உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

எங்கே பாரதி? அழியும் படைப்புகள்!

View previous topic View next topic Go down

எங்கே பாரதி? அழியும் படைப்புகள்!

Post by nandavanam on Mon Nov 07, 2011 3:59 am


பாரதியும் தாகூரும் மகாகவிஞர்கள். ஆனால், தாகூருக்குக் கிடைத்த பெருமையும் அங்கீகாரமும் பாரதிக்குக் கிடைக்காமற் போனதற்கு என்ன காரணம்? இன்றுவரை பாரதியின் மொத்த படைப்புகள் ஆங்கிலத்தில் முழுமையாக மொழிபெயர்க்கப்படவில்லை.

பாரதியின் படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தமிழகத்தைக் கடந்து இந்தியா முழுக்கவோ, உலகம் முழுக்கவோ இதுவரை செல்லவில்லை. தாகூருக்குக் கிடைத்த உயரம் அவர் உலக மொழிகளிலெல்லாம் மொழிபெயர்க்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டதுதான். பாரதிக்கு இதுவரை இப்பேறு கிடைக்கவில்லை.

தமிழின் பெருமையை உணர்ந்த பிறநாட்டு அறிஞர்கள்தான் தமிழை உலக நாடுகளுக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஜி.யு. போப் திருக்குறளையும் திருவாசகத்தையும் மொழிபெயர்த்தார்.
பைபிளுக்கு அடுத்து, காரல் மார்க்ஸின் மூலதனமும் மூன்றாவதாக திருக்குறளும் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டவை என்று கூறுவார்கள். அது உண்மையோ இல்லையோ, உலக மொழிகளுக்குக் கொண்டு செல்ல ஜி.யு. போப் என்ற கிறித்தவப் பாதிரியாரே காரணமாயிருந்தார்.

பெஸ்கி என்ற வீரமாமுனிவர் திருக்குறளின் அறத்துப்பாலையும் பொருள்பாலையும் லத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார். மாக்ஸ்முல்லர் இந்திய ஆய்வியலைத் தொடங்கிவைத்தார். ராபர்ட் கால்டுவெல் திருநெல்வேலி வரலாற்றையும் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தையும் ஆங்கிலத்தில் எழுதித் தமிழை உலக நாடுகளுக்குக் கொண்டு சென்றார்.

இவர்கள் தொடங்கி தமிழின் செழுமை மேல் ஈர்க்கப்பட்ட ஏராளமான ஐரோப்பியர்கள் தமிழ் இலக்கியத்தை ஆங்கிலத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். இம்முயற்சிகளெல்லாம் 19-ம் நூற்றாண்டு வரை மட்டுமே தீவிரமாக நடைபெற்றன.

ஏ.கே. ராமானுஜன் அரிய முயற்சி செய்து சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். நம் பழந்தமிழ் இலக்கியங்கள் சென்ற அளவுக்குக்கூட இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்கள் மொழிபெயர்க்கப்படவில்லை. தமிழின் முகம் பழைய முகமாய் பல நேரங்களில் வெற்றிடமாய் உள்ளது.

இன்று ஆங்கிலத்தின் ஊடாகவே சகல அங்கீகாரமும் அடையாளங்களும் சாத்தியமாகின்றன. வட்டார மொழியில் எழுதப்படும் மிகச்சிறந்த இலக்கியங்களும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும்போதே கவனிப்புக்கு உள்ளாகின்றன. உதாரணத்துக்கு இன்று உலகம் முழுவதும் அறியப்படுகின்ற ஆப்பிரிக்க இலக்கியத்தைக் கூறலாம்.ஆங்கிலம் தரும் அங்கீகாரம் பெரும் விவாதங்களையும் கிளப்புகிறது. சொந்த மண்ணைவிட்டு, பிழைப்புக்காக பலகாலமாய் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்கள் மண்ணைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள். அதற்குப் பேரளவு அங்கீகாரமும் பொருளாதாரப் பலனும் உடனடியாகக் கிடைக்கின்றன. ஆனால், சொந்த மண்ணிலேயே வாழ்ந்துகொண்டு, அந்த மண் தரும் ஏற்ற இறக்கங்களைத் தாங்கிக்கொண்டு, அந்த மண் பற்றி எழுதும் எழுத்தாளர்களுக்குக் கவனிப்பும் அங்கீகாரமும் கிடைப்பதில்லை. ஆர்.கே. நாராயணனின் மால்குடி நாள்களும், தி.ஜா.வின் காவிரி மண் பற்றிய பல நாவல்களுக்கும் இடையில் உள்ள அங்கீகார பேதம் இதற்கு ஓர் உதாரணம்.

சென்ற ஆண்டு தில்லியில் நடைபெற்ற காமன்வெல்த் எழுத்தாளர்களின் சந்திப்பில், விவாதத்தின் மையப் புள்ளியாக இக்கருத்தே அமைந்தது. வட்டார வாழ்வியலைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதும் எழுத்தாளர்கள் பெரும் புகழைச் சம்பாதிக்கின்றனர்.
குறிப்பாக சொந்த நாட்டில் வசிக்க நேராது; வெளிநாடுகளில் வாழும் ஆங்கிலத்தில் எழுதும் எழுத்தாளர்கள் எழுத்தின் மூலம் உலகச் சந்தையில் முன்னணி எழுத்தாளர்களாக அணிவகுக்கின்றனர்.

அதேநேரத்தில், தமிழ்நாட்டில் வாழும் ஒரு படைப்பாளி தன்னை நிலை நிறுத்திக்கொள்ள மூன்று விதமான போராட்டங்களில் சிக்கித் தவிக்க வேண்டியிருக்கிறது. ஒன்று - தன் படைப்பை மொழிபெயர்ப்பின் மூலமாக ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளுக்குக் கொண்டு செல்வது; இரண்டு - தன் நாட்டில் உள்ள பிறமொழி இலக்கியவாதிகளுடன் ஒப்பிட்டு தன் இடத்தை நிலைநாட்டுவது; மூன்று - உலகளாவிய எழுத்துச் சந்தையைச் சென்றடைவது.

காலத்தின் கோலத்தால் மேற்குறிப்பிட்ட மூன்றுமே ஒரு தமிழ் எழுத்தாளருக்கு அவர் வாழும் காலத்திலும் அவருக்குப் பின்னாலும் கிடைப்பதில்லை. பாரதி தொடங்கி இன்றைக்குள்ள எழுத்தாளர்கள் வரை இதுவே பலவீனம்.
இந்திய இலக்கியங்கள் குறித்து நடைபெறும் கலந்துரையாடல்களில் தமிழ் இலக்கியத்துக்குப் போதுமான அளவு முக்கியத்துவமோ, பங்களிப்போ இருப்பதில்லை. தமிழ் இலக்கியத்தின் சமகாலப் போக்குகள் குறித்து தெளிவான பார்வையோ, புரிதலோ, இந்தியாவில் உள்ள பிறமொழி இலக்கியகர்த்தாக்களுக்கும் வாசகர்களுக்கும் இல்லை. ஐம்பதாண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் எழுத்தாளர்களையே அவர்கள் அறிந்துள்ளனர்.

காமன்வெல்த் எழுத்தாளர் சந்திப்பில்கூட நா. பார்த்தசாரதி, அகிலன், கல்கி, கடைசியாக புதுமைப்பித்தன் ஆகியோரே முன்வைத்துப் பேசப்பட்டனர். தமிழ் மட்டும் இந்திய இலக்கியத்தில் தனித்தீவாக இயங்கக் காரணமென்ன?

கடந்த பத்தாண்டுகளில் எழுத வந்த மலையாள, கன்னட எழுத்தாளர்கள் பெயர்களை இந்தியா முழுக்க அறிந்துள்ளனர். ஆனால், தமிழ் எழுத்தாளர்கள் அறியப்படாதது ஏன்? என்னால் புரிந்துகொள்ளக் கூடிய காரணங்களில் சில: தமிழகம் தவிர்த்து அனைத்து மாநிலங்களிலும் மாநில மொழியோடு இந்தியும், ஆங்கிலமும் உள்ளன. மாநில மொழியில் வெளியாகும் படைப்புகள் உடனடியாக இந்திக்கு, ஆங்கிலத்துக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. இந்தியின் வழி மொத்த இந்தியாவையும் அப்படைப்பு சென்றடைகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் முண்டா இனப்போராட்டத்தைப் பற்றிய பாடலுடன் ஆந்திரத்தின் தெலங்கானாப் பகுதி படைப்பாளி தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டு வரவேற்க முடிகிறது. சமகால இலக்கியக் கோட்பாடுகளை அவர்கள் ஒருவருக்கொருவர் நன்றாக அறிந்து கொள்கின்றனர். இந்தி வழி நம் படைப்புகள் செல்வது அறவே இல்லை அல்லது மிக அரிது.

அடுத்து மொழியாக்கங்கள் பெரும்பாலும் கல்வி நிறுவனங்களையும் பிற அமைப்புகளையும் சார்ந்துள்ளன. பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் உள்ளவர்கள் இலக்கியப் போக்கின் சமகாலப் போக்குகளை அறிந்திராதவர்கள். பலருக்குக் கோபம் வந்தாலும் 90 சதவீதம் உண்மை இதுவே.
குறிப்பாக, ஆங்கிலப் பேராசிரியர்களுக்குத் தமிழின் இலக்கியப் போக்குகள் குறித்து கொஞ்சமும் தெரியவில்லை. ஆங்கில இலக்கியத்தின் ருசியை மட்டுமே சுவைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் பேராசிரியர்கள், தமிழ் இலக்கியத்தை ஆங்கில மொழிக்குக் கொண்டு சேர்க்கும் முயற்சிகளை மேற்கொள்வதேயில்லை.

இன்று தமிழில் நடைபெறும் அரிய முயற்சிகள் தனி நபர்களாலேயே முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. பிற மாநிலங்களில் நடைபெறும் இலக்கிய ஆய்வரங்குகள், கருத்தரங்குகளுக்குக் கல்வியாளர்கள்தான் அழைக்கப்படுகிறார்கள். கல்வியாளர்களுக்கும் இலக்கியவாதிகளுக்கும் ஏழாம் பொருத்தம்.
கன்னடத்தைப் போன்றோ, மலையாளத்தைப் போன்றோ தமிழில் இருவரும் ஒருசேரப் பயணித்ததேயில்லை. பல பல்கலைக்கழகங்களின் தமிழிலக்கிய பாடங்கள் சமகாலத்தவையாக இருப்பதுமில்லை.

நமக்கு நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்களின் எழுத்துகள் உடனுக்குடன் தமிழில் கிடைக்கின்றன. இந்திய எழுத்தாளர்களின் படைப்புகள் வெளியானவுடன் மொழிபெயர்க்கப்படுகின்றன. ஆனால், நம்முடைய புதுமைப்பித்தன், கு. அழகிரிசாமி, கி. ராஜநாராயணன், ஜெயகாந்தன், ராஜம் கிருஷ்ணன், ஆர். சூடாமணி, பிரபஞ்சன், பெருமாள்முருகன், ஜெயமோகன், எஸ். இராமகிருஷ்ணன், அழகிய பெரியவன், சு. வேணுகோபால், சு. தமிழ்ச்செல்வி, சு. வெங்கடேசன் உள்ளிட்ட படைப்பாளிகள் எப்பொழுது இந்தியத்தை, உலகத்தை அடைவது? தம்மின் அங்கீகாரத்துக்காகப் படைப்பாளியையே வழி தேடச் சொல்வது பெருத்த சமூக அவமானம்.
தமிழுக்கென்று தனி சாகித்ய அகாதெமி கொண்டு வர முடியாதது தமிழின் பலவீனம் அல்ல; தமிழர்களின் பலவீனம். தமிழ் சாகித்ய அகாதெமி அமையுமானால், தமிழ் படைப்பாளர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்பதோடு, தமிழ் மொழிபெயர்ப்புக்கென்று சிறப்பாகச் செயல்படும் நிறுவனமாக அந்நிறுவனத்தை அமைக்க முடியும்.

மத்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மையம் மைசூரிலிருந்து இடம்பெயர்ந்து சென்னையில் செயல்படத் தொடங்கியிருக்கிறது. தமிழாய்வுப் பணிகளைச் சிறப்பாகச் செய்யும் அந்நிறுவனம், தமிழின் அரிய நூல்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியிடுகிறது. பழந்தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்பை ஊக்குவிக்கும் இந்நிறுவனம் சமகால இலக்கிய மொழிபெயர்ப்புப் பணியிலும் முயற்சிகளை மேற்கொள்ளலாம். மொழிபெயர்ப்பில் ஈடுபடுகின்ற தனிநபர்களுக்கு நிதியுதவி தந்து ஊக்கப்படுத்தலாம்.
ஆந்திர மாநிலம் குப்பத்தில் செயல்படும் திராவிடப் பல்கலைக்கழகம், தென்னிந்திய மொழிகளில் மொழிபெயர்ப்புகளை அதிகப்படுத்தலாம். குறைந்தபட்சம் தென்னிந்திய மொழிகளின் இலக்கியப் பரிவர்த்தனைகளை மட்டுமாவது உறுதிசெய்ய முடியும். திராவிடமொழி சார்ந்து ஆய்வுகளை முன்னெடுத்துச் செல்ல முடியும்.

எல்லாவற்றுக்கும் மேலாக அரசு இப்பணியைச் செய்ய முன்வர வேண்டும். பள்ளிக்கல்வித்துறை, பாடநூல் நிறுவனம் போன்ற கல்விசார்ந்த பணிகளை முன்னெடுக்கும் அரசு, இலக்கியத்துக்காகவும், மொழிபெயர்ப்புக்காகவும் ஒரு தனித்துறையை உருவாக்கலாம். 1960-கள் தொடங்கி 1980-கள் வரை தமிழ்நாட்டு பாடநூல் நிறுவனம் தமிழிலக்கியம், வரலாறு சார்ந்து வெளியிட்டுள்ள 700-க்கும் அதிகமான நூல்கள் இன்றும் பாராட்டுக்குரியவை. தமிழ் இலக்கியத்துக்கு மிகப்பெரிய பங்களிப்பைச் செய்பவை.

அரசின் இலக்கியத்துறை அமையும்போது, படைப்பாளிகள், மொழிபெயர்ப்பாளர்களுக்கான ஆதரவும், நிதியுதவியும் பெருமளவில் கிடைக்கும் வாய்ப்புள்ளது. அரசு தன் மொழி வளர்ச்சிக்காகப் படைப்பாளிகள் பின்நிற்கும்போது கிடைக்கும் ஆன்ம பலம் மிகப் பெரியது.
அதியமான் தனக்குக் கிடைத்த அரிய நெல்லிக்கனியை ஒüவைக்குக் கொடுக்கவே முன் வந்தான். ஒüவையை மரணத்திலிருந்து காப்பது மட்டுமல்ல, அதியமானின் நோக்கம். மரணத்தை வெல்லும் பெரும் படைப்புகளை ஒüவை படைக்க வேண்டும் என்ற பேரவாதான் காரணம். படைப்பை வாழவைப்பதே படைப்பாளியை வாழவைப்பது. படைப்பைத் திசையெட்டும் உள்ள வாசகனுக்குக் கொண்டு செல்வதே படைப்பாளியை நித்தியத்துவம் பெற வைக்கும் வழியாகும். அதியமான் கை நெல்லிக்கனியை அரசு கைக்கொள்ளுமா?

இது தினமணி இதழில் அ.வெண்ணிலா அவர்கள் "திசையெட்டுமா தமிழ் படைப்பு?" என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை.. தமிழின் பாதுகாவலன் என்று கூறிக்கொண்டு தமிழை எவ்வளவு வளர்த்துள்ளோம் ???avatar
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

View user profile http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum