உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

கட்டணம், விலை உயர்வு: முதிர்ச்சியற்ற அணுகுமுறை

Go down

கட்டணம், விலை உயர்வு: முதிர்ச்சியற்ற அணுகுமுறை

Post by nandavanam on Sun Nov 20, 2011 4:05 am


பேருந்து கட்டணங்களையும், பால் விலையையும் கடுமையாக உயர்த்தி ஓர் இரவில் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது தமிழக அரசு. எவ்வளவு நியாயங்களைப் பேசினாலும் சராசரி மக்களின் பொருளாதார வாழ்வில் ஏற்றப்பட்டுள்ள இந்தச் சுமை ஏற்கத்தக்கதல்ல. மாறாக, நம்பிக்கையுடன் வாக்களித்த மக்களுக்கு துன்ப அதிர்ச்சி அளித்திருப்பது அநியாயமானதாகும்.

சென்னை உள்ளிட்ட நகரங்களில் பேருந்து போக்குவரத்துக் கட்டணம் 50% உயர்த்தப்பட்டுள்ளது. புறநகர் பேருந்துகளில் இக்கட்டணம் 60% உயர்த்தப்பட்டுள்ளது. தொலைத்தூர இடங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் கட்டணம் 60% உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு எந்த அளவிற்கு அதிர்ச்சியானது என்பதை அறிய வேண்டுமெனில், இதுவரை திருவண்ணாமலை செல்ல வசூலிக்கப்பட்ட கட்டணம் ரூ.62இல் இருந்து ரூ.116 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பெரம்பூரில் இருந்து சேத்துப்பட்டு வர வசூலிக்கப்பட்டு வந்த மாநகர பேருந்து கட்டணம் ரூ.8இல் இருந்து 13 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இவை நகர மக்களை மட்டுமின்றி, தமிழ்நாட்டின் மற்ற நகரங்களில் இருந்து 100, 200 கி.மீ. தூர பயணத்தை பணி நிமித்தம் அடிக்கடி மேற்கொள்ளும் பயணிகளுக்கு பெரும் சுமையாகும்.

பால் விலையை 25% உயர்த்தியுள்ளது தமிழக அரசு. பால் குழந்தைகளுக்கான முக்கிய உணவு, ஏழை, எளிய குடும்பங்களின் அத்யாவசிய உணவு. அதன் விலையை இந்த அளவிற்கு உயர்த்தியிருப்பது, ஏற்கனவே உணவுப் பொருட்களின் விலை உயர்வால் கடும் பாதிப்பிற்குள்ளாகியிருக்கும் சராசரி மக்களை பெரும் கோவத்தில் ஆழ்த்தியுள்ளது. “உள்ளாட்சித் தேர்தல் முடிந்திருக்கலாம், வரட்டும் நாடாளுமன்றத் தேர்தல்” என்று மக்கள் கருவத் தொடங்கியுள்ளனர்.

இப்படிப்பட்ட விலையேற்றம் தவிர்க்க முடியாதது என்பதற்கு தமிழக முதல்வர் கூறிய நீண்ட விளக்கத்தில், முந்தைய அரசின் ஆட்சிமையையும், அதனால் ஏற்பட்ட கடன் சுமையையும், அதில் இருந்து பொதுத் துறைகளை மீட்க போதுமான கடனை மத்திய அரசு தர மறுத்திருப்பதையும் சுட்டிக்காட்டி, “நான் வேறு எங்கு சென்று உதவி கேட்க முடியும்? தவிர்க்க முடியாத இந்த உயர்வுகளை ஏற்றுக்கொண்டு அரசுக்கு முழு ஒத்துழைப்புத் தர வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழக முதல்வர் கூறிய காரணங்கள் மறுக்க முடியாதவை என்பது உண்மையே. அதே வேளையில் பேருந்து போக்குவரத்துத் துறையையும், ஆவின் பால் நிறுவனத்தையும், அதிகக் கடனில் மிதந்துக்கொண்டிருக்கும் மின் கழகத்தையும் காக்க (மின் கட்டணம் யூனிட்டிற்கு ரூ.1.50 உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது) இப்படி ஒரே அடியாக மக்களின் தலையில் தாங்க முடியாத அளவிற்கு சுமையை ஏற்ற வேண்டுமா? இதை குறைந்த அளவிற்குச் செய்ய முடியாதா? என்ற வினாக்களுக்கு பதில் தேடுவது அவசியமாகிறது.

தமிழக முதல்வராக பதவியேற்றப் பிறகு முதல் முறையாக டெல்லி சென்ற முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தபோது, தமிழக அரசிற்கு உள்ள கடன் சுமையில் இருந்த மீள மத்திய அரசிடம் ஒரு இலட்சம் கோடி கடன் அளிக்குமாறு வேண்டுகோள் வைத்தார். அதற்கு எந்த பதிலும் கூறாமல் மத்திய அரசு மெளனம் சாதிக்கிறது. இது தமிழக முதல்வர் குற்ற்ஞ்சாற்றியிருப்பதுபோல் ‘மாற்றாந்தாய் மன்ப்பான்மையுடன்தான் தமிழ்நாட்டை அடியோடு புறக்கணித்து வருகிறது’ என்பதையே உறுதியாகக் காட்டுகிறது. அதற்காக மத்திய அரசை அப்படியே விட்டுவிடுவதா?

மத்திய அரசுக்கு எங்கிருந்து வருவாய் வருகிறது? தமிழ்நாடு போன்ற ஒவ்வொரு மாநிலத்திலும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது விதிக்கப்படும் சுங்கத் தீர்வை, தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் உற்பத்தித் தீர்வை, தமிழ்நாட்டில் இயங்கிவரும் நிறுவனங்கள் செலுத்தும் பெரு நிறுவன இலாப வருவாய் வரி, தனி மனிதர்கள் பெரும் ஊதியத்தில் இருந்தும், வணிகம் மூலம் கிடைக்கும் இலாபத்தின் மீதான தனி நபர் வருமான வரி, சேவைகளின் மீதான வரி ஆகியவற்றின் மூலமும்தான் மத்திய அரசுக்கு வருவாய் கிட்டுகிறது. எனவே ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டிற்கு அளிக்கும் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு என்பது தமிழ்நாட்டில் இருந்து கிடைக்கும் வருவாயில் இருந்துதான் அளிக்கப்படுகிறது. அவ்வாறு இருக்கையில், தமிழ்நாட்டின் நிதி நிலை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில், அதில் இருந்து விடுபட தேவையான நிதியை கடனாக அளிக்க தமிழக அரசு கேட்கும்போது அதனை மத்திய அரசு மறுப்பது ஏன்? மத்திய அரசு என்ன முதலாளியா? அல்லது தமிழக அரசு அதன் கீழ் இயங்கும் கிளையா?

‘தமிழக அரசு கேட்பதற்கும் உரிமை உள்ளது, அதே நேரத்தில் மத்திய அரசு அதனை நிராகரிப்பதற்கும் அதிகாரம் உள்ளது’ என்கிற தோரணையில் இந்த மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான உறவு இருக்குமானால், அதற்கு பலிகடாவாக மக்கள் ஆவதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது?

தமிழக சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடரிலேயே மத்திய அரசின் மீது ‘மாற்றந்தாய் மனப்பான்மை’க் குற்றச்சாற்றை வீசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, அப்போது ஒரு விடயத்தை அழுத்தம் திருத்தமாகக் கூறினார். மத்திய அரசுக்கு சுங்கத் தீர்வை, உற்பத்தித் தீர்வை, வருமான வரி, சேவை வரி என்று பல வருவாய் தலைகள் உள்ளன. ஆனால் மாநில அரசுக்கு விற்பனை வரி வருவாய் தவிர வேறேதும் இல்லை என்று கூறினார். அப்போது சட்டப் பேரவைக்குள் இருந்த கட்சிகள் முதல்வரின் நிலைக்கு ஆதரவு தெரிவித்தனவே தவிர, வெளியில் அது ஒரு பெரும் அரசியல் பிரச்சனையாக உருவாகவில்லை. அப்படி உருவாகியிருந்தால் அது மத்திய - மாநில அரசுகள் தொடர்பான பொருளாதார உறவை சர்ச்சைக்குரியதாக்கியிருக்கும். சட்டப் பேரவைக்கு வெளியே முதல்வரும் அதனை பிரச்சனையாக்கவில்லை. அப்படி ஆகாததன் விளைவே இன்றைக்கு நிதிச் சுமை அனைத்தையும் கட்டண, விலையேற்றங்களாக மக்கள் மீதே இறக்கும் அநியாயத்தை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான பொறுப்பை தமிழக முதல்வர்தான் ஏற்க வேண்டும்.

ஒரு முறையல்ல, ஏற்கனவே இரண்டு முறை முதல்வராக இருந்து, 10 ஆண்டுக்காலம் அனுபவம் பெற்ற முதல்வர், இப்பிரச்சனையை - அசுர பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில் - கடுமையாக எழுப்பியிருக்க வேண்டும். அதைச் செய்யாமல், இரவோடு இரவாக ஏழை, எளிய, சராசரி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் அளவிற்கு கட்டணத்தையும் விலையையும் உயர்த்தியுள்ளது முதிர்ச்சியற்ற நடவடிக்கையாகும்.

இந்த நடவடிக்கை எந்த விதத்திலும் ஆளுமையை பிரதிபலிக்கவில்லை. மாறாக, அதிகாரிகள் கொடுத்த ஆலோசனையின் அடிப்படையில் செய்யப்பட்ட அவசர கதி நடவடிக்கையாகவே தெரிகிறது. ‘நட்டம் ஏற்படுகிறது, என்ன செய்வது, ஏற்று கட்டணத்தை’ என்று செயல்படுவது ஆட்சிமையா? திருவள்ளுவர் கூறியதுபோல் மக்களுக்கு நோகாத வண்ணம் வரி விதிப்பு இருக்க வேண்டும். இப்படி துடித்துப் போகும் அளவிற்கு உயர்த்திவிட்டு, மக்களை ஏற்கவும் சொல்வது முதிர்ச்சியல்ல.


இதில் குறிப்பிடத்தக்க ஒரு விடயம் என்னவெனில் இந்த கடன் சுமையில் இருந்து மீள தமிழக அரசு நிறுவனங்கள் கடன் கூட பெற முடியாத நிலையை இந்திய மைய வங்கி ஏற்படுத்தியிருக்கிறது. பொதுத் துறை வங்கிகளை தமிழக அரசு நிறுவனங்களுக்கு கடன் அளிக்க வேண்டாம் என்று கூறியிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. இது கவனிக்கத் தக்கது, கண்டிக்கத் தக்கது.

இப்போதும் காலம் தாழ்ந்துவிடவில்லை. மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்க வேண்டும். அதன் மூலம் மாநில அரசுகள் மக்கள் நலனை கருத்தில் கொண்டு, அத்யாவசிய சேவைகளுக்கு மானியம் வழங்கத் தேவைப்படும் நிதியாதாரத்தை பெறும் வகையில் பொருளாதார அதிகாரப் பகிர்வை வலியுறுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, உற்பத்தி வரி, சேவை வரி ஆகியவற்றை மாநில அரசுக்கு உரியதாக்க போராட்டத்தை தொடங்க வேண்டும்.


அப்படிப்பட்ட ஒரு போராட்டத்தை தொடங்க வேண்டிய கட்டாயம், முன்னெப்போதையும் விட இப்போது ஏற்பட்டுவிட்டது. அப்படிப்பட்ட போராட்டமே மாநிலங்களுக்கு சுயாட்சியையும், மத்தியில் வலிமையான கூட்டாட்சியையும் உருவாக்கும். தி.மு.க. நிறுவனரும், தமிழக முன்னாள் முதல்வருமான அறிஞர் அண்ணா கூறிய மாநில சுயாட்சியை வலியுறுத்தி போராட தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்வர வேண்டும். அது மட்டுமே இப்படிப்பட்ட நிலைமைகளை இப்போதும், எப்போதும் சமாளிப்பதற்கான வலிமையை மாநில அரசுகளுக்கு வழங்கும்.

தயாராவாரா தமிழக முதல்வர்?

நன்றி வெப்துனியா
avatar
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

View user profile http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum