உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அ‌ண்ணா ஹசாரே -​ மனசாட்சி பதி‌ல் ‌சொல்​ல‌ட்​டு‌ம்!

Go down

அ‌ண்ணா ஹசாரே -​ மனசாட்சி பதி‌ல் ‌சொல்​ல‌ட்​டு‌ம்! Empty அ‌ண்ணா ஹசாரே -​ மனசாட்சி பதி‌ல் ‌சொல்​ல‌ட்​டு‌ம்!

Post by nandavanam on Sat Dec 24, 2011 4:19 am

அ‌ண்ணா ஹசாரே -​ மனசாட்சி பதி‌ல் ‌சொல்​ல‌ட்​டு‌ம்! Jeyamohan
சரத் பவார் தாக்கப்பட்டபோது அண்ணா ஹசாரே பேசிய சொற்கள் ஊடகங்களால் விவாதமாக ஆக்கப்பட்டுள்ளன. அவர் ராலேகான்சித்தி கிராமத்தை மறுநிர்மாணம் செய்தபோது ஊர்க் கட்டுப்பாட்டுக்கு அடங்காத குடிகாரர்கள் தண்டிக்கப்பட்டார்கள் என்று ஒரு பேட்டியில் சொன்னதை வைத்து, அவர் வன்முறையாளர் என்றும் காந்தியத்தில் நம்பிக்கை அற்றவர் என்றும் கட்டுரைகள் எழுதுகிறார்கள். ராலேகான் சித்தியில் பஞ்சாயத்து தேர்தல்கள் நிகழவில்லை என்றும் ஆகவே, அண்ணா ஹசாரே ஜனநாயகவாதி அல்ல என்றும் பேசுகிறார்கள்.

ஆச்சரியமென்னவென்றால் அண்ணா ஹசாரே போராட்டம் உச்ச நிலையில் நிகழ்ந்தபோது அதன்மேல் ஐயங்களை வீசியவர்கள், எதிர்த்தவர்களே இப்போது அண்ணா ஹசாரே மீது நம்பிக்கை போய்விட்டது என எழுதுகிறார்கள்.

அண்ணா ஹசாரே குழு மீது ஊடகங்களும் அரசும் மெல்லமெல்ல கடுமையான அவதூறு மற்றும் ஆளுமைஅழிப்புத் தாக்குதல்களைத் தொடுக்கும் என்பது எவரும் ஊகிக்கக்கூடியதே. ஏனென்றால், அதுதான் நம் வரலாறு. நேற்று வினோபாவுக்கும், ராம் மனோகர் லோகியாவுக்கும், ஜெயப்பிரகாஷ்நாராயணுக்கும் எந்த முறிமருந்து கொடுக்கப்பட்டதோ அதுவே இவருக்கும் கொடுக்கப்படுகிறது.

அண்ணா ஹசாரே போன்றவர்களை ஊழல், முறைகேடு போன்றவற்றில் சிக்கவைக்க முடியாது. ஆனால், அவர் மீது குற்றச்சாட்டுகளைச் சொல்லிக்கொண்டே இருக்கலாம். தொடர்ச்சியாக ஊடகங்களில் வெளியாகிக்கொண்டிருக்கும் குற்றச்சாட்டுகள் மெல்ல மெல்ல அவரைப் பற்றிய எதிர்மறை பிம்பத்தைக் கட்டமைக்கும். அன்றாடச் செலவுக்குக் காசில்லாமல் வாழ்ந்து மறைந்த ஜெயப்பிரகாஷ் நாராயண் மேல் கூட இவ்வகை தாக்குதலை தொடர்ந்து நிகழ்த்தியது நம் ஊடக உலகம்.

அதைவிட வலுவான ஆயுதம் என்பது, கேலிப் பொருளாக்குதல். ஜெயப்பிரகாஷ் நாராயண் முதல் அண்ணா ஹசாரே வரையிலானவர்கள் ராஜதந்திரிகள் அல்ல. அரசியல்வாதிகளும் அல்ல. ராஜதந்திரிகள் எண்ணி எண்ணி சொற்களைச் சொல்வார்கள். அரசியல்வாதிகள் எப்போதுமே சம்பிரதாயமான தேய்வழக்குகளை மட்டுமே சொல்வார்கள். அவ்வாறு செயல்படுபவர்களை ஊடகங்கள் எளிதில் மடக்க முடியாது.

ஆனால், உண்மையான மக்கள் தொண்டர்கள் மக்களிடையே இருந்து எழுந்து வந்தவர்களாகவே இருப்பார்கள். மக்களின் மொழியில் பேசுபவர்களாகவும், மக்களின் உணர்ச்சிகளை எதிரொலிப்பவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் பேச்சு தன்னிச்சையாக வெளிவரக்கூடியதாகவே இருக்கும். மிக மிக எளிதாக நம் ஊடகங்கள் அவற்றைத் திரிக்க முடியும். முன்பின் முரண்களாக காட்டமுடியும். உளறல்களாக சித்திரிக்க முடியும்.

சென்ற காலங்களில் இந்த உத்திக்குப் பலியாகி வரலாற்றில் இருந்தே அழிக்கப்பட்ட பலர் உண்டு. முக்கியமான களப்பலி ஜெயப்பிரகாஷ் நாராயண்தான். எழுபதுகளின் ஆங்கில ஊடகங்களை எடுத்துப் பார்த்தால் ஜெயப்பிரகாஷ் நாராயணின் முழுப் புரட்சி என்ற கருதுகோள் எப்படியெல்லாம் கிண்டலும் நக்கலும் செய்யப்பட்டு ஒருவகை கிறுக்குத்தனமாகச் சித்திரிக்கப்பட்டது என்பதைக் கண்டு ரத்தம் கொதிக்கலாம். ஜெயப்பிரகாஷ் நாராயண் கிராமிய இந்தியில் மக்களிடையே சொன்ன வரிகளைத் திரித்து அவரை இந்தியாவின் அரசியலமைப்பையே அழிக்க முயலும் வன்முறையாளர் என ஊடகம் முத்திரை குத்தியது.

அண்ணா ஹசாரேயும் ஜெயப்பிரகாஷ்நாராயணைப்போல அரசியல்வாதி அல்ல. மக்கள் நடுவே இருந்து உருவாகி வந்த மக்கள் சேவகர் மட்டுமே. ஆகவே அவரது மொழி அரசியல்வாதியின் மொழியோ ராஜதந்திரியின் மொழியோ அல்ல. மக்களின் உணர்ச்சிகளை அதுவும் சகஜமாக பிரதிபலிக்கிறது. அதைத்தான் ஊடகம் மிக எளிதாக கேலிக்குரியதாக ஆக்கிக்கொண்டிருக்கிறது.

ஜெயப்பிரகாஷ் நாராயணுக்குச் செய்தது போலவே அண்ணா ஹசாரே அல்லது ஹசாரே குழுவினர் பேசும் உதிரி வரிகளைத் தொடர்ச்சியாக அறிக்கையாக்கி அவற்றை ஊழலில் மூழ்கிய நம் நடுத்தரவர்க்கத்தின் ஒருபகுதியினரின் கேலிக்கும் விவாதத்துக்கும் உள்ளாக்கிக்கொண்டிருக்கிறது ஊடகம். அவர்களும் அண்ணா ஹசாரே ஏன் இப்படிச் சொன்னார், அவர் அப்படிச் சொல்லியிருக்கக்கூடாது, இப்படிச் சொல்வது காந்தியமா என்றெல்லாம் அரட்டையடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மகாத்மா காந்தி, அண்ணா ஹசாரேவைப்போலவே அதிகம் படிக்காதவர் அல்ல. எளிய பின்னணி கொண்டவரோ பாமரர் நடுவே பணியாற்றியவரோ அல்ல. அவர் மிகச்சிறந்த வழக்கறிஞர். மாபெரும் ராஜதந்திரி. தன் நாக்கு மீது அபாரமான கட்டுப்பாடு கொண்டவர். ஆனாலும் பலமுறை அவர் சொற்கள் திரிக்கப்பட்டுள்ளன. பலமுறை அவர் வன்முறையாளராக, இனவெறியராக, மதவெறியராக ஆங்கில ஊடகங்களால் காட்டப்பட்டுள்ளார். காந்தியின் ஒரு பேச்சு திரிக்கப்பட்டு அவர் வன்முறையை ஆதரித்தார் என்று சொல்லி அவருக்கு நோபல் பரிசு மறுக்கப்பட்டது. அண்ணா ஹசாரே இப்போது இப்படி வதைக்கப்படுவதில் ஆச்சரியமே இல்லை.

நாம் யோசிக்கவேண்டியது ஒன்றுதான். அண்ணா ஹசாரேவுக்கும் அவர்மேல் விமர்சனங்களை முன்வைப்பவர்களுக்கும் பெரிய ஒரு வேறுபாடுள்ளது. அண்ணா பேசுபவர் அல்ல. ஊடகவியலாளர் அல்ல. கூரிய சொற்களைச் சொல்பவராகவோ அரிய சிந்தனைகளை முன்வைப்பவராகவோ அவர் தன்னைக் காட்டிக்கொண்டதில்லை. அவர் ஒரு மக்கள் சேவகர். அந்த தளத்தில் தன் அர்ப்பணிப்பை நேர்மையை செயல்திறனை நிரூபித்தபின் பொதுவாழ்க்கைக்கு வந்தவர். மக்களின் குரலாக பேசுவதற்கான ஒரு வரலாற்றுத்தருணம் அவருக்கு வந்தது, அவர் இயல்பாக மக்களின் மொழியைப் பேசுகிறார்.

அண்ணா ஹசாரே ராலேகான் சித்திக்குச் சென்றபோது அது கள்ளச்சாராயத்துக்குப் புகழ்பெற்ற ஒரு கிராமமாக இருந்தது. அந்த கிராமத்தில் அவர் தன் தார்மிக ஆற்றல் ஒன்றைக்கொண்டே ஒரு மாற்றத்தை உருவாக்க முயன்றார். அவர் நூற்றாண்டுகள் பழமை உள்ள கிராமிய பஞ்சாயத்து முறையைத் திருப்பிக் கொண்டுவந்தார். ஆனால், அந்த பஞ்சாயத்துமுறையில் இருந்துவந்த சாதிய மேலாதிக்கத்தை இல்லாமலாக்கினார். அதில் எல்லா சாதியினருக்கும் சம இடத்தையும் பங்களிப்பையும் உருவாக்கினார். அப்படி எல்லா சாதியினரும் பங்கெடுக்காமல் நிர்மாணத் திட்டங்களைச் செயலாக்க முடியாது என்ற உண்மையை அம்மக்களை நம்பவைத்து அதைச் சாதித்தார். எண்பத்தேழில் ராலேகான் சித்திக்கு நேரில் சென்று நான் அதைக் கண்டிருக்கிறேன். அனேகமாக வட இந்தியாவில் கிராமிய அமைப்பில் தலித்துகளுக்கு நேரடி அதிகாரப்பகிர்வு உள்ள ஒரே கிராமமும் அதுவே.

கிராமியப்பஞ்சாயத்து முறையைக் கொண்டு எப்படி சாராய மேலாதிக்கத்தை எதிர்த்தோம் என்றுதான் அண்ணா ஹசாரே சொல்கிறார். கிராமியப் பொருளியலையே அழித்துக்கொண்டிருப்பது குடி என்பதை எந்த சமநிலையுள்ள மனிதரும் ஏற்பார்கள். அந்த சமூகத்தீமைக்கு எதிரான ஒரு சமூகவிலக்கை, சமூகத்தண்டனையை உருவாக்க அவர் கிராமியப் பஞ்சாயத்து வழியாக முயன்றிருக்கக்கூடும்.

ஊடகங்கள் திட்டமிட்டு ஒரு சித்திரத்தை உருவாக்குகின்றன. அண்ணா ஹசாரே ராலேகான் சித்தியின் சர்வாதிகாரி அல்ல. அவர் தமிழ் சினிமாக்களில் வருவதுபோல சர்வ வல்லமைகொண்ட நிலக்கிழார் அல்ல. ஊர்க்கோயிலில் தங்கியிருக்கும் ஏழை சமூகசேவகர் அவர். அந்த எளிமைமூலம் கிடைத்த தார்மிக அதிகாரமே அவருடையது. அவர் பேசுவது அவரது அதிகாரத்தைப் பற்றியல்ல, கிராமப்பஞ்சாயத்தின் அதிகாரத்தைப்பற்றித்தான்.

அண்ணா ஹசாரே அங்கே அரசியல்சார்ந்த தேர்தல்கள் நிகழவேண்டியதில்லை என நினைத்தமைக்கு அந்தக் கிராமம் சார்ந்த காரணங்கள் உண்டு. கட்சிமுறை தேர்தல் மூலம் கிராமத்துக்குள் பிளவு நிகழ்ந்தால் அங்கே நிகழ்ந்துகொண்டிருந்த பெரும் நிர்மாணப்பணிகள் பாதிக்கப்படும் என அவர் நினைத்தார். அவர் அங்கே கட்சியரசியலை தன் சொந்த அதிகாரம் மூலம் தடுத்து நிறுத்தவில்லை. கட்சியரசியல் தேவையில்லை என நினைத்தது அந்த கிராமப்பஞ்சாயத்துதான். அதற்குப் பதிலாக பேசி கூடி முடிவெடுத்து தலைமையை நிர்ணயிக்கும் பாரம்பரிய முறை அங்கே கடைப்பிடிக்கப்பட்டது. எல்லா தரப்புடைய குரலும் பரிசீலிக்கப்பட்டுதான் ராலேகான் சித்தியில் எல்லா முடிவுகளும் எடுக்கப்படுகின்றன. அதுவே உண்மையான ஜனநாயகம்.

அண்ணா ஹசாரே அவரது கிராமத்தில் செய்த கிராமிய பொருளியல் மறுநிர்மாணமும் சரி, அவர் தேசிய அளவில் நிகழ்த்திவரும் ஊழலுக்கெதிரான போராட்டமும் சரி முழுக்கமுழுக்க காந்திய நோக்கில் அமைந்தவை என்பதனால்தான் அவர் காந்தியர் என்கிறோம்.

காந்தியின் எல்லா வரிகளையும் முழுக்க ஏற்றுக்கொண்டு முழுமையாக காந்தியாக வாழ்ந்தால் மட்டும்தான் அவர் காந்தியர் என்பது இல்லை. அண்ணா காந்தியிடம் முரண்படும் இடங்கள் இருக்கலாம். அதை அவர் நடைமுறையில் இருந்து கற்றுக்கொண்டிருக்கலாம். காந்தியும் நடைமுறைவாதியாகவே இருந்தார். காந்தியும் பல தளங்களில் வன்முறையின் இருப்பை அங்கீகரித்தவரே. மதக்கலவரங்களில் ராணுவம் உறுதியுடன் செயலாற்ற வேண்டும் என்று அவர் சொல்லியிருக்கிறார். காங்கிரûஸ கலைக்கச்சொன்னவர் ராணுவத்தைக் கலைக்கச் சொல்லவில்லை.

நம்மிடம் இருவகை ஆட்களே இருக்கிறார்கள். ஒருதரப்பினர் அண்ணா ஹசாரேவைக் கண்டு அஞ்சுபவர்கள். அவரை நிராகரிக்க ஏதேனும் ஒரு காரணம் போதும் அவர்களுக்கு. உடனே வசைகளையும் அவதூறுகளையும் ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால், அவர்கள் நம்பும் தலைவர்களின் மலைபோன்ற பிழைகளை நேர்மையின்மைகளை அவர்கள் நூறு நூறு சொற்களால் நியாயப்படுத்துவார்கள்.

இன்னொரு சாரார் நம்பிக்கைவாதிகள். அவர்களுக்குத் தேவை ஒரு தேவ தூதன். இன்று காந்தியே வந்தாலும்கூட அவரில் குறைகள்தானே கண்டடையப்படும்.

இந்தியாவுக்கு அண்ணா ஹசாரே ஒரு மாபெரும் வாய்ப்பு. ஒரு வரலாற்றுத்தருணம். அதை இந்தியா வெல்லவேண்டுமா இல்லை ஜெயப்பிரகாஷ் நாராயணை இழந்ததுபோல இழக்க வேண்டுமா என்பது அதன் எதிர்காலத்தை தீர்மானிக்கும் கேள்விகளில் ஒன்று. நம் மனசாட்சியுடன் அந்தரங்கமாக நம்மால் பேசமுடிந்தால்தான், அதற்கான பதிலை நாம் சொல்ல முடியும்.

நன்றி தினமணிnandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum