உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தவறான சிகிச்சை!

Go down

தவறான சிகிச்சை! Empty தவறான சிகிச்சை!

Post by nandavanam on Fri Jan 06, 2012 3:46 am

தவறான சிகிச்சை! Evening-Tamil-News-Paper_59567987919

தூத்துக்குடி டாக்டர் சேதுலட்சுமி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அரசு மருத்துவர்கள் அனைவரும் ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்தனர். சக மருத்துவர் படுகொலையில், அனைவரும் வேதனைப்படுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், ஒரு கிளீனிக்கில் நடந்த சம்பவத்தை ஏன் அரசு மருத்துவமனையோடு முடிச்சுப் போட வேண்டும்?

டாக்டர் சேதுலட்சுமி இஎஸ்ஐ மருத்துவமனையின் தலைமை மருத்துவர். ஆனால், அரசு மருத்துவரின் சிகிச்சையில் குறை கூறியோ அல்லது அரசு மருத்துவமனை வளாகத்திலோ இந்தக் கொலை நடந்திருக்கவில்லை. அவர் தனியாக நடத்தி வரும் சுபம் கிளீனிக்கில் நடந்த சம்பவம் இது.

ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு நடத்திய அறுவைச் சிகிச்சை; அதன்பின் நேர்ந்த சிக்கல்; அந்தப் பெண்ணின் மரணம்; "பணம் கொண்டு வந்து தரும்வரை மனைவியை பெரிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவில்லை' என்று கொலைக்குற்றவாளி சொல்லும் குற்றச்சாட்டு என அனைத்து விவகாரங்களும் சுபம் கிளீனிக்குடன் தொடர்புடையவை.

மேலும், மனைவியின் மரணத்துக்குக் காரணமான டாக்டரைக் கொலை செய்வதாக கொலையாளி மிரட்டிச் சென்றுள்ளார். அது குறித்து காவல்நிலையத்தில் டாக்டரே புகார் கொடுத்துள்ளார். கொலை மிரட்டல் விடுத்தவரை காவல்துறை கைது செய்திருக்கலாம் அல்லது சமரசம் பேசியிருக்கலாம். மருத்துவ உலகம் முதலில் கண்டிக்க வேண்டியது காவல்துறையைத்தான்.

இவை எல்லாவற்றையும் மறந்துவிட்டு, இறந்துபோன சேதுலட்சுமி இஎஸ்ஐ மருத்துவமனை தலைமை டாக்டர் என்பதை மட்டுமே முன்னிலைப்படுத்தி, அனைத்து அரசு மருத்துவமனைகளையும் ஸ்தம்பிக்கச் செய்வது முறையானதுதானா? நோயாளிகள் வெளியூர்களிலிருந்து வந்து சிகிச்சை பெற வழியில்லாமல் முதியோரும் சிறுவர்களும் பெண்களும் ஆங்காங்கே, காய்ச்சலாலும் வேறு நோயாலும் முடங்கிக் கிடந்த காட்சி பரிதாபகரமானது. தனியாக சுபம் கிளீனிக் நடத்திய அரசு மருத்துவரின் படுகொலையின் துயரத்தை அரசு மருத்துவமனைக்கு வரும் அனைத்து நோயாளிகளின் முதுகிலும் ஏற்றிவிடுவது நியாயமல்ல.

சக மருத்துவரின் படுகொலைக்கு வருந்தும் மருத்துவ உலகம், கொல்கத்தாவில் 90 பேர் இறந்த நாளில் கருப்பு பேட்ஜ் அணிந்து, நோயாளிகளின் மரணத்துக்காகத் தங்கள் வேதனையைத் தெரிவிக்கவில்லை. இந்த 90 பேர் மரணமும் வெறும் ரூ.3 லட்சத்தை மிச்சப்படுத்தப்போய் நேர்ந்த சம்பவம். கீழ் தளத்தில், ஸ்டோர் ரூமுக்கு எதிராக இரவில் இறக்கி வைத்த பஞ்சு மற்றும் மருந்து பெட்டிகளில் ஏற்பட்ட தீயை, ரூ.3 லட்சம் மருந்துகள் என்று கணக்குப் பார்க்காமல் தண்ணீரை ஊற்றியிருந்தால், 90 உயிர்கள் இறந்திருக்க நேர்ந்திருக்காது என்று ஆய்வறிக்கை தெளிவுபடுத்திய பின்னராகிலும், அந்த மருத்துவமனையை மருத்துவ உலகம் கண்டிக்கவில்லை. இந்த நேரத்தில் இவற்றையும் நினைக்கத்தான் வேண்டியிருக்கிறது.

ஒவ்வொரு மருத்துவமனையிலும் அவசர ஊர்திகள் மட்டுமல்ல, அமரர் ஊர்திகளும் இருக்கின்றன. அன்றாடம் யாரோ ஒருவர் இறக்கின்றார். "டாக்டரும் எவ்வளவோ முயற்சி செய்தார்; முடியவில்லை' என்றுதான் உறவினர்கள் இந்தச் சடலங்களை வீட்டுக்குக் கொண்டு செல்கிறார்கள். யாரும் கொலைவெறி கொள்வதில்லை. சில நேர்வுகளில் உறவினர்கள் ஆத்திரம் கொள்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் இறந்தவர்களின் மரணத்தைவிட, மருத்துவமனையில் உறவினர்கள் சந்திக்க நேர்ந்த சம்பவங்கள்தான் என்பதை மருத்துவ உலகம் ஏன் சிந்திக்கவில்லை?

புத்தாண்டு நள்ளிரவில் கோவை அரசு மருத்துவமனைக்கு, பைக்கில் விழுந்து காயமடைந்து வந்த இளைஞர் தனக்கு சிகிச்சை அளிக்கவில்லை என்பதற்காகப் பயிற்சி மருத்துவரை அறைந்த சம்பவமும், அதைத் தொடர்ந்து போராட்டமும் நடைபெற்றது. அந்த இளைஞர் குடித்திருந்தார் என்பதும், அவருக்கு சிகிச்சை அளிக்க இயலாது என்பதும் உண்மைதான். ஆனால், அறைகின்ற அளவுக்கு சுயநினைவுடன் இருக்கும் அவருக்கு முதலுதவி செய்திருந்தால் இந்தச் சம்பவம் நடந்திருக்குமா?

"அரை மணி நேரத்துக்கு முன்பாகக் கொண்டுவந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம்' என்று டாக்டர் சொல்வதை உறவினர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். நோயாளியைக் கொண்டு வந்து இரண்டு மணி நேரம் ஆனபிறகும் டாக்டரைக் காணாமல், தேடிப்பிடித்து அழைத்துவந்து சிகிச்சை அளித்த பிறகு நோயாளி இறந்தால், தாமதமான சிகிச்சைதான் மரணத்துக்குக் காரணம் என்று உறவினர்கள் ஆத்திரமடைந்தால், அதை மட்டும் ஏன் மருத்துவ உலகம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது? இத்தகைய தகராறுகள், வன்முறைகள் யாவற்றுக்கும் உயிரிழப்பு காரணம் அல்ல. உயிரிழந்த நோயாளிக்குக் காட்டப்பட்ட அலட்சியம்தான் உறவினர்களின் உணர்வுகளை தீக்கொழுந்தாக்குகிறது.

வேலூர் மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனையில், காலையில் கையெழுத்துப்போட்டுவிட்டு, பகல் 10 மணிக்கே தினமும் சென்னைக்கு சென்றுகொண்டிருந்த 4 டாக்டர்களை காட்பாடி ரயில்நிலையத்தில் பொதுமக்கள் அடித்து உதைத்து, ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைத்தார்களே அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அவர்களுக்கு எதிராக மருத்துவ உலகம் ஏன் போராட்டம் நடத்தவில்லை? இதே மருத்துவ உலகின் ஒற்றுமைதானே அவர்களைக் காப்பாற்றி வைத்திருக்கிறது.

மணப்பாறையில் தன் மகனைக் கொண்டு அறுவைச் சிகிச்சை செய்ததாக ஒரு டாக்டர் மீது புகார் எழுந்ததே, அது என்னவாயிற்று? சேலம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி மரணம் தொடர்பாக பெரும் ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு டாக்டர்கள் குழு விசாரித்ததே, அதன் முடிவு என்ன? எல்லாவற்றுக்கும் ஒரே விடைதான்: "பொய்யான புகார்'. "சாவுக்கு டாக்டரின் சிகிச்சை காரணமல்ல'.

தூத்துக்குடியில் டாக்டர் சேதுலட்சுமியால் சிகிச்சை அளிக்கப்பட்டு இறந்த பெண்மணி பிரசவத்தில் இறக்கவில்லை. ஆறுமாத கர்ப்பிணியான அவருக்கு திடீரென்று வலி ஏற்பட்டபோது, தொடர்ந்து சிகிச்சை அளித்துவந்த மருத்துவரான டாக்டர் சேதுலட்சுமியின் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே அளித்த சிகிச்சை பலனளிக்காமல் இறந்திருக்கிறார். உடனடியாக வேறு மருத்துவமனைக்கு அந்தப் பெண்மணி அனுப்பப்பட்டிருந்தால் ஒருவேளை பிழைத்திருக்கலாம். ஆனால், பணம் கட்டிவிட்டுத்தான் அபாயகரமான நிலையில் உள்ள நோயாளியை எடுத்துச் செல்ல அனுமதித்திருக்கிறது அந்த மருத்துவமனை என்றால், அதைக் கண்டிக்காமல் இருக்க முடியவில்லையே...

தனது மனைவியின் மரணத்துக்குக் காரணமான டாக்டரைக் கொலை செய்த கணவரை மன்னிக்க முடியாதுதான். அதைத் தீர்மானிக்க காவல்துறையும் நீதிமன்றமும் இருக்கின்றன. அதற்காக வேலை நிறுத்தம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான அரசு மருத்துவமனை நோயாளிகளை மருத்துவர்கள் சிகிச்சை அளிக்காமல் தண்டிப்பது என்ன நியாயம்? தங்களது சமுதாயப் பொறுப்பை மறந்துவிட்டு, பணத்துக்காக மட்டுமே இயங்கும் இதயமில்லாத இயந்திரங்களாக மருத்துவர்கள் மாறும்போது அதனால் ஏற்படும் எதிர்வினைகள் தான் இதுபோன்ற சம்பவங்கள். வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் மருத்துவர்கள் ஸ்டெதாஸ்கோப்பைத் தங்கள் இதயத்தில் வைத்துக் கேட்டால், ஒருவேளை அது உண்மை சொல்லும்.

நன்றி தினமணி

nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum