மார்க்கண்டேய சூப்பர் ஸ்டார்கள்!
Page 1 of 1
மார்க்கண்டேய சூப்பர் ஸ்டார்கள்!
ஐந்து மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதும் தேர்தல் ஆணையத்தின் கிடுக்கிப் பிடியால் பல கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. கட்சித் தலைமையிடமிருந்து வேட்பாளருக்கும் வேட்பாளரிடமிருந்து பொதுமக்களுக்கும் விநியோகிக்கப்படும் வழியில் பிடிபட்டவை இவை.
கடந்த வாரத்தில் பணம் பிடிபடும் வேகம் சற்றுக் குறைந்திருக்கிறது. எல்லாவற்றிலும் புதுமையைப் புகுத்தும் நமது அரசியல்வாதிகள், பணப் பட்டுவாடாவிலும் வேறு சாமர்த்தியமான முறையைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள் என்று நினைக்கிறேன். அதனால்தான் தேர்தல் ஆணையத்தின் கழுகுக் கண்களுக்குக்கூட பணம் அகப்படவில்லை.
நேர்மை, நீதி, நாணயம், கண்ணியம் என்று மேடைகளில் முழங்கும் அரசியல்வாதிகளில் பெரும்பாலானோர் நடைமுறையில் அப்படியிருப்பதில்லை என்பதுதான் பொதுவான உண்மை. எல்லாக் கட்சியிலும் பணப் பட்டுவாடாவுக்கு என்று ஒரு வழிமுறை உண்டு.
சட்டப் பேரவைத் தேர்தல் என்றால் பெரிய கட்சிகளைச் சேர்ந்த ஒவ்வொரு வேட்பாளருக்கும் தலா ரூ. 25 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை பணம் கிடைக்கும். இந்த வகையில், 400 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் அனைவரையும் கோடீஸ்வரர் பட்டியலில்தான் சேர்க்க வேண்டும்.
இப்படிப் பணப் பட்டுவாடா நடக்கும் நேரத்தில் ஆதாயம் அடையும் கும்பல் ஒவ்வொரு கட்சியிலும் உண்டு. ஏதாவது உள்ளடி வேலை செய்து கட்சி மேலிடத்திலிருந்து வரும் பணத்தை இவர்கள் பதுக்கிவிடுவார்கள். இது ஊரறிந்த விஷயம்.
தேர்தல் நேரத்தில்தான் இந்தக் கூத்து என்றால், தேர்தல் முடிந்த பிறகு, யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லையென்றால் ஆட்சியமைப்பதற்காக கைமாறும் பணத்தைக் கொண்டு இன்னொரு தேர்தலையே நடத்திவிட முடியும்.
உத்தரப் பிரதேசத்தில் முதல் கட்டத் தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கும் குறைவான காலமே இருக்கிறது. யார் வெற்றி பெறுவார்கள் என்பதைக் கணிக்க முடியாத அளவுக்கு, பல்வேறு விதமான ஊகங்கள் வெளியாகி இருக்கின்றன. பத்திரிகை நண்பர்கள் சில தகவல்களைத் தந்திருக்கிறார்கள். தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டதால், ஒவ்வொரு கட்சியினரும் தங்களுக்கென பிரத்யேகமாகவே கருத்துக் கணிப்புகளை நடத்திக் கொள்கிறார்கள்.
சமாஜவாதிக் கட்சிக்கும் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் தேர்தலில் கடும் போட்டி இருக்கும் என்பது கடந்த வாரக் கணிப்பு. முக்கியமான சில வாக்குத் திருப்பங்களும் இந்த வாரத்தில் நடந்திருக்கின்றன. அதன் விவரத்தை அட்டவணையில் தந்திருக்கிறேன்.
பகுஜன் சமாஜ், சமாஜவாதி கட்சிகள் காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளை விட பந்தயத்தில் மிக அதிக தூரத்தில் முந்தியிருக்கின்றன என்று பெரும்பாலான கருத்துக் கணிப்பு முடிவுகள் சொல்கின்றன.
இரு கட்சிகளுமே அமைப்பு ரீதியாகப் பலம் கொண்டவை என்பதால், கடைசி இரு வாரங்களில் இரு கட்சிகளும் தங்களது வாக்குகளை பெருக்குவதற்குக் கடுமையாகப் போராடும்.
பணப்பட்டுவாடாவைத் தடுத்து நிறுத்தியதாலும், பணத்தைப் பறித்துக் கொண்டதாலும் பகுஜன் சமாஜ் கட்சியினர் தளர்ந்துவிடவில்லை. தங்களுக்கு எதிராகத் தேர்தல் ஆணையம் செயல்படுவது போன்ற தோற்றம் ஏற்பட்டிருப்பதன் மூலம் மக்களின் அனுதாபத்தைச் சம்பாதிப்பதற்கு அவர்கள் முயற்சிக்கிறார்கள் என்பதே உண்மை.
உத்தரப் பிரதேசம் தவிர மற்ற 4 மாநிலங்களிலும் காங்கிரஸýக்கு ஆதரவான நிலையே இருக்கிறது. உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
கடந்த சட்டப் பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற்ற மம்தா பானர்ஜியும் ஜெயலலிதாவும் அடுத்ததாக நாடாளுமன்றத் தேர்தலை எதிர்பார்த்திருக்கிறார்கள். மம்தாவுக்கு தனது கட்சியை தேசியக் கட்சியாக்கிப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அதனால்தான் தனது கிளையை பிற மாநிலங்களிலும் வலுப்படுத்துவதற்குத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்.
ஜெயலலிதாவைப் பொருத்தவரை, 30 இடங்களைக் கைப்பற்றும் திறன் அவருக்கு உண்டு. அதன் பிறகு தேசிய அரசியலிலும் அவர் முக்கியப் பங்காற்றக்கூடும்.
இவர்கள் இருவர் மட்டுமல்ல, நிதீஷ் குமார், முலாயம் சிங், மாயாவதி, சரத் பவார் எனப் பலரும் தேசிய அரசியலின் மையப் புள்ளியாக மாறிவிடத் துடிப்பவர்கள்தான்.
பாகிஸ்தானில் மீண்டும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இந்த முறை ராணுவமும், நீதித்துறையும் அரசுக்கு எதிராகத் திரண்டிருக்கின்றன. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என்றாலும், வழக்கமாக இந்த மாதிரியான ஜனநாயக நெருக்கடிகளின்போது, அரசுக்கு ஆதரவாக இருக்கும் எதிர்க்கட்சிகள்கூட இந்த முறை பிரதமரையும் அதிபரையும் எதிர்ப்பதுதான் விசித்திரமாக இருக்கிறது.
எகிப்து, துனீஷியா, லிபியா, யேமன், சிரியா போன்ற நாடுகளில் நீண்ட காலமாகப் பதவியில் ஒட்டிக் கொண்டிருந்தவர்களுக்கு எதிராகக் கலகம் மூண்டது. வன்முறை வெடித்து பல்லாயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து இராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிரான கிளர்ச்ச்சி உருவானது. இதன் தொடர்ச்சிதான் பாகிஸ்தானில் இப்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடி.
பாகிஸ்தானில் அரசியல் நெருக்கடி ஏற்படுகிறதென்றால், உடனடியாக நாம் உஷாராகிவிட வேண்டும். ஏனென்றால், அந்நாட்டு ராணுவமும், ஐஎஸ்ஐ உளவு அமைப்பும் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றன. மேற்கு நாடுகளிடமும் அவற்றுக்கு நன்மதிப்பு இல்லை. அதனால், காஷ்மீர் வழியாக இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அவை தயங்காது.
காஷ்மீரில் பதுங்கிய நிலையில் இருக்கும் பயங்கரவாதிகளைப் பயன்படுத்தி, இந்தியாவுக்குள் தாக்குதல்களை நடத்துவதற்கும் திட்டமிடப்படலாம். அதிருப்தியில் இருக்கும் சில அமைப்புகள் இது போன்ற நடவடிக்கைகளுக்கு நிச்சயமாகத் துணை புரியும். அதனால் நமது அரசு தீவிரக் கண்காணிப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். ஆயுதப்படைச் சிறப்புச் சட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்கிற பேச்சே இப்போது கூடாது.
பெரும்பாலான இந்தியர்களின் வாழ்க்கையை சினிமாவும் கிரிக்கெட்டும்தான் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. பலருக்கு அரசியல்கூட இதேபோன்ற பொழுதுபோக்குதான். தேர்தல் வந்துவிட்டால், சினிமாவுக்கும் கிரிக்கெட்டுக்கும் மவுசு குறைந்துவிடும்.
சினிமாவிலும் கிரிக்கெட்டிலும் பார்க்கும் எல்லா அம்சங்களும் அரசியல் மேடைகளில் காணக் கிடைக்கிறது. சாகசம், வில்லத்தனம், காமெடி என எல்லாம் தேர்தல் நேரங்களில் விடுபட்டுப் போவதில்லை.
இதற்கு ஏற்றாற்போல, நமது கிரிக்கெட் அணி பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. அந்த அணி ஆடும் டெஸ்ட் போட்டியைப் பார்த்தவரின் நிலைமை அதைவிடப் பரிதாபம். நமது அணி ஆடிய கடந்த 7 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் கூட சிறப்பாக ஆடவில்லை. இங்கிலாந்துடன் ஆடியபோதே இப்படித் தோற்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. இதற்கெல்லாம் ஐபிஎல் போட்டிகளும் அதில் புரளும் பணமும்தான் முக்கியக் காரணம்.
ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கிடைக்கும் பணத்தைவிட ஐபிஎல் போட்டிகள் மூலம்தான் பிசிசிஐக்கு அதிகப் பணம் கொட்டுகிறது.
கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமல்லாது, டி.வி. வருணனையாளர்கள், பயிற்சியாளர்கள், சியர் லீடர்ஸ், மைதானத்தை சுத்தம் செய்பவர், வெளியில் பெட்டிக்கடை வைப்பவர்கள் என எல்லோருக்கும் பேதமில்லாமல் பணம் கிடைப்பது ஐபிஎல் போட்டிகளில்தான். அதனால்தான் கிரிக்கெட் விளையாட்டின் அமைப்பையே அசைத்துப் பார்க்க முயற்சிக்கிறார்கள். வருங்கால கிரிக்கெட் தங்களுக்கு வசதியாக இருக்க வேண்டும் என்கிற அவர்களது ஆசையே இப்போது டெஸ்ட் போட்டிகளுக்கு ஏற்பட்டிருக்கும் துன்பத்துக்கு அடிப்படைக் காரணம்.
ஆனால், இவர்கள் ஒன்றை மறந்துவிட்டார்கள். இப்படியே தோற்றுக் கொண்டே போனால், டெஸ்ட் போட்டிகள் மட்டுமல்ல, ஒருநாள் போட்டிகள், ஐபிஎல் போட்டிகள் போன்றவற்றைப் பார்ப்பதற்குக்கூட யாரும் இருக்க மாட்டார்கள். நமது சூப்பர் ஸ்டார்கள் மண்ணைக் கவ்வுவதைப் பார்ப்பதற்குப் பதிலாக, டி.வி.சீரியலைப் பார்த்து அழுவதே மேல் என்று எல்லோரும் சேனலை மாற்றிவிடுவார்கள்.
அணி தோற்பதைப் பற்றி பிரச்னையில்லை. விளையாட்டுப் போட்டியில் வெற்றியும் தோல்வியும் வருவது சகஜம்தான். தொடர்ந்து தோல்வி வருவதைக்கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், நமது வீரர்கள் ஏனோதானோவென்று, மைதானத்துக்குள் அலட்சியமாக வருவதும் போவதுமாக இருந்தார்கள். நமது தோனி கடனே என்று ஆடியதைப் பார்க்க முடிந்தது. மைதானத்துக்குள்ளேயே அவர் தூங்கி வழிந்தார். உடனடியாக கொஞ்சம் ஓய்வு தேவை என்பதை அவரது முகம் காட்டிக் கொடுத்தது.
நமது கிரிக்கெட் சூப்பர் ஸ்டார்களைக் கடுமையாக விமர்சிப்பதில் எனக்குத் துளியும் விருப்பமில்லை. கடந்த காலங்களில் பல்வேறு சாதனைகளைப் புரிந்து நமக்குப் பெருமை தேடித் தந்தவர்கள் அவர்கள். ஆனால், காலம் மாறியிருக்கிறது. வயதாகிவிட்டால் ஓய்வு பெற வேண்டியது அவசியம். ஆனால், எந்த சூப்பர் ஸ்டாரும் இதை உணர்ந்ததுபோலத் தெரியவில்லை. இது நமது வீரர்களுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே உள்ள பிரச்னை.
இளம் வயதில் பிரமாதமாக விளையாடிய பலர், எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதைக்கூட அறியாமல், பல வகையிலும் அவமானப்பட்டு, பிறகுதான் வேறு வழியில்லாமல் ஓய்வை அறிவிக்கின்றனர். நமது சூப்பர் ஸ்டார்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுவிடக்கூடாது.
கட்சி உத்தரப் பிரதேசம் உத்தரகண்ட் பஞ்சாப்
காங்கிரஸ் 75-80 32-35 58-63
பாஜக 35-40 20 - 22 06-08
பகுஜன் சமாஜ் 120-135 08-12
சமாஜவாதி 120-135 03-04 45-48 (அகாலி)
சுயேச்சைகள் 20-25 02-03 05-06
நன்றி தினமணி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum