உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அரசியலாக்கிவிடாதீர்கள்

Go down

அரசியலாக்கிவிடாதீர்கள் Empty அரசியலாக்கிவிடாதீர்கள்

Post by nandavanam on Tue Jan 03, 2012 3:02 am

அரசியலாக்கிவிடாதீர்கள் Puzhal%20thane
தானே' புயல் தாக்குதலை ஏறக்குறைய ஆழிப்பேரலைத் தாக்குதலுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் மனநிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் இருந்தார்கள்; பீதியடைந்தார்கள் என்கிறபோது, இதன் தீவிரம் என்னவாக இருந்திருக்கும் என்பதை யாராலும் எளிதில் உணர முடியும்.

ஆழிப்பேரலை திடீரென ஏற்பட்டது. எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கும் வழியே கிடையாது. மக்களும் இது பற்றிய எந்த எண்ணமும் இல்லாமல் இருந்தனர். ஆழிப்பேரலை வெறும் 5 நிமிடங்களில் நடந்து முடிந்துவிட்டது. மலையென அலை எழுந்து, ஊருக்கு மேலாகப் பரவிச் சென்று மீண்டும் உள்வாங்கி பழைய நிலைக்குத் திரும்ப வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே ஆனது..

ஆனால், "தானே' புயல் அப்படியாக நடந்துவிடவில்லை. அதன் வேகம் ஏற்கெனவே கணிக்கப்பட்டது. அது செல்லும் திசையும் தெரிந்ததுதான். கடலோரம் இருந்த அனைவரும் பலத்த மழையை மட்டுமே எதிர்பார்த்தார்கள். புயல் என்றால், வேகமாக காற்று வீசும் என்று கருதியிருந்த மக்களுக்கு, கட்டடங்களைக் காற்று தரைமட்டமாக்கும் என்பதும், படகுகளையும் அடித்து நொறுக்கும் என்பதும் சற்றும் எதிர்பாராதது.

மேலும், ஆழிப்பேரலை ஐந்து நிமிடத்தில் முடிந்ததைப்போலப் புயல் முடிந்துவிடவில்லை. மெல்லத் தொடங்கி, தனது வேகத்தை அதிகரித்துக்கொண்டே போய், நள்ளிரவுக்குப் பின் தன் ஊழி ராகத்தைப் பாடியிருக்கிறது.

""வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட- வெறும்/ வெளியில் இரத்தக் களியொடு பூதம் பாடப்-பாட்டின்/ அடிபடு பொருள் உன் அடிபடும் ஒலியிற்கூடக் களித்தாடும்....''ஊழிக் கூத்தை நிகழ்த்தியிருக்கிறது "தானே' புயல்.

புயலின் தீவிரம் அதிகாரிகளுக்குத் தெரிந்ததுதான். அவர்கள் இன்னும் முன்னதாகவே நடவடிக்கையில் இறங்கி மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்ல முற்பட்டிருந்தால், இந்த உயிரிழப்புகளைப் பாதிக்கும் மேலாகக் குறைத்திருக்க முடியும். நள்ளிரவில் பெரும்பாலான இடங்களில் மின்கம்பங்களும் டிரான்ஸ்பார்மர்களும் சாய்ந்து மின்தடை நிலவியதால், மக்கள் வெளியேறப் பட்ட சிரமங்களும், பாதுகாப்பான இடத்தைச் சென்றடைவதில் ஏற்பட்ட தாமதமும், மரணத்தின் எண்ணிக்கையை கூடுதலாக்கிவிட்டன. நெற்பயிர்களும் பல ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் சேதமடைந்துள்ளன.

புயலின் வேகம் மணிக்கு 120 கி.மீ-க்கும் அதிகமாக இருக்கும்போது, ஒரு கனரக வாகனத்தையே தூக்கி வீசும் என்கிறபோது, ஏழைகளின் சாதாரண வீடுகள் எம்மாத்திரம்? கரையோரம் இருந்த வீடுகள் அனைத்தும் சேதமடைந்துள்ளதையும், தென்னந்தோப்புகளுக்குள் இருந்த வீடுகள் மட்டுமே தப்பிப் பிழைத்திருப்பதையும் காண்கின்றபோது, கடலோரத்தில் வாழ்பவர்கள் அனைவரும் அலைவாய்க் கரையிலிருந்து குறைந்தது 500 மீட்டர் தூரத்தில் வீடு கட்டுவதே பாதுகாப்பானது என்பதையும், புன்னைமரக்காடுகள், தென்னந்தோப்புகள் இருந்தால் புயல் மட்டுமன்றி ஆழிப்பேரலையின் தீவிரத்தையும் 90 விழுக்காடு குறைத்துவிட முடியும் என்பதையும் இயற்கை மீண்டும் நமக்குப் புகட்டி இருக்கின்றது.

நள்ளிரவுக்குப் பிறகு புயலின் வேகம் அதிகரிக்கத் தொடங்கி, கூரைகள் பிய்த்தெறியப்படும்போதுதான் கடலூர் மாவட்டத்திலும் புதுச்சேரியிலும் கடலோரம் வாழ்ந்த மக்களுக்கும் மீனவர்களுக்கும் "தானே' புயலின் உண்மையான முகம் தெரிந்தது. உடைமைகளைப் பற்றிக் கவலைப்படாமல் மனைவி மக்களுடன் பாதுகாப்பான இடம் தேடி ஓடினர். அப்படியும்கூடத் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

இப்போது இந்த மக்களுக்கு உடனடித் தேவை- உணவும் குடிநீரும். ஆழிப்பேரலை ஏற்பட்டபோது தமிழக மக்களிடம் ஏற்பட்ட உணர்வு, ஏனோ "தானே' புயலின்போது ஏற்படவில்லை என்றே தோன்றுகிறது. கடலூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் குடிநீர் வழங்கப் போதுமான டேங்கர் லாரிகள் இல்லை. நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கத்திலிருந்து பத்துக்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் கடலூருக்குத் திருப்பப்பட்டாலும் அவை போதா, இன்னும் நிறைய டேங்கர் லாரிகள் வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் கேட்கும் நிலை இருக்கிறது.

புயல் ஏற்படுத்தியிருக்கும் பேரிழப்புகள் குறித்து தமிழகம் முழுமையாக உணராமல் இருக்கின்றதா? அல்லது ஒரு புதுச்சேரி மாநிலம் மற்றும் கடலூர் மாவட்டத்துக்கு மட்டுமே உரிய பிரச்னை என்று வாளாவிருக்கிறதா? எதுவாகயிருந்தாலும் அது சரியல்ல.

தமிழக முதல்வர் ஏற்கெனவே போர்க்கால நடவடிக்கையாக ரூ.150 கோடியை நிவாரணப் பணிகளுக்காக ஒதுக்கியுள்ளார். இருப்பினும் "தானே' புயல் ஏற்படுத்தியுள்ள சேதங்களை மதிப்பிடும்போது, ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக இருக்கலாம் எனப்படுகிறது. இந்த நிதிச் சுமையை தமிழக அரசு மட்டுமே ஈடு செய்ய முடியாது. தமிழக அரசு கேட்காமலேயே மத்திய அரசு தானாக முன்வந்து பெரும் தொகையை நிவாரணப் பணிகளுக்காகத் தந்து உதவ வேண்டும். குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ள இரங்கல் செய்தி மட்டுமே போதாது.

இத்தனைக்கும் பாதிக்கப்பட்ட கடலூர் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். மத்திய உள்துறை அமைச்சரின் ஆதரவாளர். தனது தொகுதியின் நன்மையைக் கருதி அவர் இந்தப் பிரச்னையில் தமிழக அரசுடன் இணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்பது நமது வேண்டுகோள்.

புதுச்சேரி அரசும் தன் பகுதியில் ரூ.2,000 கோடி அளவுக்குச் சேதம் இருக்கலாம் என்று கூறியுள்ளது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிச் சென்றவர், காங்கிரஸýக்கு போட்டி என்கிற கருத்து மாறுபாடுகளைக் கருதிப் பார்க்காமல், புதுச்சேரி அரசுக்கும் அதிக நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்.

உடனடியாக மத்திய அரசு உதவிக் கரம் நீட்ட வேண்டும். திட்ட ஒதுக்கீட்டில், வேண்டிய மாநிலத்துக்கு அதிக நிதி ஒதுக்குவது, சிறப்பு நிதி ஒதுக்குவது போன்று நிவாரணப் பணிகளிலும் கூட்டணி அரசியலைப் புகுத்தாமல் செயல்பட வேண்டும் என்பதுதான் பிரதமருக்கு நமது கோரிக்கை!

நன்றி தினமணிnandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum