உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

யார் காரணம்?

Go down

யார் காரணம்? Empty யார் காரணம்?

Post by nandavanam on Thu Dec 29, 2011 3:17 am

யார் காரணம்? 26009-12_27_1227200765424123_4
பழவேற்காடு ஏரியில் இரு நாள்களுக்கு முன்பு சுற்றுலாப் படகு கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 20 பேர் உள்பட 22 பேர் இறந்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடிவிட்டு, மகிழ்உலா சென்ற இவர்களுக்கு நேரிட்ட இத்துயரச் சம்பவம் இந்தியாவில் அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியது.

இந்தத் துயரச் சம்பவத்துக்கு பல காரணங்களை பலரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். படகில் அதிக எண்ணிக்கையில் ஆட்கள் இருந்ததால் இந்த விபத்து என்றும், படகு ஆட்டம் கண்டபோது அனைவரும் பயத்தினால் படகின் ஒரே பக்கத்துக்கு வந்ததால் கவிழ்ந்தது என்றும், காற்று பலமாக வீசியது என்றும், வேண்டாம் என்று படகோட்டி கூறியும் கேட்காமல், அங்கே போகும்படி பயணிகள் வற்புறுத்தினர் என்றும் பல பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

இதில் நியாயமான ஒரேயொரு காரணம்- பயணம் செய்தவர்கள் ஒருவர்கூட லைப் ஜாக்கெட் அணிந்து செல்லவில்லை என்பதுதான்.

தேக்கடியில் நடந்த படகு விபத்திலும், ஒகேனக்கல்லில் நடந்த விபத்துகளிலும் சுற்றுலாப் பயணிகள் இறந்ததற்கு முக்கிய காரணம் இவர்கள் யாரும் லைப் ஜாக்கெட் அணிந்திருக்கவில்லை என்பதுதான். பழவேற்காட்டில் 1994-ம் ஆண்டில் 26 பள்ளி மாணவர்கள் உள்பட 29 பேர் இறந்த சம்பவத்திலும் யாரும் லைப் ஜாக்கெட் அணிந்திருக்கவில்லை.1984-ம் ஆண்டில் 8 பேர் இறந்த சம்பவத்திலும் யாரும் லைப் ஜாக்கெட் அணிந்திருக்கவில்லை.

இப்போது பழவேற்காடு சம்பவத்தில் 22 பேர் இறந்தவுடன் நிறைய செய்திகள் வருகின்றன. "உதகை ஏரியில் சுற்றுலாப் பயணிகள் யாரும் லைப் ஜாக்கெட் அணிவதே இல்லை'. "தேக்கடியில் கண்டுகொள்ளப்படுவதே இல்லை'. "படகோட்டிகள் விதிகளை மீறுகிறார்கள்". "விதிகளை யாரும் மதிப்பதே இல்லை' என்றெல்லாம் செய்திகள் வருகின்றன.

இந்தச் செய்திகள் யாவும் ஏதோ சுற்றுலாத் துறையும் படகோட்டிகளும் மட்டுமே விதிகளை மதிக்காதவர்கள் போலவும் அவர்கள்தான் இந்த மரணங்களுக்குக் காரணம் என்பதாகவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. இறந்தவர்கள் மீது கூடுதல் பரிதாபம் கொள்ளச் செய்கின்றன. நிர்வாகத்தின் சமூக அக்கறையின்மை குறித்த சாடலாக மாற்றப்படுகின்றன. எனினும், லைப் ஜாக்கெட் அணிவதில் சுற்றுலாப் பயணிகள் ஒத்துழைப்பு தருவதில்லை என்ற உண்மையை யாருமே பேசுவதில்லை. ஒருவேளை, இறந்தவர்களைப் பற்றி தவறாகப் பேச வேண்டாம் என்கின்ற நாகரிகமாக இருக்கலாம்.

ஒகேனக்கல்லில் சிலர் படகு கவிழ்ந்து இறந்தபோது, லைப் ஜாக்கெட் அணியாமல் படகில் ஏற்றிச் செல்லக்கூடாது என்று கட்டாயப்படுத்தப்பட்டது. மீறினால் படகோட்டிக்குத்தான் தண்டனை, அபராதம் எல்லாமும். சில நாள்கள் இதைக் கடைப்பிடித்தார்கள். பிறகு மெல்ல இந்த வழக்கம் தேய்ந்தது. இதற்குக் காரணம் படகோட்டிகள் அல்ல; சுற்றுலாப் பயணிகள்தான்.

பயணிகள் லைப் ஜாக்கெட் அணிவதில் ஆர்வம் காட்டவில்லை. தங்கள் சுற்றத்தின் நடுவே தன்னை ஒரு தைரியசாலியாகக் காட்டிக் கொள்ளும் பெருந்திரள் மனநிலைக்கு ஒரு சிலர் ஆளாகும்போது, அவர்களை மட்டும் இறக்கிவிட்டுப் போக படகோட்டிகளால் முடிவதில்லை. அந்த சிலரைப் படகிலிருந்து இறக்கினால் உடன்வந்த மற்றவர்களும் இறங்கிவிடுவார்கள். அன்றைய பொழுதின் வாடிக்கையாளரை இழக்க விரும்பாத நிலைமைக்கு படகோட்டி தள்ளப்படுகிறார்.

லைப் ஜாக்கெட்டின் விலையோ மிக அதிகம். ஒரு படகுக்குத் தேவையான எண்ணிக்கையில் லைப் ஜாக்கெட் வாங்கி வைத்துக்கொள்ள படகோட்டியால் முடியாது. சுற்றுலாத் துறை வாங்கித் தராது. ஏனெனில் எல்லா சுற்றுலா ஏரிகளையும் ஒப்பந்தத்துக்கு விட்டுவிட்டு ஒதுங்கிக் கொள்கிறார்கள். ஒப்பந்ததாரர்களோ, பெயரளவுக்கு கொஞ்சம் லைப் ஜாக்கெட்டுகளைக் கண்ணில் படுகிறாற்போல படகில் வைக்கிறார்கள்.

வெளிநாடுகளிலும் ஒப்பந்தக்காரர்கள்தான் சுற்றுலாத் தலங்களை நிர்வகிக்கிறார்கள். ஆனால், அவர்கள் இதில் மிகவும் கவனமாகவும் கண்டிப்பாகவும் இருக்கிறார்கள். மலேசியாவில், புன்னைமரக் காடுகளுக்குள் படகுப் பயணச் சவாரி செய்யும்போது, படகில் கால் வைத்தவுடன் அனைவருக்கும் லைப் ஜாக்கெட் கொடுத்து விடுவார்கள். மாட்டிக் கொள்ளாமல் கையில் வைத்திருக்கும் சுற்றுலாப் பயணியிடம் வழிகாட்டி, தனது லைப் ஜாக்கெட்டை மாட்டிக்கொண்டு புன்னகையுடன் சொல்வார்: "எனக்கு நன்றாக நீச்சல் தெரியும். ஆனால், நான் மாட்டிக்கொள்ளாவிட்டால் என்னை இறக்கிவிட்டு விடுவார்கள்'.

அந்த வழிகாட்டியே பயணிக்கு புன்னகையுடன் மாட்டிவிடவும் செய்வார். அனைவரும் லைப் ஜாக்கெட் அணிந்திருக்கிறார்கள் என்பதை அவர் உறுதிப்படுத்திய பிறகுதான் படகு நகரும்.

அத்தகைய நிலைமை இங்கு ஏற்பட வேண்டும். லைப் ஜாக்கெட் அணியாமல் படகில் ஏறமாட்டோம் என்று சுற்றுலாப் பயணிகளே சொல்லும் அளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டால் அதைவிட பாதுகாப்பு வேறு ஒன்றுமில்லை.

"கேரள மாநிலத்திலும் வேறு சில தீவுகளிலும் வசிக்கும் மக்கள் தினமும் இப்படியா லைப் ஜாக்கெட் அணிந்து கொள்கிறார்கள்?' என்று வாதிடும் பயணிகளும் இருக்கிறார்கள். அங்கே அவர்களுக்கு அது வாழ்க்கை முறை; அவர்கள் மண்ணின் மைந்தர்கள். இங்கே சுற்றுலாப் பயணி; இந்தச் சூழலுக்குப் புதியவர்; மேலும் விருந்தினர். இந்த வேறுபாட்டை புரிந்துகொள்ளாவிட்டால், இத்தகைய படகு கவிழ்வது போன்ற விபத்துகள் நடந்துகொண்டேதான் இருக்கும்.

எல்லா பிரச்னைகளுக்கும், விபத்துகளுக்கும் அரசை மட்டுமே குற்றம் சாட்டுவதில் அர்த்தமில்லை. மக்களாட்சித் தத்துவத்தில் அரசும் மக்களும் வேறுவேறு அல்ல. முடியாட்சித் தத்துவத்தில்தான் மன்னர் எவ்வழி, மக்கள் அவ்வழி. மக்களாட்சித் தத்துவத்தில், "மக்கள் எவ்வழி, அரசு அவ்வழி' என்பதாகத்தானே இருக்க முடியும். நமக்கும் சில கடமைகள் உண்டு என்பதை மக்களும் உணர வேண்டும். இல்லாவிட்டால் கவிழ்வது படகுகள் மட்டுமாக இருக்காது, தேசமும்கூடத்தான்!

நன்றி தினமணி


nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum