உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

வீணாவது நமது வரிப்பணம்!

Go down

வீணாவது நமது வரிப்பணம்! Empty வீணாவது நமது வரிப்பணம்!

Post by nandavanam on Thu Dec 22, 2011 3:01 am

வீணாவது நமது வரிப்பணம்! Card_1_4

இந்தியாவில் வசிக்கும் அனைவருக்கும் தனித்துவமான அடையாள எண் (ஆதார்) அளிக்க வகை செய்யும் தேசிய அடையாள எண் ஆணைய மசோதாவை அதன் தற்போதைய வடிவில் ஏற்க இயலாது என பாஜக தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்ஹா தலைமையிலான நிதி அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற நிலைக் குழு நிராகரித்துவிட்டது. இது எதிர்பார்த்த ஒன்றுதான். இந்தக் குழுவின் இந்த முடிவு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் தன்னிச்சையான செயல்பாட்டுக்குக் கிடைத்திருக்கும் இன்னொரு பின்னடைவு.

தேசிய அளவிலான எந்தவொரு திட்டமானாலும் நாடாளுமன்றத்தில் அதுதொடர்பான சட்டம் இயற்றப்பட்டு, சட்டப்பூர்வ அதிகாரம் கிடைத்த பிறகே செயல்படுத்தப்பட வேண்டும். ஆனால், ஆதார் அடையாள எண் விஷயத்தில் இந்த நடைமுறையைப் பின்பற்றாமல், நிர்வாக அதிகாரத்தின் மூலம் கடந்த ஆண்டு, செப்டம்பரிலேயே நந்தன் நிலகேணி தலைமையிலான இதற்கான தேசிய ஆணையம் தனது பணிகளைத் தொடங்கிவிட்டது.

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் 12 இலக்கம் கொண்ட தனித்துவமான அடையாள எண் வழங்குவதுதான் ஆதார் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தனித் தனியாக இத்தகைய அடையாள எண் வழங்கப்படும். குடும்ப அட்டை, செல்போன் இணைப்பு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கும், வங்கிக் கணக்கு தொடங்குவதற்கும் மற்றும் அரசின் நலத் திட்ட உதவிகளைப் பெறுவதற்கும் ஆதார் எண்ணை ஓர் ஆவணமாகப் பயன்படுத்தலாம்.

ஆதார் தேசிய அடையாள எண் பெறுவதற்கு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், ஓட்டுநர் உரிம அட்டை உள்ளிட்ட முகவரிச் சான்று ஆவணம் ஏதாவது ஒன்றைக் காண்பித்து, அந்தந்தப் பகுதியில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பதிவு மையத்தில் (அஞ்சல் நிலையம், வங்கி உள்ளிட்டவை) முதலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மனுக்கள் பரிசீலிக்கப்பட்ட பிறகு, விண்ணப்பதாரரின் விரல் ரேகை, கருவிழி ஆகியவை கணினியில் ஸ்கேன் செய்யப்பட்டு அவருக்கு தனித்துவமான தேசிய அடையாள எண் வழங்கப்படும்.

எந்தவொரு திட்டமானாலும் அது நடைமுறைச் சாத்தியமா என்பது குறித்து குழு அமைத்து தீவிரமாக கள ஆய்வு செய்வதுதான் வழக்கமான நடைமுறை. ஆனால், இந்தியா முழுவதும் உள்ள சுமார் 120 கோடி பேருக்கும் இந்தத் தனித்துவமான அடையாள எண் வழங்கும் பணியைத் தொடங்குவதற்கு முன்பாக, இத்தகைய கள ஆய்வு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இது முதல் கோணல். இந்தத் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த ஒட்டுமொத்தமாக எவ்வளவு செலவாகும் என்பது குறித்தும் திட்ட மதிப்பீடு எதுவும் தயாரிக்கப்படவில்லை. இது இரண்டாவது சறுக்கல்.

தொடக்கமே முறையாக இல்லாத இந்தத் திட்டத்தின் முதல் இரண்டு கட்டங்களில் சுமார் 10 கோடி பேருக்கு தேசிய அடையாள எண் வழங்குவதற்காக ரூ. 3,170 கோடியை மத்திய அரசு வாரி வழங்கியுள்ளது. 120 கோடிப் பேருக்கும் அடையாள எண் வழங்குவதற்கு உத்தேசமாக ரூ. 72,000 கோடி தேவைப்படலாம் என சுயேச்சையான மதிப்பீடுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த ஆண்டு நாடு முழுவதும் ஏற்கெனவே பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், மீண்டும் ஒருமுறை இதே பாணியில் அடையாள எண் வழங்குவதற்காகத் தகவல்களைப் பதிவு செய்வதும், அதற்காக பெரும் தொகையைச் செலவிடுவதும் தேவைதானா என மத்திய நிதி அமைச்சகம் கேள்வி எழுப்பியுள்ளது. இதேபோல, தேசிய அடையாள எண் திட்டமானது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என மத்திய உள்துறை அமைச்சகமும் தனது பங்குக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த இரு முக்கிய அமைச்சகங்களின் எதிர்ப்பையும் மீறி, அவசரகதியில் ஆதார் திட்டத்தைத் தொடங்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்விக்கு மத்திய அரசிடமிருந்து பதில் இல்லை.

தேசிய அடையாள எண் பெற பதிவு செய்வதற்கு முகவரிச் சான்று எதுவும் இல்லாவிட்டாலும், ஏற்கெனவே இதைப் பெற்றுள்ள மற்றொருவர் அறிமுகப்படுத்தினாலே போதும் என்ற விதியால், சட்டவிரோதமாக நமது நாட்டுக்குள் ஊடுருவியுள்ள வெளிநாட்டவர்களும் இந்த எண்ணை எளிதாகப் பெற்றுவிட முடியும். இது நமது நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாகிவிடும் என்பது உள்துறை அமைச்சகத்தின் நியாயமான வாதம்.

மேலும், இந்த அடையாள எண்ணைப் பெறுவதற்காக பொதுமக்கள் அளிக்கும் தகவல்களை ரகசியமாக வைத்திருப்பதை உறுதி செய்வதற்கான பாதுகாப்புச் சட்டம் ஏதும் இயற்றப்படவில்லை. இதுவும் இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய குறைபாடாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

அதோடு, இந்த அடையாள எண்ணுக்காக பொதுமக்களின் விரல் ரேகை, கருவிழி (பயோமெட்ரிக்) போன்றவற்றைப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியும் எழுகிறது. விரல் ரேகை சேகரிப்பில் தவறுகள் நிகழ வாய்ப்புள்ளது என்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுவதையும் புறந்தள்ளிவிட முடியாது.

வளர்ச்சியடைந்த நாடான பிரிட்டனில் இதேபோன்று தேசிய அடையாள எண் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால், நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக அந்தத் திட்டத்தை பிரிட்டன் பாதியிலேயே கைவிட்டுவிட்டது. மக்கள்தொகை குறைவாக உள்ள பிரிட்டனிலேயே இந்த நிலைமை என்றால், உலகிலேயே அதிக அளவு மக்கள்தொகை கொண்ட இரண்டாவது பெரிய நாடான இந்தியாவில் இந்தத் திட்டத்தை எப்படி முழுமையாகச் செயல்படுத்த முடியும் என்பதை மத்திய அரசு ஏன் சிந்திக்கவில்லை?

தற்போது தேசிய அடையாள எண் ஆணைய மசோதாவை நாடாளுமன்ற நிலைக் குழுவே நிராகரித்துவிட்டது. மத்திய அரசு இனி என்ன செய்யப் போகிறது? அப்படியானால், நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இன்றி, ஏற்கெனவே இத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 3,170 கோடி விழலுக்கு இறைத்த நீர்தானா? இதற்கு யார் பொறுப்பேற்கப் போகிறார்கள்?


நன்றி தினமணி

nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum