மனிதநேயமா? மனித உரிமையா?
Page 1 of 1
மனிதநேயமா? மனித உரிமையா?
மனிதர்கள் பிறக்கும்போதே சுதந்திரத்துடனும், உரிமைகளோடும் பிறக்கின்றனர். ஆனால், அதன்பின் நடைமுறை வாழ்க்கையில் சுதந்திரத்தையும், உரிமைகளையும் இழந்து அடிமை வாழ்வே வாழ்கின்றனர்.
இதற்கு ஜாதி, சமயம், இனம், பணம் என எத்தனையோ தடைகள் இருப்பினும் மனிதநேயமும், மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாமையும் காரணமாகும்.
மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வோராண்டும் டிசம்பர் 10 அன்று உலகம் முழுவதும் "மனித உரிமைகள் தினம்' கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட மனித உரிமை நாள் விழாவில் நீதி, சட்டம் மற்றும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர். சட்டம், ஒழுங்கு மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளன.
""காவல் துறையினரே அதிக அளவில் மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளனர்'' என்று உயர் நீதிமன்ற நீதிபதி டி. முருகேசன் கூறியுள்ளார். ""மக்களின் தேவைகளை உணர்ந்து அதைச் செய்ய அரசுகள் தவறும்போதே மனித உரிமை மீறல்கள் தொடங்கி விடுகின்றன. மனிதனின் அனைத்து அம்சங்களும் அவனுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
காவல்துறையினர்தான் அதிக அளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றனர். ஒருவரைக் கட்டாயப்படுத்தி புகார் வாங்குவது, கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெறுவது போன்றவையும் மனித உரிமை மீறல்களே! காவல்துறையினர் தாக்கல் செய்யும் தடுப்புக் காவல் வழக்குகள் 95 விழுக்காடு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
அரசு மருத்துவர்களும் அதிக அளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றனர். சரியான சிகிச்சை அளிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு இவர்கள் மீது அதிக அளவில் உள்ளது. இதுவும் மனித உரிமை மீறல்தான்.
அனைவரும் தங்களது சுதந்திரத்தை அனுபவித்து, மற்றவர்களின் உரிமைகளில் தலையிடாமல் நடந்துகொள்ள வேண்டும்''. இவ்வாறு நீதிபதி முருகேசன் பேசியுள்ளார்.
மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய அரசாங்கமும், அதற்குத் துணை நிற்கும் காவல்துறையும் அதற்கு எதிரிடையாகச் செயல்படுவது வருத்தத்துக்குரியது. பயிரைப் பாதுகாப்பதற்குத்தான் வேலியை அமைக்கிறோம்; வேலியே பயிரை மேய்ந்தால் என்ன செய்ய முடியும்?
தருமபுரி மாவட்டத்துக்கு உள்பட்ட வாச்சாத்தி என்ற சிறிய கிராமத்தில் பழங்குடி மகளிர் பாலியல் மற்றும் வன்கொடுமை தொடர்பான வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட வனத்துறை, காவல்துறை, வருவாய்த் துறையைச் சேர்ந்த 269 பேரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர். இந்த வழக்கு 19 ஆண்டுகளாக நடைபெற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இதைப்போலவே மற்றொரு சம்பவமும் அண்மையில் நிகழ்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூர் டி. மண்டபம் பகுதியைச் சேர்ந்த இருளர் என்னும் பழங்குடி மகளிர் நால்வர் காவல்துறையினரால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட சில திருட்டு வழக்குகள் தொடர்பாக மண்டபம் கிராமத்தில் உள்ள இருளர் குடியிருப்பில் காவல்துறை விசாரணை நடத்தியது. அப்போது 4 இருளர் இனப் பெண்களையும் அழைத்துச் சென்று பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்நிலைய ஆய்வாளர் உள்பட 5 காவலர்கள் தாற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பழங்குடிப் பெண்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 5 லட்சம் நிதி உதவி வழங்கிட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். அத்துடன் காவல் துறையினர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் சட்டத்தை மீறும் வகையில் மாலை 6 மணிக்கு மேல் பெண்கள், குழந்தைகளிடம் விசாரணை நடத்தியதாகவே அவர்கள் தாற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
ஆட்சியாளர்கள் யாராக இருந்தாலும் அதிகாரத்துக்கு வந்ததும் காவல்துறையினரைக் கையில் வைத்துக்கொள்ளவே விரும்புகின்றனர்; அவர்களைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிப்பதில்லை. தங்களுக்குச் சாதகமான அதிகாரிகளையே அமர்த்திக் கொள்கின்றனர். ஆட்சித்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பந்தாடப்படுவதும் அதனால்தான்.
அரசாங்கத்துக்கு எதிராகப் போராடினால் அவர்கள்மேல் ஊழல் புகார் கூறுவதும், பொய் வழக்குப் பதிவு செய்வதும், அவர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புப் போலீஸôர் சோதனை நடத்துவதும் வாடிக்கையாகிவிட்டது. மத்திய அரசுக்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் போராடும் அண்ணா ஹசாரேவை அச்சுறுத்துவதற்காக அவருடன் இணைந்து பணியாற்றும் கிரண்பேடி மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதும் இப்படித்தான்.
அரசாங்கமாக இருந்தாலும், தனிமனிதராக இருந்தாலும் அடுத்தவர் உரிமைகளில் தலையிட அதிகாரமில்லை. ஆனால், மனித உரிமைகளுக்காகவே உலகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
உலகத்தில் போர்கள் ஏற்படும்போதெல்லாம் மனித உரிமைகள் கால்களில் போட்டு நசுக்கப்படுகின்றன; நாசமாக்கப்படுகின்றன.
இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்ததும் 1945 அக்டோபர் 24 அன்று ஐ.நா. அவை நிறுவப்பட்டது. இந்நிறுவனம் தோன்றிய உடனே மனித உரிமைகளை வரையறை செய்ய பொருளாதார, சமூகக் குழுவின் கீழ் ஆணையம் அமைக்கப்பட்டது.
இவ்வாணையம் சர்வதேச மனித உரிமைகள் மசோதாவை வரைந்தது. அதை ஐ.நா. பொதுச்சபை ஏற்றுக்கொண்ட நாளே 1948 டிசம்பர் 10. அதுவே ஐ.நா.வின் மனித உரிமைகள் பொதுப் பிரகடனம் என்று அறிவிக்கப்பட்டது.
அந்தப் பிரகடனத்தில் 30 விதிகள் இருக்கின்றன. "மனித குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுடைய பொதிந்து கிடக்கும் கண்ணியத்தையும், மறுக்க முடியா சம உரிமைகளையும்...' என்று அதன் முகவுரை குறிப்பிடுகிறது. அப்பிரகடனத்தின் விதிகள் மனித உரிமைகளை விவரிக்கின்றன.
1993-ம் ஆண்டு வியன்னாவில் நடைபெற்ற மனித உரிமைகள் மீதான உலக மாநாடு, ஏற்றுக்கொண்ட வியன்னா பிரகடனம் மற்றும் செயல்திட்டத்தின்படி மனித உரிமைகளை மேம்படுத்துவதும், பாதுகாப்பதும் பன்னாட்டு மக்களின் தார்மிகப் பொறுப்பு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய நாட்டில் இந்திய அரசு 1993-ம் ஆண்டு இதன் தொடர்பாக ஒரு சட்டத்தை இயற்றியது. அதன்படி தில்லியில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்டது; மாநிலங்களில் மாநில மனித உரிமை ஆணையங்கள் செயல்படுகின்றன.
இரண்டாம் உலகப்போரில் ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர் செய்த மனிதகுல வன்முறை இனி எப்போதுமே நிகழக்கூடாது என்ற நல்ல எண்ணத்தை முன்னிட்டு இந்த மனித உரிமைப் பிரகடனத்தை ஐ.நா. வெளியிட்டது. இதை ஏற்றுக்கொண்ட நாடுகளே அதைமீறிச் செயல்படுவது உலக சமாதானத்துக்கு விடப்பட்ட சவாலாகும்.
இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரின்போது அப்பாவி மக்களைக் கொன்று குவித்து மனித உரிமையை ராணுவம் மீறியதாக ஐ.நா. குழு குற்றம் சுமத்தியது. இதுபற்றி சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூனுக்குப் பரிந்துரை செய்துள்ளது என்றாலும் இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கை அறிவித்துள்ளது.
ஹிட்லரைக் கொடியவனாகக் கூறும் சர்வதேச நாடுகள் அவனைப்போலவே இனப்படுகொலை புரிந்த இலங்கை அதிபர் ராஜபட்ச தமிழ் மக்கள் மீது நடத்திய போர்க்குற்றங்களுக்கு நடவடிக்கை எடுக்கத் தயக்கம் காட்டுவது ஏன்?
சர்வதேச சமுதாயம் குரல் கொடுத்தாலும், ஐ.நா. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் மனித உரிமை என்ன ஆவது?ஐ.நா.வின் மீதுள்ள உலக மக்களின் நம்பிக்கை தகர்ந்து போகலாமா?
உலக மக்கள் தொகை 700 கோடியைத் தாண்டிவிட்டது. இந்நிலையில் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது. இதற்கு இந்திய நாடும் விதிவிலக்கல்ல.
ஒரு பக்கம் இந்தியா வளர்ந்து கொண்டிருக்கிறது. மறுபக்கம் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களின் தொகையும் பெருகிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு பெரும்பான்மை மக்களின் வாழ்வுரிமையும் பறிக்கப்படுகிறது.
"எங்கே மனதில் பயமின்றித் தலைநிமிர்ந்து நிற்கிறார்களோ, எங்கே அறிவுடைமை அனைவருக்கும் பொதுவில் உள்ளதோ, எங்கே துண்டு துண்டாகச் சிதறாத உலகம் உள்ளதோ - எனது தந்தையே, அங்கே எனது தேசம் விழித்தெழட்டும்' என்று தாகூர் பாடினார். இந்த மக்கள் விழித்தெழுவது எப்போது?
உலகம், தேசம், மாநிலம், மாவட்டம், ஊர் என்னும் இந்த எல்லைகள் தாற்காலிகமானவை. இந்த எல்லைகள் மண்ணைப் பிரிக்கலாம்; மக்களைப் பிரிக்க இயலாது. இதற்கு மனிதநேயமும் வேண்டும்; மனித உரிமையும் வேண்டும்.
நன்றி தினமணி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum