தூணாக நின்ற தமிழன்துரும்பானதுஏன்?
Page 1 of 1
தூணாக நின்ற தமிழன்துரும்பானதுஏன்?
இந்திய மக்கள்தொகையில் ஏறத்தாழ பதினாறில் ஒரு பங்கு தமிழர்கள் வாழ்ந்தாலும் அவர்களுக்குரிய அங்கீகாரம் என்பது இந்திய அரசியலில் அளிக்கப்படவில்லை. இந்திய அரசும் சரி, அகில இந்திய அரசியல் கட்சிகளும் சரி தமிழர்களின் தலையாய பிரச்னைகளைக் குறித்துக் கொஞ்சமும் கவலைப்படுவதில்லை.
தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்கள் தமிழகத்திலிருந்து உணவுப்பொருள்கள், துணி, சிமெண்ட், மின்சாரம் போன்ற பலவற்றை எவ்விதமான தங்குதடையுமில்லாமல் பெற்றுக்கொள்கின்றன. இயற்கையிலேயே தண்ணீர்ப் பற்றாக்குறையான தமிழகத்துக்குத் தங்களிடம் மிகையாக உள்ள தண்ணீரைக்கூடத் தர அவர்களுக்கு மனமில்லை. பிடிவாதமாக மறுக்கின்றன.
இந்திய விடுதலைப் போரில் தமிழகம் செலுத்தியிருக்கிற பங்கு அளப்பரியதாகும். தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராகப் பணியாற்றிய மோகன்தாஸ் காந்தியின் அறப்போராட்டங்களுக்குத் துணையாக நின்று அவரை மகாத்மா காந்தியாக ஆக்கியவர்கள் தமிழர்கள். அவர் அழைப்பை ஏற்றுச் சிறை புகுந்தவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள். அவர்களில் ஒருத்தியான தில்லையாடி வள்ளியம்மை தனது உயிரைத் தியாகம் செய்து காந்தியடிகளின் அறப்போராட்டத்துக்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்தினார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜாஜி, சத்தியமூர்த்தி, காமராஜ் போன்ற பல தலைவர்களும் எண்ணற்ற தொண்டர்களும் காந்தியடிகளை உளமாறப் பின்பற்றி எண்ணற்ற தியாகங்களைச் செய்தார்கள். அண்ணலின் அழைப்பையேற்று அறப்போரில் தடியடிக்கு ஆளாகி உயிர்நீத்தான் திருப்பூர் குமரன்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிங்கப்பூரில் முதலாவது இந்திய சுதந்திர அரசை நிறுவி, இந்திய தேசிய ராணுவத்தை அமைத்தபோது அவருக்குத் தோள்கொடுத்துத் துணை நின்றவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள்.
முதலாவது சுதந்திர இந்திய அரசு அமைக்கப்பட்டபோது நிதியமைச்சர் பொறுப்பைத் தமிழரான ஆர்.கே.சண்முகம் செட்டியாரிடம் பிரதமர் நேரு ஒப்படைத்ததைத் தொடர்ந்து, முதலாவது கவர்னர் ஜெனரலாக ராஜாஜி, மத்திய அமைச்சர்களாக டி.டி.கிருஷ்ணமாச்சாரியார், ஓ.வி. அளகேசன், ஆர். வெங்கட்ராமன், சி. சுப்பிரமணியம் போன்ற பலர் பெரும் பொறுப்புகள் வகித்துச் சிறப்பாகத் தொண்டாற்றி தமிழகத்துக்குப் பெருமை ஈட்டிக்கொடுத்தார்கள். அவர்களுடன் நமக்குக் கருத்து மாறுபாடு இருக்கலாம். ஆனால், அவர்கள் ஒருபோதும் தமிழுக்கோ, தமிழினத்துக்கோ, தமிழகத்துக்கோ சிறுமை தேடித் தரவில்லை.
அகில இந்திய கட்சிகளின் தலைவர்களாகவும் பல தமிழர்கள் சிறந்து விளங்கினார்கள். காங்கிரஸ் தலைவராகக் காமராஜ், முஸ்லிம் லீக் தலைவராக "காயிதே மில்லத்' முகமது இஸ்மாயில், பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவராக உ. முத்துராமலிங்கத்தேவர் மற்றும் பி.கே. மூக்கையாத் தேவர் போன்ற பலர் பொறுப்பு வகித்து அந்த பதவிகளுக்குப் பெருமை தேடித் தந்தார்கள்.
இந்தியாவில் இப்படிப் பிற மாநிலத்தவர்களால் மதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்த தமிழர்களின் இன்றைய நிலையை எண்ணிப்பார்த்தால் பரிதாபப்படவேண்டி உள்ளது. தமிழகத்தை வாட்டி வதைத்து வரும் பல்வேறு உயிர்நாடியான பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு வழிதெரியாமல் தமிழன் திகைத்துக் கிடக்கிறான். அவன் தலையில் மிளகாய் அரைக்கும் வேலையை மற்ற மாநிலங்கள் செய்கின்றன.
30 ஆண்டு காலத்துக்கு மேலாக முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை தமிழகத்தின் 5 தென் மாவட்டங்களை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. உறுதியாக நிற்கும் முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என கேரள அரசியல்வாதிகள் இணைந்து நின்று பொய்மைக் கூப்பாட்டைக் கிளப்பி தமது நோக்கத்தில் வெற்றி பெற்றுவிட்டார்கள்.
மத்திய நீர்வள ஆணையம் கூறியபடி அணை 12.5 கோடி ரூபாய் செலவில் நாம் அணையை மேலும் வலுப்படுத்தினோம். முழுமையாக வலுப்படுத்தியபிறகு அணையின் நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என மத்திய நீர்வள ஆணையம் கூறியதைக் கேரளமும் ஏற்றுக்கொண்டது. ஆனால், அணையின் மராமத்து வேலைகள் முடிந்த பிறகும் இன்றுவரை நீர்மட்டத்தை உயர்த்த மறுக்கிறது.
வேறுவழியில்லாமல் உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் முறையிட்டது. அவர்களும் விசாரித்து இறுதியாக 2006-ம் ஆண்டில் 142 அடிக்கு நீர்மட்டத்தை உயர்த்திக்கொள்ளலாம் எனத் தீர்ப்பு அளித்தனர். ஆனால், அந்தத் தீர்ப்பையும் நம்மால் நிறைவேற்ற முடியவில்லை. கேரளத்தின் முடிவை மீறி மத்திய அரசும் எதுவும் செய்யவில்லை. அதற்குக் காரணம், மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கேரள அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், கேரள உயர் அதிகாரிகளும் இணைந்து நின்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமலாக்கவிடாமல் சாதிப்பதில் வெற்றிபெற்று விட்டார்கள்.
தமிழகத்துக்குத் தண்ணீர் கேரளத்துக்குப் பாதுகாப்பு - அதற்கு ஒரே வழி புதிய அணை கட்டுவது என்று கேரளம் கூறுகிறது. மத்தியில் பதவி வகிக்கும் கேரள அமைச்சர்கள், கேரள முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் குழு ஆகியோர் பிரதமரையும் மற்ற மூத்த அமைச்சர்களையும் சந்தித்து தங்கள் திட்டத்துக்கு ஆதரவு திரட்டியிருக்கிறார்கள்.
அதேவேளையில் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கிற தமிழக அமைச்சர்கள் நமது கடமை வாய்மூடி கிடப்பதே என்ற ரீதியில் மௌனம் சாதிக்கிறார்கள். தமிழ்நாட்டில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை குறித்து கேரள அரசியல்வாதிகளைக் கண்டிக்கும் வகையில் ஏதோ சொன்னார் என்பதற்காக அவர் மீது அவர்கள் பாய்ந்தார்கள். உடனே அவர் தான் கூறியவற்றையெல்லாம் திரும்பப் பெறுவதாகக் கூறிச் சரணாகதி அடைந்தார்.
இவ்வளவுக்கும் பிரதமருக்கு அடுத்த பதவியான உள்துறை அமைச்சர் பொறுப்பில் இருப்பவர் ப.சிதம்பரம். அவரையே மிரட்டிப் பணியவைக்கக் கேரள அரசியல்வாதிகளால் முடிகிறது.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரான ஏ.கே.அந்தோணி கடற்படையைச் சேர்ந்த நீர்மூழ்கி வீரர்களை அனுப்பி பெரியாறு அணையின் வலிமையைச் சோதனை புரிய ஆணை பிறப்பித்தார். பிரச்னை உச்ச நீதிமன்ற பரிசீலனையில் இருக்கும்போது அதில் தலையிட்டு தமிழகத்துக்கும் தெரிவிக்காமல் இத்தகைய அடாவடியில் அவர் ஈடுபட்டபோது அவரைக் கண்டிக்கக்கூட மத்திய அரசில் அங்கம் வகிக்கும் ஒரு தமிழக அமைச்சர்கூட முன்வரவில்லை.
அதைப்போல காவிரிப் பிரச்னையில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாகக் காவிரி நதிநீரில் நமக்குள்ள உரிமையைக் கர்நாடகம் தட்டிப் பறித்தது. பேச்சுவார்த்தை என்ற பெயரில் இழுத்தடித்துக் காலம்கடத்தி, அதற்கு நடுவே புதிய அணைகளைக் கட்டித் தண்ணீரைத் தடுத்து - வேறு வழியில்லாமல் நடுவர் மன்றம் அமைக்கும்படி மத்திய அரசிடம் வேண்டிக்கொண்டோம். ஆனால், மத்திய அரசு அதைச் செய்ய முன்வரவில்லை.
உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு உச்ச நீதிமன்றம் தலையிட்டு நடுவர் மன்றத்தை அமைக்கும்படி மத்திய அரசுக்கு ஆணை பிறப்பித்தது. நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பு ஒன்றை வழங்கி ஆண்டுதோறும் 205 டி.எம்.சி. நீரைத் தமிழகத்துக்கு அளிக்கவேண்டும் என ஆணையும் பிறப்பித்தது. நடுவர் மன்றத்தின் ஆணையை ஏற்பதற்கு கர்நாடகம் மறுத்துவிட்டது.
இடையில் நடுவர் மன்றத்தைச் செயல்படாமல் முடக்குவதற்கும் கர்நாடகம் சதி செய்தது. கர்நாடகத்தைச் சேர்ந்த தேவகௌடா மத்தியில் பிரதமர் பொறுப்பை ஏற்ற பிறகு ஏற்கெனவே அவர் முதலமைச்சராக இருந்தபோது நடுவர் மன்றத் தலைவர் மீது வழக்குத் தொடர்ந்த காரணத்தால் நடுவர் மன்றத் தலைவர் பதவி விலக நேர்ந்தது.
இதற்குக் காரணமான தேவகௌடாவை பிரதமராக்கியதில் தி.மு.க.வுக்குப் பெரும் பங்குண்டு. நடுவர் மன்றத்துக்கு மீண்டும் புதிய தலைவரை நியமிப்பதற்குக் காலம் கடத்தப்பட்டது. இறுதியாக ஒருவர் நியமிக்கப்பட்டு நடுவர் மன்றம் ஒரு இறுதித் தீர்ப்பையும் வழங்கிற்று. ஆனால், இடைக்காலத் தீர்ப்புக்கு ஏற்பட்ட கதியே இறுதித் தீர்ப்புக்கும் ஏற்பட்டது. இரண்டு தீர்ப்புகளையும் கர்நாடகம் மதிக்க மறுத்தது. அதன் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு இன்றுவரை முன்வரவில்லை. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் ஒரு தமிழக அமைச்சர்கூட அதற்காகக் கவலைப்படவில்லை.
ஈழத் தமிழர் பிரச்னையிலும் இதேபோக்கு தொடர்ந்தது. 2009-ம் ஆண்டில் விமான குண்டு வீச்சுக்கும், பீரங்கித் தாக்குதலுக்கும், சிங்கள ராணுவ வெறியாட்டத்துக்கும் ஆளாகி மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் தவித்தபோது அவர்களைக் காப்பாற்றத் தமிழகம் எவ்வளவோ போராடியும்கூட மத்திய அரச அலட்சியம் செய்தது. எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியதுபோல சிங்கள இனவெறி அரசின் கொலைவெறி ராணுவத்துக்கு ஆயுதங்களை அள்ளிக் கொடுத்து இந்திய அரசு துணைநின்றது.
இதன் விளைவாக, ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் பதைக்கப்பதைக்க படுகொலை செய்யப்பட்டார்கள். மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் முள்வேலி முகாமுக்குள்ளே அடைபட்டுப் போதுமான உணவு, தண்ணீர், மருந்து இல்லாமல் பெரும் துன்பத்துக்கு ஆளானார்கள். இந்திய அரசைத் தடுக்க வேண்டிய தமிழக தி.மு.க. அரசு இரட்டை வேடம் பூண்டது. அப்போது மன்மோகன் சிங்கின் அரசு தி.மு.க.வின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களின் தயவில்தான் பதவியில் இருந்தது என்பதுதான் அதைவிடக் கொடுமை.
இலங்கையில் உடனடியாகப் போர்நிறுத்தம் செய்யப்படாவிடில் எங்கள் ஆதரவைத் திரும்பப் பெற்றுக்கொள்வோம் என்று சொல்கிற துணிவு தி.மு.க.வுக்கு வரவில்லை, போகட்டும். குறைந்தபட்சம் இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மத்திய தி.மு.க. அமைச்சர்கள் பதவி விலகியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யக்கூட அவர்கள் துணியவில்லை. செய்ய வேண்டியதைச் செய்யாமல் சென்னைக் கடற்கரையில் சாகும்வரை உண்ணாவிரதம் என 3 மணி நேர நாடகம் ஒன்றை கருணாநிதி அரங்கேற்றினார்.
மன்னிக்க முடியாத வரலாற்றுப் பெருந்தவறை ஈழப் பிரச்னையில் தி.மு.க. செய்தது என்று சரித்திரம் அந்தக் கட்சியின் துரோகத்தைப் பதிவு செய்யும்.
ஈழத் தமிழர்களை மட்டுமா, தமிழக மீனவர்களை ஒரேயடியாகக் கைகழுவிவிட்டது மத்திய அரசு. 30 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழக மீனவர்களைச் சிங்களக் கடற்படை வேட்டையாடுகிறது. விரட்டி விரட்டிச் சுடுகிறது. இந்தியக் கடற்படையோ வேடிக்கை பார்க்கிறது. இதுவரை 500-க்கு மேற்பட்ட மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் அங்கஹீனமாகி இருக்கிறார்கள். பல கோடி ரூபாய் பெறுமான மீனவர்களின் படகுகள், வலைகள் சேதமாக்கப்பட்டு இருக்கின்றன. இத்தனைக்கும் மௌன சாட்சியாக மத்திய அரசு விளங்குகிறது.
உலகில் எந்த நாட்டிலும் கடலில் எல்லை தாண்டினார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் சுட்டுத்தள்ளுவதில்லை. உலகத்திலேயே அவ்வாறு செய்கிற ஒரே நாடு இலங்கைதான். தன்னுடைய குடிமக்கள் கொல்லப்படுவதை வேடிக்கை பார்க்கும் ஒரே நாடும் இந்தியாதான்.
நமது மீனவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பும் கடமையும் மத்திய அரசுக்கு உண்டு. தமிழ்நாட்டு மீனவர்களை இந்தியக் குடிமக்களாகவே அரசு கருதவில்லை என்று மத்திய அரசில் அங்கம் வகிக்கும் ஒரு தமிழக அமைச்சர்கூட எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
தமிழகத்தின் பல கனவுப் பெருந்திட்டங்கள் நீண்டகாலமாகவே கிடப்பில் கிடக்கின்றன. மேற்கு நதிநீரைக் கிழக்கே தமிழகத்துக்குத் திருப்புதல், கங்கை-காவிரி இணைப்புத் திட்டம், சேதுக்கால்வாய் திட்டம் போன்ற நிறைவேறாத திட்டங்கள் பல உண்டு. ஆனால், முன்னவை இரண்டும் பரிசீலனைக்கே எடுத்துக்கொள்ளப்படாத நிலையில் சேதுக்கால்வாய்த் திட்டம் எடுத்துக்கொள்ளப்பட்டு, கோலாகலமான தொடக்க விழா மதுரையில் நடத்தப்பட்டது.
சோனியா காந்தி, மன்மோகன் சிங், கருணாநிதி போன்றவர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். வேகமாக வேலைகளும் தொடங்கப்பட்டு 3,000 கோடி ரூபாய்க்கு மேல் கடலில் கொட்டப்பட்டது. ஆனால், இராமர் பாலம் என்ற பிரச்னையை முன்வைத்து இத்திட்டத்துக்குச் சவக்குழி தோண்டப்பட்டது. பல்லாண்டு காலமாக இந்தத் திட்டம் செயலற்றுக் கிடக்கிறது. நூறாண்டு காலத்துக்கு மேலான தமிழர்களின் கனவுத் திட்டமாகும் இது. இத்திட்டத்தின் எதிர்காலம் என்ன என்பது தெரியாமல் தமிழகம் இருளில் வைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் விதித்த தடையாணையை விலக்கி இத்திட்டத்தை தொடர்வதற்கான நடவடிக்கை எதனையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தமிழக அமைச்சர்களும் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை.
பிற தென்மாநிலங்கள் தங்களுக்குத் தேவையில்லை என்று ஒதுக்கித் தள்ளிய அணு மின் திட்டத்தைத் தமிழகத்தின் தலையில் கட்டியது மத்திய அரசு. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுக்கத் தமிழகத்துக்குக் கிடைத்தாலும் பரவாயில்லை. ஆனால், பிற தென்மாநிலங்களுக்கும் அதில் பங்களித்துவிட்டு எஞ்சியதுதான் தமிழகத்துக்குக் கிடைக்கும். ஆனால், அணு உலை வெடிக்குமானால் அதனால் வரும் அபாயம் முழுக்க முழுக்க தமிழகத்துக்கு மட்டுமே. இதுதான் மத்திய அரசு தமிழனுக்கு வழங்கியிருக்கும் நீதியாகும்.
இந்திய அரசியலில் தமிழகம் பகடைக்காய் ஆக்கப்பட்டுவிட்டது. ஒரு காலத்தில் மத்திய அரசில் தமிழகத்துக்கு இருந்த செல்வாக்கின் விளைவாக பெரும் கனரகத் திட்டங்கள் தமிழகத்தில் தொடங்கப்பட்டு தமிழகம் தொழில் வளத்தில் இந்தியாவில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது. ஆனால், இன்று தமிழகம் ஒவ்வொரு துறையிலும் பின்னோக்கிச் செல்கிறது.
இதுவரை இந்திய வரலாறு கண்டறியாத வகையில் அலைக்கற்றை ஊழல் போன்ற மாபெரும் ஊழலைச் செய்து ஒட்டுமொத்தத் தமிழகத்தைத் தலைகுனிய வைத்து திகார் சிறையாளர்களாக மாறிய சாதனைக்குரியவர்கள் தமிழர்கள் என்ற பெருமை மட்டுமே இப்போது தில்லியில் எஞ்சி நிற்கிறது.
இந்திய அரசியலை ஒரு காலகட்டத்தில் தூணாகத் தாங்கி நின்ற தமிழன் இப்போது சிறு துரும்பாகக் கருதப்பட்டு அலட்சியப்படுத்தப்படுகிறான். காரணம், தங்களது பதவி சுகத்துக்காக மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஒரு தமிழக அமைச்சர்கூடத் தமிழகத்தின் நலனுக்காகக் குரலெழுப்பத் தயாராக இல்லை. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு இருக்கும் வீரம், வேட்டி கட்டிய தமிழக அமைச்சர்களில் ஒருவருக்குக்கூட இல்லாததுதான் என்பதை நாம் சொல்ல வேண்டாம், இந்தியாவே கூறும். தூணாய் நின்ற தமிழன் துரும்பானதன் காரணம் இதுதான் என்று சரித்திரம் இவர்களை இகழும்!
நன்றி தினமணி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum