்றைக் கண்காணிக்க மேனிலைப் பள்ளி அளவில் ஒரு கமிட்டி அமைக்கப்பட வேண்டும். 3. கல்லூரிகளில் இளநிலைப் பாடத்திட்டத்தில் செய்முறைத் தேர்வு, மற்றும் செயல்விளக்கம் ஆகியவற்றுக்காக அறுக்கப்படும் பூச்சிகளின் எண்ணிக்கையைப் படிப்படியாகக் குறைத்துக்கொள்ள வேண்டும். 4. செயல்விளக்கத்துக்காக ஒரேயொரு பூச்சி அல்லது பிராணி மட்டுமே ஆசிரியரால் அறுக்கப்பட வேண்டும். இதை இளநிலைப் படிப்பு மாணவர்கள் செய்யக்கூடாது. 5. முதுநிலைப் படிப்பில் உள்ள மாணவர்கள் வேண்டுமானால், பாடம் தொடர்பான தெரிவு செய்யப்பட்ட சில பூச்சி அல்லது பிராணிகளை மட்டும் அறுக்கலாம்.

யுஜிசி அனுப்பியுள்ள இந்த வழிகாட்டு நெறிமுறையைப் பார்த்தவுடன் உயிரியல் துறை, விலங்கியல் துறை பேராசிரியர்கள் கொதித்துப்போனார்கள் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஆசிரியர்களுடன் கலந்துபேசாமல் தன்னிச்சையாக யுஜிசி எடுத்துள்ள இந்த முடிவு, இந்தப் பாடப் பிரிவுகளில் பயிலும் மாணவர்களின் திறனைக் குறைத்துவிடும் என்பதுதான் அவர்களது வாதம்.

யுஜிசி சொல்லும் வாதம் உயிர்க்கொலை கூடாது என்கின்ற அன்பு நெறியைச் சார்ந்தது. அதாவது, இந்தியாவில் உள்ள அனைத்து மேனிலைப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் விலங்கியல் மற்றும் உயிரியல் மற்றும் இது தொடர்பான ஆய்வுப் படிப்புகளில் 25 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். இத்தகைய கட்டுப்பாட்டை அமல்படுத்திவிட்டால், பல்வகைப்பட்ட 2 கோடி உயிரினங்களை இந்த மாணவர்களிடமிருந்து காப்பாற்றிவிடலாம். மேலும், இந்த பிராணிகளைத் தனியாரிடமிருந்து வாங்குவதற்காக கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் நிறையப் பணம் செலவிடுகின்றன.

அப்படியானால், மாணவர்கள் ஒரு பூச்சி அல்லது பிராணியின் உள்ளுறுப்புகள் செயல்படும் விதத்தை எப்படி அறிவார்கள்? இதற்காக இன்றைய நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துங்கள் என்று சொல்கிறது யுஜிசி. அதாவது கணினி உதவியுடன் மெய்நிகர் ( வெர்சுவல் ரியாலிட்டி) உத்திகள் மற்றும் அனிமேஷன் உத்திகளைக் கையாளலாம் என்றும் யுஜிசி பரிந்துரைக்கிறது.

பல்கலைக்கழக மானியக் குழுவின் இந்த அறிவிப்புக்கு புளூ கிராஸ் போன்ற பிராணிகள் வதைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆர்வலர்கள் பாராட்டை அள்ளி வழங்கியுள்ளார்கள். நடைமுறையில் இது சாத்தியமா?

நடைமுறையில் குறைந்த விலைக்கு கிடைக்காத பிராணிகள், அரிய உயிரினம் என்று அறிவிக்கப்பட்ட உயிரினங்களை அறுத்தலுக்குத் தடை விதித்தால் அதைப் புரிந்துகொள்ள முடியும். அல்லது பன்றி, முயல், நாய் போன்ற பிராணிகளை அறுக்கும்போது அவற்றுக்கு மயக்க மருந்து கொடுத்து, அவை வலியால் துடிக்காமல் அறுத்தல் வேண்டும் என்று பரிந்துரைத்தாலும் புரிந்துகொள்ள முடியும். மேனிலைப் பள்ளிகளில் மட்டும் இத்தகைய அறுவைச் செய்முறைத் தேர்வுகள் வேண்டாம் என்று சொன்னாலும் கல்வி உலகம் ஏற்றுக்கொள்ளும். ஆனால், இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கே இத்தகைய தடை என்றால், அந்த மாணவர்கள் எவ்வாறு ஆய்வுகளில் ஆர்வம் கொள்ளவும் தெளிவான தேர்ச்சி பெறவும் முடியும்?

மருத்துவம் பயிலும் மாணவர்கள் இறந்தவர்களின் உடலைப் பரிசோதனை செய்து உடல்உறுப்புகளை அறிந்து கொண்ட பின்னர், முதுநிலைப் படிப்பில்தான் அவர்கள் அறுவைச் சிகிச்சைக்குத் தயாராகிறார்கள். நோயாளிகளின் உடலில் கத்தியை வைக்கும் உரிமை அப்போதுதான் அவர்களுக்குக் கிடைக்கிறது. இப்போது சடலங்கள் கிடைப்பதிலும் தட்டுப்பாடு ஏற்படுகிறது என்பதால், மனிதபொம்மைகளைக் கணினி உதவியுடன் செயல்படுவதைப்போல இயக்கி, ஒவ்வொரு மாறுதலையும் அந்த மனிதபொம்மையில் நிகழ்த்திக் காட்டுகிறார்கள். அறுவைச் சிகிச்சைகளின் போது உடனிருந்து காண மட்டும் செய்கிறார்கள்.

ஆனாலும், இந்தப் படிப்பை முடித்துவிட்டு, முதுகலை மருத்துவப் படிப்பில் ஒரு மாணவர் தானே அறுவைச் சிகிச்சை செய்யும்போது கிடைக்கும் அனுபவமும் அதில் அவரது சரியான அணுகுமுறை மற்றும் புரிதலும்தான் அந்த மாணவரை சிறந்த அறுவைச் சிகிச்சை நிபுணராக மாற்றுகிறது. ஏனென்றால், உயிருள்ள மனித உடல் இயங்குவதை உள்ளே எட்டிப் பார்க்கும்போதுதான் அவரால் ஒவ்வொரு உடலும் ஒன்றுதான் என்றாலும், ஒவ்வொன்றும் தனித்துவமானது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

பிரிட்டிஷ் எழுத்தாளர் சாமர்செட் மாம் ஒரு மருத்துவர். ஒரு அறுவைச் சிகிச்சையின்போது, ஒரு நோயாளியின் கல்லீரலைப் பார்த்து, நாம் பாடத்தில் படித்த அளவும் இங்கே காண்பதும் வேறாக இருக்கிறது என்று சொல்ல, அந்தப் பேராசிரியர் அதற்குப் பதிலாக "இயல்பானதுதான் அரிதிலும் அரிதானது' என்று கூறியதாக அவர் எழுதுகிறார்.

பள்ளி, கல்லூரிகளில் யாரும் அரிய உயிரினங்களை அறுத்து செய்முறைத் தேர்வு செய்வது கிடையாது. முதலில் மலர்கள், பின்னர் பட்டாம்பூச்சி, தும்பி, பல்லி, கரப்பான்பூச்சி, எலி, முயல், பன்றி ஆகியனதான் பள்ளி, கல்லூரி அளவில் செய்முறை மற்றும் செயல்விளக்கத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இதற்குத் தடை விதிப்பதன் மூலம் அந்த விலங்குகளைக் காப்பாற்றிவிட முடியும் என்றால் ஒவ்வொரு நாளும், எத்தனை ஆடுகள், மாடுகள், கோழிகள் வெட்டப்படுகின்றன. ஒவ்வொரு தெருவிலும் ஒரு இறைச்சிக் கடை இருக்கிறதே! அங்கே நடப்பதைக் காட்டிலுமா, பள்ளி, கல்லூரிகளில் உயிர்வதை நடந்துவிடுகிறது?

மாத்திரை மருந்துகளின் விளைவுகளை தற்போது விலங்குகளிடம்தான் சோதிக்கிறோம். அதையும் நிறுத்திவிடலாமா? உணவுக்காக ஓர் உயிரைக் கொல்லுதல் அறிவீனம். அறிவுக்காக ஒரு சில பிராணிகளைக் கொல்ல நேர்ந்தால் அது பொதுநலம். யுஜிசி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதுதான் நமது வேண்டுகோள்.

நன்றி தினமணி


nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum