உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பெயருக்கு ஒரு சட்டம்!

Go down

பெயருக்கு ஒரு சட்டம்! Empty பெயருக்கு ஒரு சட்டம்!

Post by nandavanam on Fri Dec 30, 2011 3:26 am

பெயருக்கு ஒரு சட்டம்! Indian%20black%20money%5B7%5D
கறுப்புப் பணத்தை "வெள்ளை'ப் பணமாக மாற்றும் பணச் சலவை நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த பணச் சலவைத் தடுப்புச் சட்டம் - 2011 மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. ஊழலை ஒழிக்க மிக முக்கியமான சட்டமாகக் கருதப்படும் இந்த மசோதா விவாதம் ஏதுமின்றி, கும்பலோடு கும்பலாக மக்களவையில் ஏற்கப்பட்டுவிட்டது.

நியாயமாகப் பார்த்தால், சுமார் 11 மணி நேரம் விவாதிக்கப்பட்ட லோக்பால் மசோதாவுக்கு இணையாக இந்தப் பணச் சலவைத் தடுப்பு மசோதா குறித்து எதிர்க்கட்சிகள் அதிக நேரம் விவாதித்திருக்க வேண்டும். ஏனென்றால், பெரிய இடத்து ஊழலை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும் என்றால், அதற்கு பணச்சலவைத் தடுப்பு மசோதா ஓட்டைகள் இல்லாததாகவும், தவறிழைப்பவர்கள் தப்பித்துவிட முடியாத கிடுக்கிப்பிடிகளுடன் கூடியதாகவும் இருந்தாக வேண்டும்.

அமைச்சர்களும், அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் பன்னாட்டு நிறுவனங்களிடம் பெறும் பல ஆயிரம் கோடி கமிஷன் தொகையை வெளிநாட்டில் பெற்றுக்கொண்டு, இந்தியாவுக்கு ஏதாவது தொழிலைக் காட்டித் தங்களது பினாமிகள் மூலம் கொண்டு வந்து விடுகிறார்கள். இதைத் தடுத்தாக வேண்டுமானால் பணச்சலவைத் தடுப்பு மசோதா வலுவாக இருந்தாக வேண்டும்.

லோக்பால், ஊழல் செய்தவர்களைத் தண்டிக்கும். ஆனால், பணச்சலவைத் தடுப்பு சட்ட மசோதாவோ ஊழலுக்கான களமே இல்லாமல் செய்துவிடும். இத்தனை முக்கியமான மசோதா விவாதம் இல்லாமலேயே நிறைவேற்றப்பட்டுவிட்டது எனும்போது நமது தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் எந்த அளவுக்கு இதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

பணச்சலவைத் தடுப்புச் சட்டம் - 2002-ல் இருந்த பல விதிமுறைகள் பல காலங்களில் மாற்றப்பட்டாலும், தற்போதைய மசோதாவில் முக்கியமான மாற்றம் இரண்டுதான். பணச் சலவைக் குற்றச்சாட்டு வழக்கில் ஒருவரைக் குற்றவாளியாக நிரூபித்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்படாத நிலையிலும்கூட, அந்தச் சொத்து அல்லது நிறுவனம் அல்லது ரொக்கம் எதுவான போதிலும் அது பணச் சலவையால் கிடைத்த முறைகேடான பணத்தால் உண்டானது என்று தெரிந்தால் அதை அரசு அதிகாரிகள் பறிமுதல் செய்யும் அதிகாரத்தை இந்தச் சட்ட மசோதா அளிக்கின்றது.

வைரம், தங்கநகைகள், பங்குகள், காப்பீடு, சொத்துகள் தொடர்பான தொழில்களும் இந்த பணச்சலவைச் சட்டத்தின் விசாரணைக்கு உட்பட்டவையாக மாறியிருப்பதும் இந்த மசோதாவின் மற்றொரு நல்ல அம்சம். ஆனால், இவை யாவும் கறுப்புப் பணத்தைத் தடுத்துவிடப் போதுமானது என்று தோன்றவில்லை.

கணக்குக் காட்டப்படாமல் கறுப்புப் பணம் நாட்டைவிட்டு வெளியே கொண்டு செல்லப்படுவதையும், உள்ளே திருட்டுத்தனமாக முதலீடு என்ற பெயரில் கொண்டுவருவதையும் கண்காணிக்கும் நிதி முறைகேடு தடுப்புப் படையில் (ஃபைனான்ஸியல் ஆக்ஷன் டாஸ்க் ஃபோர்ஸ்) இந்தியா தன்னை 2010-ல் தான் இணைத்துக்கொண்டது.

இருப்பினும், 2000 முதல் 2009-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், இந்தியாவிலிருந்து ரூ.6 லட்சம் கோடி வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளது என குளோபல் ஃபைனான்ஸியல் இன்டகிரிட்டி என்கின்ற உலக நிதி முறைகேடுகளை விசாரிக்கும் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமல்ல, இறக்குமதி, ஏற்றுமதிப் பொருள்களுக்கு அதன் உண்மையான விலையைவிடக் குறைத்து அல்லது கூட்டிக் காட்டும் பொருந்தாவிலை நிர்ணயம் மூலமாக, இந்தியாவுக்குள் முறைகேடாகக் கொண்டுவரப்பட்டுள்ள கறுப்புப் பணத்தின் அளவு ரூ.5.8 லட்சம் கோடி என்றும் இந்த நிறுவனம் சொல்கின்றது.

இந்த நிறுவனம் நிச்சயமாக இதற்கான ஆதாரங்கள் இல்லாமல் வெறும் குருட்டுக் கணக்காக இதையெல்லாம் சொல்லவில்லை என்பது நிச்சயம். இவ்வாறு முறைகேடாக கறுப்புப் பணம் வெளியேறவும், உள்ளே வரவும் செய்த தொழில்கள், தொழிலதிபர்கள் யார், எவர் என்பதை அந்த நிறுவனம் கண்டறியும் என்றால், ஏன் இந்திய அரசால் கண்டறிய முடியாது. நிச்சயமாக முடியும். இருப்பினும், ஆட்சியில் இருப்பவர்களுக்கே இந்த முறைகேடுகளில் தொடர்பிருக்கிறது என்பதால் இவர்கள் யார் மீதும் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்கள் என்று தோன்றுகிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில், வெளிநாட்டில் உள்ள கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியபோது, அதற்கான சட்டவிதிமுறைகள் இல்லை என்றும், அவ்வாறு நாம் செய்வதை அந்த நாடுகள் ஏற்றுக்கொள்ளாது என்பதுடன் நமக்கு இந்தியர்கள் சேமித்து வைத்துள்ள கறுப்புப் பணம் குறித்த தகவல்களை வெளிநாட்டு அரசாங்கங்கள் நம்முடன் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள் என்றும் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

தற்போது மக்களவையில் நிறைவேறியுள்ள இந்த மசோதாவின்படி, வெளிநாடுகளில் ஓர் இந்தியர் தனது கறுப்புப் பணத்தால் ஒரு சொத்து வாங்கியிருந்தாலோ அல்லது ஒரு நிறுவனத்தை வாங்கியிருந்தாலோ அதையும்கூட, அந்த நாட்டின் உதவியுடன் பறிமுதல் செய்ய அல்லது முடக்கி வைக்கும் அதிகாரத்தை தொடர்புடைய அதிகாரிகளுக்கு அளிக்கின்றது.

ஆனால், கறுப்புப் பணத்தை வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லவும், மீண்டும் கறுப்புப் பணத்தை அன்னிய நேரடிய முதலீடாக இந்தியாவுக்குள் கொண்டுவரவும் வாய்ப்புள்ளவர்கள் ஆட்சிபீடத்தின் மேல்தட்டில் இருப்பவர்கள்தான். இவர்கள் மீது அதிகாரிகள் என்ன நடவடிக்கையை எடுத்துவிடப் போகிறார்கள்?

லோக்பாலை எப்படி வலுவானதாக இருக்க வேண்டும் என்கிறார்களோ அதேபோன்று, பணச் சலவைத் தடுப்புச் சட்டமும் வலுவாக இருக்க வேண்டாமா? இதை அரசியல் கட்சிகள் விவாதித்திருக்க வேண்டாமா? நமது அரசியல்வாதிகள் விட்டில் பூச்சிகளா என்ன, வலியப்போய் மாட்டிக்கொள்ள! கண்துடைப்புக்கு மசோதா நிறைவேற்றுவதில் அவர்கள் காட்டும் முனைப்பை, வலுவான சட்டம் இயற்றுவதில் எந்த அரசியல் கட்சியும் காட்டுவதில்லை. இது லோக்பாலுக்கு மட்டுமல்ல, பணச்சலவைத் தடுப்புச் சட்டத்துக்கும் பொருந்தும்.


நன்றி தினமணி


nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum