அறுவைச் சிகிச்சை தேவை!
Page 1 of 1
அறுவைச் சிகிச்சை தேவை!
மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவரின் குறைந்தபட்ச விருப்பம், வாழுங்காலத்தில் எந்தவித நோய், நொடி இன்றி வாழ வேண்டும் என்பதாகத்தான் இருக்கும்.
"நேற்று வரைக்கும் நன்றாகத்தான் இருந்தார். என்னவானதோ தெரியவில்லை. திடீரென நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சாய்ந்துவிட்டார். "பாவம். இள வயதுதான். அதற்குள் போய்ச் சேர்ந்து விட்டார்.' இதுபோன்ற எத்தனையோ வேதனை மிகுந்த புலம்பல்கள், நம்மைச் சுற்றி அன்றாடம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
நாம் அடிக்கடி சந்திக்கும் நபர்களோ, நெருங்கிய உறவுகளோ திடீரென நம்மை விட்டுப் பிரிந்து விட்டால் அந்த இழப்பின் துயரம், சிறிதுகாலத்துக்கு நம்மை அலைக்கழித்து விட்டுச் செல்கிறது. பிரிவின் கொடுமை அத்தகையது.
தற்போதைய சமூகம் பொருளாதார நெருக்கடி மிகுந்த காலகட்டத்தில் உள்ள நிலையில், மருத்துவ வசதிகள் அதிகரித்துவிட்டாலும், அதற்கு ஈடாக மனிதர்களைத் தாக்கும் புதுப்புது விதமான நோய்களும் மருத்துவ உலகில் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
பொதுவாக, மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைகளின்போது சிறிதளவு அலட்சியமாக இருந்தாலும்,பெரிய தவறுக்கு வழிவகுத்துவிடும் என்பதை எந்தவொரு மருத்துவரும் அறியாதவர் அல்ல.
அப்படியிருக்கும்போது, ஆபத்தான நிலையில் கூட உயிருக்கு விலை நிர்ணயிக்கும் போக்கு வருந்தத்தக்கது.
தனியார் மருத்துவமனையோ, அரசு மருத்துவமனையோ.. பெரும்பாலும் சிகிச்சைக்காகச் செல்வோர், "அப்பாடா..!' என்ற மன நிறைவுடன் திரும்புகின்றனரா என்றால் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.
அண்மையில் நடைபெற்ற வேலை நிறுத்தத்தில் 3 ஆயிரம் மருத்துவமனைகள் பங்கேற்றதாகச் சொல்கிறார்கள்.
பாவம். வெளிநோயாளிகளின் ஒருநாள் வருமானம் போயிருக்கும். அல்லது
சாமர்த்தியமாக உள்நோயாளிகளின் தலையில் கட்டியிருப்பர்..!
பொதுவாக, தனியார் மருத்துவமனைகளுக்குள் நோயாளிகளுடன் நுழையும் உறவினர்களிடம், இயல்பாகவே ஒருவித பதற்றம் தொற்றிக் கொள்வதை காண முடிகிறது. காரணம். அந்த மருத்துவமனைகளின் மிதமிஞ்சிய பளபளப்போ..! மினுமினுப்போ அல்ல..!
எக்ஸ்-ரே, இசிஜி, ஸ்கேன் என நாலாவித சிகிச்சைகளுக்கும், பரிசோதனைகளுக்கும் அங்கு எந்தவிதக் கட்டுப்பாடும் இன்றி வசூலிக்கப்படும் (கிட்டத்தட்ட பறிக்கப்படும்) அநியாயக் கட்டணம்.
எவ்வளவு கேட்பார்களோ..? கையில் இருப்பது போதுமா..? யாரிடம் கடன் கேட்பது..? என்ற கலக்கத்திலேயே பலருக்கு பதற்றம் ஏற்பட்டு பி.பி. எகிறி விடுகிறது. நோய் குணமாகிறதோ.. இல்லையோ... எந்தவொரு நபராக இருந்தாலும், அதிருப்தியுடன்தான் வெளியேறுகின்றனர்.
நாங்கள் என்ன செய்வோம். விலைவாசி உயர்ந்துவிட்டது என்கிறார்கள்.
அடுத்தபடியாக மருத்துவர்கள்.
இந்தத் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படித்து மருத்துவர் ஆனவர்களைக் கூட விட்டு விடுவோம். அந்தக் கல்லூரிகளின் வாசலில், ஏழைகள் நிழலுக்குக் கூட ஒதுங்க முடியாது. ஆனால், அரசு மருத்துவக் கல்லூரிகளில் படித்து மருத்துவர் ஆனவர்களை என்ன செய்வது?
அங்கு ஒவ்வொரு மருத்துவரையும் உருவாக்க, அரசாங்கமே லட்சக்கணக்கில் செலவு செய்வதாகச் சொல்கின்றனர்.
ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.
பல ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் கூட படித்தவன், இறுதித் தேர்வில் மாநிலத்திலேயே சிறப்பிடம் பெற்று, மிகச்சிறந்த அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தான்.
"மருத்துவராகி ஏழைகளுக்கு சேவை புரிவதே தனது லட்சியம்' என பெரிதாக பத்திரிகைகளில் பேட்டியெல்லாம் கொடுத்தான்.
நாங்களெல்லாம் மகிழ்ந்து போனோம்.
ஆண்டுகளும் உருண்டோடி விட்டன.
தற்போது, எங்காவது குக்கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து கொண்டிருப்பான் என்ற எண்ணத்தோடு, அவனைப் பற்றி விசாரித்தால் கிடைத்த தகவல், நமது கணிப்பை தூள் தூளாக்கிவிட்டது.
துரை..! உயர்ந்த சம்பளத்தில் வெளிநாட்டில் வெள்ளைக்காரர்களுக்கு வைத்தியம் பார்க்கப் போய்விட்டாராம்..! நம்மூரைப் பற்றி, நினைத்துப் பார்க்கக் கூட அவனுக்கு நேரம் இருக்குமோ.. என்னவோ..
எப்படிப்பட்ட அர்ப்பணிப்புள்ள மருத்துவர்களை, நமது அரசு மருத்துவக் கல்லூரிகள் தயாரித்து மேலைநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருக்கின்றன பாருங்கள்..!
ஆனால், அரிதிலும் அரிதாக சேவையே லட்சியமாகக் கொண்டு, பணத்துக்கு ஆசைப்படாத சில மருத்துவர்களும் இங்கு இருக்கத்தான் செய்கின்றனர். "பரவாயில்லை..! இருப்பதைக் கொடுங்கள்..' என நோயாளிகளை நெகிழச் செய்துவிடும் அவர்கள், தொழில் செய்யும் வட்டாரங்களில் எல்லாம் புண்ணியவான்களாக போற்றப்படுகின்றனர். ஆனால், எத்தனை பேர் எனக் கணக்கெடுத்தால், விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்காவது இருப்பார்களா என்பது சந்தேகம்தான்.
எது எப்படியோ போகட்டும். எந்தவொரு கட்டுப்பாடும் இன்றி, தனியார் மருத்துவமனைகளில் ஏழை, நடுத்தர வர்க்கத்தினரைக் கசக்கிப் பிழியும் அடாவடிக் கட்டணங்களுக்குக் கடிவாளம் போடப்பட்டே ஆக வேண்டும்.
இந்த விஷயத்தில், அரசாங்கமே நல் மருத்துவராக இருந்து அறுவைச் சிகிச்சையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். நோயாளிகளுக்கல்ல..!
பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் மருத்துவமனைகளுக்கு..!
நன்றி தினமணி
Similar topics
» தவறான சிகிச்சை!
» தரமான சிகிச்சை எப்போது?
» மாநிலங்களிடையே தேவை ஒருமைப்பாடு!
» உழைப்புக்கேற்ற ஊதியம் தேவை!
» இப்போதும் இருக்கிறது காந்தியின் தேவை!
» தரமான சிகிச்சை எப்போது?
» மாநிலங்களிடையே தேவை ஒருமைப்பாடு!
» உழைப்புக்கேற்ற ஊதியம் தேவை!
» இப்போதும் இருக்கிறது காந்தியின் தேவை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum