உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இப்போதே முறைப்படுத்துங்கள்

Go down

இப்போதே முறைப்படுத்துங்கள் Empty இப்போதே முறைப்படுத்துங்கள்

Post by nandavanam on Mon Dec 19, 2011 3:27 am

இப்போதே முறைப்படுத்துங்கள் Untitled

தெருவோரம் வசித்தாலும் அரண்மனை போன்ற வீடுகளில் வாழ்ந்தாலும், பிள்ளைச் செல்வம் இல்லாதவர் அடையும் வேதனை கொஞ்சமல்ல. "மழை பெய்த வாசலிலே மண் அளையப் பிள்ளை இல்ல...' எனும் நாட்டுப்புறப் பாடல் வரியில் தெரிகின்ற ஒரு மலடியின் கண்ணீர்க் கரிப்பு அந்த மழை அறியாதது.

மருத்துவத் தொழில்நுட்பம் வளராத காலத்தில் பல கோயில் குளங்களையும் அரச மரத்தையும் சுற்றி வந்து சாமியிடம் வரம் கேட்டதுபோன்ற நிலைமை இன்றில்லை. திருமணம் நடைபெற்ற அடுத்த ஆண்டே குழந்தை இல்லை என்றால், உடனடியாக பெற்றோரே இத்தம்பதிகளை மகப்பேறு சிறப்பு மருத்துவரிடம் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

மகப்பேறு எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுவிட்டதோ அதே அளவுக்கு மலட்டுத்தன்மையும் அதிகரித்துவிட்டது. எங்கெல்லாம் குடிநீர் ஆதாரங்கள் ரசாயனக் கழிவுகளால் மாசுபட்டுள்ளனவோ அந்தப் பகுதிகளில்தான் ஆண்மலடு, பெண்மலடு அதிகம் என்பதை ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன.

பிள்ளைச் செல்வத்துக்கான இந்த ஆர்வத்தை, பதற்றத்தை, வேதனையை மருத்துவத் துறையில் உள்ள சிலர் காசாக்கிடப் பார்க்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கருப்பை சுத்திகரித்தல் தொடங்கி, விந்து உயிர் அணுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்க மாத்திரை, சினை முட்டைக்கு மாத்திரைகள் என்று பல வழிகளில் இந்த நோயாளிகள் செலவழிக்க நேரிடுகிறது.

மருத்துவத்தின்படி இவை யாவும் அவசியமான, நோயாளிகள் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இந்தச் சிகிச்சைக்கான கட்டணங்களுக்கும், அவர்கள் பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகளுக்கும் அதிக விலை கொடுத்தாக வேண்டும். இந்த மாத்திரைகளின் உற்பத்திச் செலவுக்கும் விற்பனை விலைக்கும் உள்ள இடைவெளி மலைக்கும் மடுவுக்கும் உள்ள இடைவெளி. அந்த அளவுக்கு லாபம் பார்க்கின்றன மருந்து தயாரிப்பு நிறுவனங்கள்.

செயற்கை கருவூட்டல் முறையை நாடுவோர் அதிகரிக்கும் வேளையில், தற்போது வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விழைவோரும் அதிகரித்து வருகின்றனர். செயற்கை கருவூட்டல் முறை தோல்வியுறும் பெண்களுக்கு இப்போது வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவது பரிந்துரைக்கப்படுகிறது. இத்தகைய வாடகைத் தாய்களாக இருந்து பிள்ளை பெற்றுக் கொடுக்க சம்மதிக்கும் பெண்களும் அதிகரித்து வருகின்றனர்.

இந்தியாவுக்கு மருத்துவ உலா வருவோரில் பலர் இத்தகைய வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இங்கிலாந்து, அமெரிக்காவில் இத்தகைய வாடகைத் தாய்களை அமர்த்துவதில் பெருஞ்செலவை ஏற்படுத்துகிறது. குறைந்தது 20,000 அமெரிக்க டாலர்கள் செலவிட்டாக வேண்டும். ஆனால், இந்தியாவில் இத்தொகையில் பாதி செலவிட்டாலே போதும். இந்தியாவுக்கு வந்து, வாடகைத்தாய்க்கு பணம் கொடுத்து, மருத்துவமனைக்கும் பணம் கொடுத்துவிட முடியும்.

கருவைச் சுமக்க முடியாதபடி கருப்பை பலவீனமாக இருக்கிறது அல்லது செயற்கை கருவூட்டலில் உருவான கரு பல முறை கலைந்துபோனது என்கிற காரணத்தால் தற்போது வாடகைத் தாய் முறைக்குப் பரிந்துரைக்கப்படுகிறது. இருப்பினும், நடிகர் அமீர்கான்- கிரண் ராவ் தம்பதி தங்கள் குழந்தையை வாடகைத்தாய் மூலம் பெற்றெடுத்த செய்தி பிரபல்யம் அடைந்தபோது, இதற்கான விசாரிப்புகளும், ஆர்வமும் மேலதிகமாகியுள்ளது. தங்களை வாடகைத் தாயாகப் பதிவு செய்து கொள்ளும் ஏழைப் பெண்களும் அதிகரித்துள்ளனர்.

இந்த வாடகைத் தாய்களைக் கொண்டு வருவதிலும் அவர்களுக்குத் தர வேண்டிய பணத்தை தீர்மானிப்பதிலும் இடைத்தரகர்கள் இருக்கிறார்கள். வாடகைத் தாய்கள் குழந்தை சுமக்கும் காலம் முழுவதும் மருத்துவமனைக் கண்காணிப்பில் ஆரோக்கியமான உணவுக்கு உத்தரவாதம் செய்வதோடு குழந்தை பெற்றுத் தந்தவுடன் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை தந்து தொப்புள் கொடி உறவை அறுத்துவிடுகிறார்கள்.

இந்திய மருத்துவத்தில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவது அனுமதிக்கப்பட்டுள்ளதே தவிர, இதற்கான சட்டங்கள் இன்னும் உருவாக்கப்படவில்லை. மணம் புரியும் தம்பதிகளில் நூற்றுக்குப் பத்து பேர் கருவுறல் பிரச்னைகளைச் சந்திக்கும் நிலைமை இருந்தும்கூட, இன்னமும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவது குறித்த தெளிவான சட்டமும் நெறிமுறையும் உருவாக்கப்படவில்லை.

யார் யாரெல்லாம் வாடகைத் தாயாக இருக்க முடியும்? இவர்கள் ஒப்புக்கொள்ளும் தொகையை இடைத்தரகர்கள் இல்லாமல் கிடைக்கச் செய்வது எப்படி? பேறு காலத்தில் வாடகைத் தாய் இறந்தால் அவரது குடும்பத்துக்கு யார் இழப்பீடு கொடுப்பது- மருத்துவமனையா அல்லது கருவுக்குச் சொந்தமான தம்பதியா? இவை யாவும் நெறிமுறைப்படுத்த சட்டம் தேவை.

மேலும், ஒரு வாடகைத் தாய் பின்னாளில் அந்தக் குழந்தையை அணுகவோ, அல்லது பெற்றோரை மிரட்டிப் பணம் பறிக்கவோ முடியாதபடி ரகசியம் காக்கும் வழிமுறைகளும், வாடகைத் தாய் பெற்றெடுத்த குழந்தை தங்களுடைய கரு அல்ல என்பதை டிஎன்ஏ சோதனையில் அறியவந்து, குழந்தையை ஏற்கத் தம்பதி மறுத்தால், குழந்தையை யார் ஏற்றுக்கொள்வது? இத்தவறுக்கு மருத்துவமனை தர வேண்டிய இழப்பீடு எவ்வளவு என்பன போன்ற சிக்கல்களுக்கு தீர்வும் முறையான சட்டத்தால் மட்டுமே சாத்தியம்.

இந்தியாவில் அதிக அளவில் சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சையில் நடைபெற்ற முறைகேடுகள், வாடகைத்தாய் விவகாரத்திலும் ஏற்பட்டுவிடக்கூடாது. மலட்டுத்தன்மை விவகாரத்தில் அரசும் மலடாக இருக்கலாமா!

நன்றி தினமணி


nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum