உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஏழைகளை உருவாக்கும் ஓய்வூதியத் திட்டம்

Go down

ஏழைகளை உருவாக்கும் ஓய்வூதியத் திட்டம் Empty ஏழைகளை உருவாக்கும் ஓய்வூதியத் திட்டம்

Post by nandavanam on Sat Dec 17, 2011 12:32 am

ஏழைகளை உருவாக்கும் ஓய்வூதியத் திட்டம் Jj_kovai_1

ஓய்வூதியம் பெறும் ஒவ்வொருவரும் தாங்கள் உயிருடன் இருப்பதற்கான சான்றை ஒவ்வோர் ஆண்டும் சமர்ப்பிக்க வேண்டும். உரியவருக்கே ஓய்வூதியம் போய்ச் சேருவதை உறுதி செய்யவே இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்தச் சொற்பத் தொகையை வைத்துக் கொண்டு இவர்களால் எப்படிப் பிழைத்திருக்க முடிகிறது என்பதை அறிந்து கொள்ளவே இத்தகைய சான்றைக் கேட்கிறார்களோ என்கிற சந்தேகம் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.

பணிக் காலத்தில் வாங்கிய சம்பளம் எவ்வளவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், ஓய்வூதியம் என்னவோ 1,600 அல்லது 1,700 ரூபாய்க்கு மேல் கிடைக்காது. 50 ஆயிரம் சம்பளம் பெற்றவராக இருந்தாலும் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் பெற்றவராக இருந்தாலும் இதுதான் வரம்பு. 1995-ம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதி கொண்டு வரப்பட்ட ஓய்வூதியத் திட்டம்தான் இப்படியொரு நடைமுறைக்கு ஒத்துவராத கட்டுப்பாட்டை விதித்திருக்கிறது. வாங்கும் சம்பளம் எவ்வளவு அதிகமாக இருந்தாலும், ரூ.6,500 -க்கு மட்டும்தான் ஓய்வூதியம் கணக்கிட்டு வழங்கப்படும். இந்தத் திட்டத்தை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்ஓ) நிர்வகித்து வருகிறது.

"மாத ஓய்வூதியம் = ஓய்வூதியம் பெறுவதற்கான சம்பளம் ஷ் பணியாற்றிய ஆண்டுகள் / 70' என்பதுதான் ஓய்வூதியத்தை நிர்ணயிப்பதற்கான சூத்திரம். ஓய்வூதியம் பெறத் தகுதியான அதிகபட்ச சம்பளம் ரூ.6,500 என வைத்துக் கொண்டால், 1995-ம் ஆண்டில் பணியில் சேர்ந்து 33 ஆண்டுகள் பணியாற்றி, 2028-ஆண்டில் ஓய்வு பெறப் போகும் ஒருவருக்கு அப்போது கிடைக்கப்போகும் ஓய்வூதியம் வெறும் 3,250 ரூபாய் மட்டுமே. பணிக்காலம் குறைந்தாலோ, சம்பளம் குறைவாக இருந்தாலோ மாத ஓய்வூதியம் ரூ.1,600 மட்டுமே கிடைக்கும். இந்தத் தொகையை வைத்துக் கொண்டு ஒருவர் எப்படிக் குடும்பம் நடத்துவது? அதுவும் 2028-ம் ஆண்டில். இந்தத் தொகை உத்தேசமாகவோ, அனுமானத்திலோ கணக்கிடப்பட்டதல்ல. உண்மையில் இதைவிடவும் மிகக் குறைந்த தொகையையே பலர் ஓய்வூதியமாகப் பெற்று வருகின்றனர். 100 ரூபாய் 200 ரூபாய் என்கிற அளவில்கூட ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

2010-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி புள்ளிவிவரப்படி நாடு முழுவதும் 35,10,006 பேர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இவர்களில் 14 லட்சத்துக்கும் அதிகமானோர் மாதம் 500 ரூபாய்க்கும் குறைவான ஓய்வூதியமே பெறுகிறார்கள் என்பதே அதிர்ச்சியளிக்கும் உண்மை.

இதே காலகட்டத்தில் ஓய்வூதியத் திட்டத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களின் எண்ணிக்கை 5,93,85,325. இவர்கள் செலுத்தும் தொகை ரூ.1,09,166.57 கோடி என்று அந்தப் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும் என்பது தொழிலாளர்களின் நீண்டகாலக் கோரிக்கை. ஆனால், இப்போது வழங்கப்பட்டு வருவதே தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு பெரும் சுமையாக இருப்பதாகவும், நீண்ட காலத்துக்கு இது சாத்தியமில்லை என்றும் அரசு கூறி வருவதுதான் விசித்திரம்.

ஏப்ரல் 2004 முதல் மார்ச் 2006 வரையிலான கால கட்டத்தில் ஓய்வூதியம் வழங்குவதில் ரூ.22,659 கோடி பற்றாக்குறை ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டது. அண்மையில் இது ரூ.54 ஆயிரம் கோடியாக அதிகரித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இந்த அளவுக்குப் பற்றாக்குறை அதிகரித்ததற்கு ஓய்வூதிய மதிப்பீட்டாளரின் ஆலோசனையைப் பெறாமலேயே ஓய்வூதியத் திட்டத்தை மாற்றியமைத்ததுதான் காரணம் என்று 2009-ம் ஆண்டு மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கை சமர்ப்பித்தது. ஓய்வூதியத்துக்கான அதிகபட்ச ஊதிய வரம்பு ரூ.5,000 என்று இருந்ததை ரூ.6,500-ஆக 2001-ம் ஆண்டில் உயர்த்தப்பட்டதைத்தான் அந்த நிபுணர்கள் குழு குறிப்பிடுகிறது. ஓய்வூதியத் திட்டமே தொழிலாளர், வேலையளிப்பவர் ஆகிய இருவரின் பங்களிப்பின் மூலம் இயங்கும் திட்டம்தான். அப்படியானால் பங்களிப்பை அதிகரித்தால், ஓய்வூதியத்தையும் அதிகரிக்க முடியும் என்பதுதான் அடிப்படை.

ஆனால், வேலை வழங்குவோர் அல்லது அரசிடமிருந்து அதிகமான பங்களிப்பு வருவதற்கான சாத்தியங்கள் இல்லை. அரசு ஊழியர்களுக்கே ஓய்வூதியம் வழங்காமல், சுமையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனால் மற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கிடைப்பது பற்றி அரசு அக்கறையுடன் முயற்சிக்கும் என்று எதிர்பார்ப்பதில் நியாயமில்லை.

2004-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின்படி, ஓய்வூதியம் இவ்வளவுதான் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. அரசு ஊழியர்கள் தங்களது ஊதியத்தில் 10 சதவீதம் தொகையை ஓய்வூதியத் திட்டத்துக்கு வழங்க வேண்டும். ஓய்வு பெறும் காலத்தில் உள்ள சந்தை நிலையைப் பொருத்து அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும். அதாவது எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பது தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கும். ஆனால், எவ்வளவு திரும்பக் கிடைக்கும் என்பது இறுதிவரை மர்மமாக இருக்கும். அரசு ஊழியர்களுக்கே இந்த நிலை என்றால், மற்றவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.1,000 என நிர்ணயிக்க வேண்டும் என்கிற கோரிக்கை நெடுங்காலமாக இருந்து வருகிறது. நிதிச் சுமையைக் காரணம் காட்டி இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வரும், அதே வேளையில், எந்த விதமான பங்களிப்பும் இல்லாமல் மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகின்றன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அரசால் போதுமான ஓய்வூதியம் வழங்க முடியும். ஆனாலும் பிடிவாதமாக மறுத்து வருகிறது என்பதே இதன் மூலம் தெரியவரும் உண்மை.

இந்த நாட்டில் ஏழைகளை எங்கும் போய்த் தேட வேண்டியதில்லை. ஓய்வூதியம் பெறும் அனைவரும் ஏழைகள்தான். அரசுதான் அவர்களை ஏழ்மையில் தள்ளுகிறது. ஓய்வூதிய நிதிக்காக வழங்கும் தொகையை வேறு வகையில் முதலீடு செய்தால்கூட இதைவிட அதிகமான தொகை கிடைக்கும் என்பதே உண்மை.

தொழிலாளர்களுக்கு 9 அம்சங்களில் குறைந்தபட்ச வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என சர்வதேச தொழிலாளர் அமைப்பான ஐஎல்ஓ உத்தரவிட்டிருக்கிறது. அதில் வயதான காலத்தில் வழங்கப்படும் உதவித் தொகையும் அடங்கும்.

இதன்படி, அனைத்து நாடுகளும் அனைத்துப் பிரிவினருக்கும் சீரான ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டியது அவசியமாகிறது. ஆக, 1995-ம் ஆண்டில் அறிமுகமான ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்தவர்கள் அனைவரும் அரசு ஊழியர்களுக்கு இணையான ஓய்வூதியத்தைக் கோரும் தகுதியுடையவர்களாகிறார்கள். ஆனால், ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தும் வருங்கால வைப்புநிதி அமைப்பின் ஊழியர்களுக்கும் அந்தத் திட்டத்தில் சேர்ந்திருக்கும் தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்குவதில் பெருத்த வேறுபாடு நிலவுகிறது.

எல்லோருக்கும் ஒரே மாதிரியான ஓய்வூதியத் திட்டம்தானே தேவை, இதோ தருகிறோம் என்று கூறி எந்தச் சலுகையுமில்லாத ஓய்வூதியத் திட்டத்தை அரசு ஊழியர்களுக்கும் அரசு இப்போது அமல்படுத்தியிருக்கிறது. அதாவது, செருப்புக்கேற்றபடி காலை வெட்டியிருக்கிறார்கள். இதுதான் அரசின் தந்திரம். ஆனாலும் முரண்பாடு நீங்கவில்லை.

அரசு ஊழியர்களுக்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின்படி, ஒவ்வொரு ஊழியரும் தங்களது மாத அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 10 சதவீதத்தை ஓய்வூதியத் திட்டத்துக்கு அளித்துவிட வேண்டும். அரசும் அதே அளவு பணம் வழங்கும். அதிகபட்ச ஊதிய வரம்பு என்று எதுவும் கிடையாது.

ஆனால், 1995-ம் ஆண்டின் ஓய்வூதியத் திட்டத்தின்படி, ஊழியர்கள் தங்களது ஊதியத்தில் 12 சதவீதத்தை ஓய்வூதிய நிதிக்கு வழங்க வேண்டும். வேலை அளிக்கும் நிறுவனங்களும் இதே அளவு பணத்தை வழங்குவார்கள். ஆனால், அதிகபட்ச ஊதிய வரம்பு ரூ.6,500தான்.

அதற்கு மேல் எவ்வளவு ஊதியம் பெற்றாலும் ரூ.6,500க்கு எந்த அளவுக்கு ஓய்வூதியம் கிடைக்குமோ அதுதான் வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தின்படி நிறுவனங்களின் பங்களிப்புக்கு எந்தவித உச்சவரம்பும் கிடையாது என்றாலும், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் தொகை வழங்குவதற்கு யாரும் முன்வர மாட்டார்கள்.

இந்த முரண்பாட்டால், தனியார் நிறுவனங்களில் ரூ.6,500க்கும் அதிகமாக ஊதியம் பெறுவோருக்குக்கூட மிகக் குறைந்த ஓய்வூதியமே கிடைக்கிறது. அதே நேரத்தில் அரசு அமைப்புகளில் குறைந்த ஊதியத்துடன் பணியாற்றும் ஊழியர்கள்கூட ஓரளவு நல்ல தொகையைப் பெறுகிறார்கள்.

இப்படி 1995-ம் ஆண்டில் அறிமுகமான ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்த பெரும்பாலானவர்கள் வறுமைக் கோட்டுக்கு அரசு நிர்ணயித்திருக்கும் அளவைக் காட்டிலும் மிகக் குறைவாக ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள். இவர்கள் தங்களது இறுதிக் காலத்தை துயரத்திலேயே கழிக்க வேண்டியிருக்கிறது.

இந்த வகையில் ஏழைகள் உருவாவதைத் தடுக்க வேண்டுமெனில் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அரசு நிர்ணயிக்க வேண்டும். கடைசியில் பெற்ற ஊதியத்தில் பாதியளவு ஓய்வூதியம் வழங்குவதே நியாயமானதாக இருக்கும். மூத்த குடிமக்கள் தொடர்பான விஷயம் என்பதால், அரசு இதில் மெத்தனமாக இருந்துவிடக்கூடாது. அரசின் மோசமான கொள்கையால் ஏழ்மையில் தள்ளப்பட்ட இவர்களை மீட்பதும் அரசின் கடமையே.

நன்றி தினமணி

nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum