சிறு முதலீடுகள் - தேவை புதிய பார்வை
Page 1 of 1
சிறு முதலீடுகள் - தேவை புதிய பார்வை
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி, அரசு சேமிப்புப் பத்திரங்கள் மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்புப் பத்திரங்கள் உள்ளிட்ட அரசு சார்ந்த சிறுசேமிப்புத் திட்டங்கள், நம் நாட்டில், பொதுமக்களின், குறிப்பாக சிறு முதலீட்டாளர்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தவை. அதேநேரம், வேடிக்கை என்னவெனில், இவற்றுக்கான விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் நூறு ஆண்டுகள் பழமையானவை என்பதே!
இந்நிலையில், வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மற்றும் பங்குச்சந்தை தொடர்பான சட்டங்களை மறுபரிசீலனை செய்து புதிய பரிந்துரை வழங்குவதற்காக, மத்திய அரசு 2011-ம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு வாரியம் அமைத்தது. நீதியரசர் பி.என். ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான, நிதித்துறை சட்டங்கள் சீர்திருத்த வாரியம் என்பதே அது. இரண்டு ஆண்டுகளில் வாரியம் தனது பரிந்துரைகளை வழங்க உள்ளது.
அதேநேரம், ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பு மற்றும் அரசு சார்ந்த சிறுசேமிப்புத் திட்டங்களின் முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு, இவை தொடர்பான சட்டங்களையும் மறுபரிசீலனை செய்து, தேவையான பரிந்துரைகளை வழங்குமாறு, மேற்கூறிய வாரியத்தை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இது உண்மையிலேயே வரவேற்கத்தக்க ஏற்பாடு.
இதற்கிடையே, அஞ்சல் அலுவலக டெபாசிட்கள் மற்றும் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் 2011 டிசம்பர் முதல் தேதியிலிருந்து கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பாரத ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னர் ஷியாமளா கோபிநாத் தலைமையில் முன்னதாக அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளுக்கு இணங்க மேற்கூறிய வட்டி அதிகரிப்பு நிகழ்ந்துள்ளது. இது சிறு சேமிப்பாளர்களுக்குத் தித்திக்கும் செய்தி என்றால் மிகை அல்ல.
அஞ்சல் அலுவலகச் சேமிப்புக் கணக்கில் வட்டி 3.5 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
மிகவும் பிரபலமான பொது வருங்கால வைப்புநிதி வட்டி 8 சதவிகிதத்திலிருந்து 8.60 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதில் ஓராண்டில் அதிகபட்சமாக செய்யக்கூடிய தொகை ரூ. 70,000-லிருந்து ரூபாய் ஒரு லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த முழுத் தொகைக்கும் வருமான வரிச் சட்டம் 80சி பிரிவின்கீழ் வரிவிலக்கு உண்டு.
அஞ்சல் அலுவலக 5 ஆண்டுகள் வைப்புத் தொகைக்கு வட்டி, 7.5 சதவிகிதத்திலிருந்து 8.3 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 5 ஆண்டுகளில் முதிர்வடையும் மாதாந்திர வருவாய் திட்டத்தில் வட்டி 8 சதவிகிதத்திலிருந்து 8.2 சதவிகிதமாகிறது. இப்போது கிடைக்கும், 0.5 சதவிகித போனஸ் இனி கிடையாது.
தேசிய சேமிப்புப் பத்திரத்தின் முதிர்வுகாலம் 6 ஆண்டுகளிலிருந்து 5 ஆண்டுகளாகக் குறைந்துவிட்டது. வட்டி 8 சதவிகிதத்திலிருந்து 8.4 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. புதிய திட்டம் ஒன்று அறிமுகமாகி உள்ளது. 10 ஆண்டுகளில் முதிர்வடையும் புதிய தேசிய சேமிப்புப் பத்திரம்தான் அது. வட்டி 8.7 சதவிகிதம். நீண்டகால அடிப்படையில் சேமிக்க விரும்புபவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பு.
இந்தக் கணிசமான வட்டி உயர்வுக்குக் காரணம் இதுதான்: கடந்த ஓரிரு ஆண்டுகளாக வங்கி டெபாசிட்களின் வட்டி கிடு, கிடுவென உயர்ந்தது. அஞ்சல் அலுவலக டெபாசிட்கள் மற்றும் அரசு சார்ந்த சிறுசேமிப்புத் திட்டங்களுக்கு இதனால் மவுசு குறைந்தது. இதன் விளைவாக, அஞ்சல் அலுவலக டெபாசிட்டர்கள் பெரிய அளவில் வங்கி டெபாசிட்களுக்கு மாறத் தொடங்கினார்கள். ஆக, சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை இது என்பதில் சந்தேகம் இல்லை. சிறு முதலீட்டாளர்களிடையே இது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இது ஒருபுறமிருக்க, நீதியரசர் ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான வாரியம் சிறு சேமிப்புத் திட்டங்கள் தொடர்பான மிகப் பழைய நடைமுறைகளையும், விதிமுறைகளையும், கால மாற்றத்துக்கு ஏற்ப, மாற்றி புதிய திருத்தங்களைக் கொண்டு வந்தால், சிறு சேமிப்புத் திட்டங்கள் புத்துயிர் பெறும். இழந்த செல்வாக்கை அவை மீண்டும் பெறும் என்று நம்பலாம்.
கிசான் விகாஸ் பத்திரம் விலக்கிக் கொள்ளப்பட்டுவிட்டது. இதை எவர் வேண்டுமானாலும் பணமாக மாற்றலாம் என்று இருந்ததால் இதைப் பலர் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்று புகார் எழுந்ததன் விளைவே இது ரத்து ஆனதற்கான காரணம்.
இது தவிர, கடந்த சில ஆண்டுகளாக, எது முதலீடு, எது காப்பீடு, எது பரஸ்பர நிதி என்று சிறு முதலீட்டாளர்களால், அடையாளம் காண முடியாத அளவுக்கு, புதிய புதிய திட்டங்கள், முதலீட்டுச் சந்தையில் அறிமுகமாகி உள்ளன. உதாரணத்துக்கு, "யூலிப்' என்கிற யூனிட் தொடர்புடைய இன்சூரன்ஸ் பாலிசியைக் குறிப்பிடலாம்.
இதுபோன்ற குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதேபோல், ஊழியர் வருங்கால வைப்பு நிதியில், ஓய்வூதிய அம்சமும் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, இதை தேசிய ஓய்வூதியத் திட்டத்துடன் சேர்த்து நிர்வகிக்க வேண்டும் என்கிற கோரிக்கை இருந்து வருகிறது.
இது எந்த அளவுக்குச் சாத்தியம் என்பதையும், அப்படிச் செய்வதன் மூலம் சாதக, பாதகங்கள் எவை என்பதையும் வாரியம் பரிசீலிக்க வேண்டும்.
அதேநேரம், வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் சேரும் பணத்தில் ஒரு சிறிய பகுதியையாவது பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வழிவகுக்க வேண்டும் என்ற யோசனை வலுவடைந்து வருகிறது.
அதேபோல் ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்துள்ள தொகையிலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்படுகிறது.
இந்த யோசனையைச் செயல்படுத்துவதற்கு அரசு ஆர்வமோ அவசரமோ காட்டக்கூடாது. அதற்கான காலம் இன்னும் கனியவில்லை. மாறாக, பங்குச்சந்தையில் அவ்வப்போது ஏற்படும் கடும் ஏற்றத்தாழ்வையும், அதனால் ஏற்படக்கூடிய இழப்பு, பீதி ஆகியவற்றை எளிய ஊழியர்கள் தாங்க மாட்டார்கள். அவர்களைத் தேவையில்லா மனஉளைச்சலுக்கு ஆளாக்க வேண்டாம்.
கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று ஆசைகாட்டி ஊழியர்களின் எதிர்கால வாழ்வாதாரமாகிய வைப்பு நிதியை பங்குச்சந்தையின் நிலையற்ற தன்மைக்கு உள்படுத்தத் தேவையில்லை. அதுகுறித்து ஆலோசிக்க நிறைய அவகாசம் உள்ளது.
தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள பணத்தை தற்சமயம் அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்வதால், அந்த முதலீட்டுக்கு மிகக் குறைந்த வருவாய்தான் கிடைக்கிறது என்று கூறப்படுகிறது. பணவீக்கத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், இத்திட்டத்தில் கிடைக்கும் வட்டி, ஏறக்குறைய பூஜ்யம்தான் என்றும் வாதிடப்படுகிறது.
இப்படி வாதிடுபவர்கள் ஒரு குறிப்பிட்ட கால அளவை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள். ஓய்வூதிய நிதி மற்றும் ஊழியர் வருங்கால வைப்புநிதி சராசரியாக 20 முதல் 25 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யப்படுகிறது.
ஆகையால், அரசுப் பத்திரங்களிலும் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யும்போது, வங்கி டெபாசிட்டுக்கு கூடுதலாகவே வருவாய் அமையும் என்பது நிச்சயம். அதேநேரம், வருவாய் குறைவாக இருந்தாலும், முதலீட்டுக்கு மோசம் இல்லை என்பதே முக்கியம்.
தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் 18 வயது முதல் 55 வயது வரையிலான பொதுமக்கள் சேர்ந்து பயனடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது. நம் நாட்டில் உழைக்கும் வர்க்கத்தினரில் 87 சதவிகிதம் பேருக்கு ஓய்வூதியம் கிடையாது. எனவே, இத்திட்டம் அமைப்பு சாராத ஊழியர்களுக்கும் பயன் தரக்கூடியது.
இதில் முதலீடு செய்பவர்களுக்கு மூன்றுவித விருப்பத் திட்டங்கள் உள்ளன. பங்குச்சந்தை அல்லது நிலையான வருவாய் தரும் கடன் பத்திரங்கள் அல்லது அரசுப் பத்திரங்கள் என ஏதேனும் ஒன்றிலோ, விரும்பினால் மூன்றும் கலந்த திட்டத்திலோ முதலீடு செய்யலாம்.
ஒரு திட்டத்தை எடுத்தால், அதையே பின்பற்ற வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. வேறு ஒரு திட்டத்துக்கு எப்போது வேண்டுமானாலும் மாறிக் கொள்ளலாம். இதுபோல் எத்தனை முறை வேண்டுமானாலும் மாறலாம்.
60 வயது அடைந்தவுடன், நம் கணக்கில் சேர்ந்துள்ள தொகையில் 40 சதவிகிதத் தொகையைக் கொண்டு ஒரு இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர்ந்து, மாதாமாதம் ஓய்வூதியத்தொகை பெற்றுக் கொள்ளலாம். மீதம் உள்ள பணத்தை ரொக்கமாக ஒரே தவணையிலோ அல்லது பல தவணைகளிலோ பெற்றுக் கொள்ளலாம். 70 வயதுக்குள் முழு தொகையையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
60 வயதுக்கு முன்பாகவே, இத்திட்டத்திலிருந்து வெளியேறுவதாக இருந்தால், 80 சதவிகிதத் தொகையை ஓய்வூதியத்துக்காக ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள 20 சதவிகிதத் தொகையை மட்டுமே ரொக்கமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
இத்திட்டத்தில் இரண்டு குறைபாடுகள் உள்ளன. ஒன்று, இதில் பரிமாற்றக் கட்டணம் (ஒவ்வொரு முறை பணம் செலுத்தும்போதும் ரூ. 20) செலுத்த வேண்டியிருக்கிறது. இதுதவிர, ஆவணப் பராமரிப்பு கட்டணம் (ஆண்டுக்கு ரூ. 350) செலுத்த வேண்டும். இதுபோன்ற கட்டணங்கள் சாதாரண மக்களுக்குச் சுமையாக இருக்கும். அதனால் அரசாங்கம், கட்டணம் இல்லாமல் அல்லது குறைந்தபட்ச கட்டணங்களில், எளிய முதலீட்டாளர்களும் பயன் பெறும் வகையில் இத்திட்டத்தை மாற்றி அமைத்திட வேண்டும்.
இரண்டாவதாக, இத் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பணத்துக்கு வருமான வரிச்சலுகை கிடையாது. இத் திட்டத்தில் செலுத்தப்படும் பணத்துக்கு வருமானவரிச் சட்டம் 80சி பிரிவின்கீழ் வரிவிலக்கு அளிக்க வேண்டும் அல்லது உள்கட்டமைப்பு பாண்டுகளுக்கு அளிப்பதுபோல், ஆண்டுக்கு ஒரு குறிப்பிட்ட தொகைக்குத் தனியாக வருமான வரிச்சலுகை வழங்கிட வேண்டும்.
இதுபோல், சிறு சேமிப்பு, வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியத் திட்டங்களின் விதிமுறைகளில் பலவற்றைத் திருத்தி அமைத்திடும் தருணம் வந்துவிட்டது. மத்திய நிதி அமைச்சகம் மற்றும் நீதியரசர் ஸ்ரீகிருஷ்ணா குழு ஆகியவை இவற்றைப் பரிசீலித்து, சிறு சேமிப்பாளர்கள் மற்றும் சிறு முதலீட்டாளர்களுக்கு ஊக்குவிப்பு அளிக்கும் வகையில், காலத்துக்கு ஏற்ற மாற்றங்களை அறிமுகம் செய்திட வேண்டும்.
நன்றி தினமணி
Similar topics
» ஜெயலலிதாவுக்கு ஏன் இந்த சிறுபிள்ளைத்தனம்!
» புதிய தலைமுறைக்கு ஆப்படிக்கப்போகும் சன்?!
» மரபணு நோய்களை தடுக்கும் புதிய ஆராய்ச்சி!!!
» காற்றை எரிபொருளாக பயன்படுத்தி செல்லும் புதிய கார்
» அறுவைச் சிகிச்சை தேவை!
» புதிய தலைமுறைக்கு ஆப்படிக்கப்போகும் சன்?!
» மரபணு நோய்களை தடுக்கும் புதிய ஆராய்ச்சி!!!
» காற்றை எரிபொருளாக பயன்படுத்தி செல்லும் புதிய கார்
» அறுவைச் சிகிச்சை தேவை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum