உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பாரதியின் "காக்காய்ப் பார்லிமெண்ட்'

Go down

பாரதியின் "காக்காய்ப் பார்லிமெண்ட்' Empty பாரதியின் "காக்காய்ப் பார்லிமெண்ட்'

Post by nandavanam on Thu Jan 05, 2012 3:49 am

பாரதியின் "காக்காய்ப் பார்லிமெண்ட்' 311

இரவில் வாங்கினோம் விடுதலை. இரவில் முடியும் என்று ஏங்கினோம். லோக்பால் விவாதமும் விதண்டா வாதமும் முடியவில்லை.

இத்தருணத்தில் நூறாண்டு கண்ட தில்லி பற்றி ஓர் சுவாரஸ்யமான செய்தியையும் சொல்லிவிடுவோம்.

பாண்டவர் வம்சத்தில் வந்த அநங்கபாலன், இந்திரப் பிரஸ்தம் ஆகிய தலைநகருக்கு அருகே புதியதோர் நகரம் எழுப்பினார். அவருக்குப் பெண் மக்கள் இருவர். தாம் உருவாக்கிய நகருக்கு அநங்கபாலவதி என்று பெயரிடக் கருதினாராம்.

ஆனால், அதற்கு அப்பெயர் நிலைக்கவில்லை. அதுவே தில்லி என்பது ஆயிற்று. ""டீலி'' என்ற சொல் மருவி வழக்கத்தில் தில்லியென்றாகிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. ""டீலி'' என்றால் "உறுதியில்லாத' என்று அர்த்தம் என்கிறார் பாரதி.

இந்தத் தகவலுக்கும் இன்று நூற்றாண்டு. 1910 ஜனவரி மாதம் தொடங்கிய "கர்மயோகி' மாதப் பத்திரிகையின் மூன்றாவது இதழில் பிருதிவிராஜன் சரித்திரம் ஆரம்பத்தில் இதைக் குறிப்பிடுகின்றார்.

இன்றைய இளைஞர்களுக்கு லால்-பால்-பால் தெரியுமா? லாலா லஜபதிராய், பால கங்காதர திலகர், விபின் சந்திர பாலர் என்றால் சும்மாவா? சென்ற நூற்றாண்டின் மாபெரும் தலைவர்கள் ஆயிற்றே. இன்றைக்கோ "வால்-பால்-பால்' எனும் முப்பால் பற்றியேனும் தெரிந்து இருக்க வேண்டும். வால்மார்ட், லோக்கல் பால், லோக்பால்.

மேனாட்டு "வால்' பிடிக்கும் நம் இந்திய இளவரசர்கள் பற்றிச் சொல்லத் தேவை இல்லை. பிறகென்ன, நாம் "எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள்' என்றால், நம் பிள்ளைகள் இளவரசர்கள்தாமே. அங்கு பொன் சங்கிலியால் தளையுண்டு, தங்க பிஸ்கட் தின்று வாழும் விசுவாசிகள். பெற்றோரைக்கூட "மனிதக் காட்சிச் சாலை'களில் ஏற்றிவிடும் மனிதாபிமேனிகள். இந்தச் சொல் என்னவோ உச்சரிக்கும்போதே "மனிதா பேமானி' என்றுதான் காதில் தேன் வந்து பாய்ச்சுகிறது.

""வாழ்வோம் இந்த நாட்டிலே'' என்ற தன்மானம் ஏன் இவர்களுக்கு இல்லையோ. எளிய செலவில் இங்கு அருந்திய தாய்ப்பால், கற்ற கல்வி, உண்ட உணவு, உதவிய உறவுகள் அனைத்தையும் அயல்நாட்டில் அடமானம் வைப்பானேன்?

காரணம், அந்த மண்ணின் சுபாவம் இந்திய மரபணுவிலும் மாயங்கள் செய்யுமோ என்னவோ? தாம் எதிர்பார்த்த முடிவு கிடைக்காதபோது, யார் என்றாலும் பழிவாங்கும் பரோபகாரிகள். இங்கு அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு முக்கியம்.

கி.பி. 1492-ம் ஆண்டு கோடையில் கிறிஸ்டோஃபர் கொலம்பஸ் எனும் துறவி 90 மாலுமிகளுடன் மூன்று சிறு கப்பல் பரிவாரங்களுடன் ஸ்பெயினை விட்டுக் கிளம்பினார். இந்தியாவில் பொன் தேடிப் புறப்பட்ட பயணம். மேற்கு நோக்கிச் சுருக்காகச் செல்லலாம் என்கிற ஓர் அவசரம். ஆனால், சென்று இறங்கிய இடம் - இன்றைய மெக்சிகோ. இந்தியா அல்ல.

ஏமாற்றத்தில் ஸ்பெயின் அரசுக்கு வந்ததே கோபம். வெட்டிப் பயணம் செய்ததாகக் கொலம்பஸ் மீது குற்றச்சாட்டு. அவருக்கு வழங்கப்பட்ட விருதுகள், பரிசுகளைப் பறித்துக் கொண்டது. பாவம், அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ் பட்டினியால் இறந்தார் என்பதுதான் உண்மை.

அவருக்குப் பிறகு அமெரிக்கோ வெஸ்புகி எனும் இத்தாலிய ஆய்வாளர், கொலம்பஸ் கண்டுபிடித்தது புதியதோர் கண்டம் என்று அறிவித்தார். இவரது பெயராலேயே இன்று அந்தக் கண்டம் "அமெரிக்கா' ஆயிற்று. பாருங்களேன், கண்டுபிடித்தவர் ஸ்பானியர். பெயரெடுத்தவர் இத்தாலியர்.

ஆனால், இன்று அமெரிக்காவில் பிறந்தவன் அமெரிக்க ஜாதி. அவனுக்கும் இங்கிலாந்தில் பிறந்தவனுக்கும் ""நடை, உடை, ஆசாரம், மதம், பாஷை எதிலும் வேற்றுமை கிடையாது. ஆனால், தேசத்தையொட்டி வேறு ஜாதி "நேஷன்'. இந்த தேச ஜாதிப் பிரிவு மேற்குப் பக்கத்தாரால் ஒரு தெய்வம்போல் ஆதரிக்கப்படுகிறது'' ("கிராமப் பள்ளிக்கூடங்கள்') என்பார் பாரதி.

அவரது "அமெரிக்காவுக்குப் போன சீன ராஜகுமாரன்' கதை படிக்கலாமே. பத்தே வரிகள்தான். இருந்தாலும் நல்ல காலம், நோபல் பரிசு வழங்கி சுவீடன் அவரை அவமானப்படுத்தவில்லை. கறுப்புப் பணக்கார நாடு ஆயிற்றே. அது சரி, உள்நாட்டில் விலைபோகாத பட்டிமன்ற எழுத்தாளர்கள், ஏன்தான் வெளிநாட்டில் துடைத்துப் போடுகிற விருதுக்கு ஏங்குகிறார்களோ? இங்கும் சாகித்ய விருது என்றால், நடுவர்களையும் சேர்த்துத் தள்ளுபடி விலைக்கு வாங்குகிற வைராக்கியம் கொண்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

கதைக்கு வருவோம். அமெரிக்கா சென்ற சீனத்து ராஜகுமாரனிடம், பிரபுவின் மனைவி நடத்திய ராஜாங்கப் பேச்சுவார்த்தையைக் கேளுங்கள். ""உங்களது சீன தேசத்தில் கலியாணமாகும் வரை மணப்பெண் தனது புருஷன் முகத்தைப் பார்ப்பது வழக்கமில்லையாமே! மெய்தானா?''. அதற்கு ராஜகுமாரன், ""உங்கள் தேசத்தில் சில பெண்கள் கலியாணமான பிறகு தனது புருஷன் முகத்தைப் பார்ப்பதில்லை என்று கேள்விப்படுகிறேன். அது உண்மைதானா?'' என்றானாம்.

ஏதாயினும் இன்று நாட்டில் பசும்பாலுக்கும் பயப்பட வேண்டி இருக்கிறது. நாம் அருந்தும் சீனப் போலிப் பாலும் மலிவான கோதுமைப் பொருளும் இதில் அடக்கம். சமீபத்தில் சீன, தாய்வான் பால் பொருள்கள் தின்று சில அமெரிக்க நாய்கள், பூனைகள் செத்தன. பிரச்னையை நியூசிலாந்தும் ஆராய்ந்தது. மெலாமின் என்னும் நச்சுப்பொருளே காரணம். இது வீட்டு உபகரண பிளாஸ்டிக் பொருள்களில் சேர்க்கப்படும் புரதம். இந்த வேதிமக் கலப்பால் சீனாவிலும் 13,000 குழந்தைகளுக்குச் சிறுநீரக அடைப்பாம். ஆதலால், இங்கு இறக்குமதி ஆகும் அன்னியப் பால் பொருள்களைத் தவிர்ப்போம்.

அது மட்டுமா, நம் மழலைகள் வாய் வைத்துக் கடித்து விளையாடும் பொம்மைகள், பாதங்களைக் கடிக்கும் செருப்புகள், நம் அந்தரங்கங்களுடன் ஊடாடும் செல்பேசிகள், ரகசியக் கணினித் தகவல்கள் என்று எங்கும் இலவச "வைரஸ்கள்' பரப்பும் படலமும் நடந்தேறி வருகிறதாம்.

ஏற்கெனவே பிரம்மபுத்ரா நதி நீரைத் தன் கமண்டலத்துக்குள் திருப்பி வருகிறது சீனா. வட எல்லைகளில் கண்ணுக்கு எட்டிய தொலைவில் ராணுவ முகாம்களும் தயார் ஆகிறதாம். இந்தியாவின் "தலை'ப்பாகம் வலிக்கிறதோ இல்லையோ, அங்கு விமானங்களில் வந்து குதித்து "சிகப்பு ஊசி' வேறு போடுகிறார்களாம்.

தெற்கே சேதுவை நாம் வேலை மெனக்கிட்டுக் குறுக்கு வெட்டிக்கொண்டு இருக்கிறோம். ஆனால், அவர்கள் புத்தம் சரணம் கச்சாமி என்று உறவுப் பாலத்தை மேடுறுத்தி, வீதி சமைக்கும் முயற்சியில் மூழ்கி ஆயிற்று. அந்தமான், இந்துமாக் கடல் எங்கும் வேவு தொடங்கி விட்டார்களாம். இப்போதே பாரத தேவியின் தோள்பட்டையைக் கழட்டி வெட்டி ஒட்டிப் படம்காட்டி வருகிறார்கள்.

நாம் இங்கு மகா பாரத சாதனைக்கான "ரத்ன' விருதுகளை ராக்கெட்டு வீரர்களுக்கு வழங்கியது போதுமாம். இனி, சிகரெட்டு வீரருக்கோ, கிரிக்கெட்டு வீரருக்கோ தரலாமா என்று விவாதித்துக் கொண்டு இருக்கிறோம். நாட்டில் மனிதகுல முன்னேற்றத்துக்குத் தங்களை அர்ப்பணித்து அருந்தொண்டாற்றும் அற்புத மகான்கள் அல்லவா?

மூன்றாவதான லோக்பால், இன்னொரு பாரதிக் கதையை நினைவுபடுத்தியது "காக்காய்ப் பார்லிமெண்ட்' என்பது தலைப்பு. "கா' என்றால் "சோறு வேண்டும்' என்று அர்த்தம். "காக்கா' என்றால் "என்னுடைய சோற்றில் நீ பங்குக்கு வராதே' என்று அர்த்தம்... "கஹாகா' என்றால் "சண்டை போடுவோம்' என்று அர்த்தம். "ஹாகா' என்றால் "உதைப்பேன்' என்று அர்த்தம்.

இப்படித் தொடங்கி "பக்கத்து வீட்டு மெத்தைச் சுவரின்மீது நாற்பது காக்கை உட்கார்ந்திருக்கிறது' என்று பன்மை விகுதிப் பிரயோகத்திலும் இலக்கணக்காரர்களையும் வம்புக்கு இழுக்கிறார் பாரதி. அது எப்படி அவரது "பார்லிமெண்டி'லும் அதே 40 என்று சோதிடம் கேட்கவா முடியும்?

அந்த நாற்பதில் ஒரு கிழக் காக்கை ராஜாவாம். அந்த ராஜா சொல்லுகிறது: "மனிதருக்குள் ராஜாக்களுக்கு உயர்ந்த சம்பளங்கள் கொடுக்கிறார்கள். கோடி ஏழைகளுக்கு அதாவது சாதாரணக் குடிகளுக்குள்ள சொத்தைவிட ராஜாவுக்கு அதிகச் சொத்து. போன மாசம் நான் பட்டணத்துக்குப் போயிருந்தேன். அங்கே ருசிய தேசத்துக் கொக்கு ஒன்று வந்திருந்தது. அங்கே சண்டை துமால படுகிறதாம்.

""ஜார் சக்ரவர்த்தி கக்ஷி ஒன்று. அவர் அயோக்கியர். அவரைத் தள்ளிவிட வேண்டுமென்பது இரண்டாவது கக்ஷி. இரண்டு கக்ஷியாரும் அயோக்கியர்களாதலால் இரண்டையும் தொலைத்துவிட வேண்டுமென்று மூன்றாவது கக்ஷி.

"மேற்படி மூன்று கக்ஷியாரும் திருடரென்று நாலாவது கக்ஷி. இந்த நாலு கக்ஷியாரையும் பொங்கலிட்டு விட்டுப் பிறகுதான் யேசு கிறிஸ்துநாதரைத் தொழவேண்டுமென்று ஐந்தாவது கக்ஷி. இப்படியே நூற்றிருபது கக்ஷிகள் அந்தத் தேசத்தில் இருக்கின்றனவாம்..' என்று கதை நீள்கிறது.

இறுதியில், ஒரு காகம், "அதோ அந்த மனுஷ்யனுக்கு நாம் பேசுகிற விஷயம் அர்த்தமாகிறது. ஆதலால் நாம் இங்கே பேசக்கூடாது. வேறிடத்துக்குப் போவோம்' என்றது. உடனே எல்லாக் காகங்களும் எழுந்து பறந்து போய்விட்டன.

"இது நிஜமாக நடந்த விஷயமில்லை. கற்பனைக் கதை' என்று தீர்க்க தரிசனத்துடன் முடிக்கிறார். என்ன, விஷயம் அர்த்தம் ஆகிறதா?

நன்றி தினமணி


nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum