உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

வருந்த வைக்கும் மருந்து!

Go down

வருந்த வைக்கும் மருந்து! Empty வருந்த வைக்கும் மருந்து!

Post by nandavanam on Thu Dec 15, 2011 12:48 am

வருந்த வைக்கும் மருந்து! Medicine

இந்தியாவில் அனைவருக்கும் மருந்து மாத்திரைகளை இலவசமாக அளிப்பதென்பது சாத்தியமில்லைதான். ஆனால், மிகவும் மலிவான விலையிலும், நியாயமான விலையிலும் கிடைக்கச் செய்வது என்பது சாத்தியமானதுதான்.

12-வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் (2012-2017), மக்களுக்கு மலிவு விலையில் மாத்திரை மருந்துகள் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டு வருகிறது மத்திய அரசு. ஐந்தாண்டு திட்டக் காலத்தில் சுகாதாரத் துறையில் என்ன செய்வது என்பது குறித்து பணிக்குழு விவாதித்தபோது, இந்த மலிவு விலை மாத்திரை மருந்து குறித்து ஆலோசனை வழங்கியுள்ள மத்திய சுகாதாரத் துறை செயலர் கே. சந்திர மௌலி, தமிழ்நாட்டு அரசைப் பின்பற்றுவோம் என்ற ஆலோசனையையும் வழங்கியுள்ளார்.

தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் என்ற அமைப்பு அரசு மருத்துவமனைகளுக்கான அனைத்து மருந்துகள், மாத்திரைகள், அறுவைச் சிகிச்சை மற்றும் நோய் கண்டறியும் கருவிகள் அனைத்தையும் கொள்முதல் செய்யும் பணியைச் செய்து வருகின்றது.

உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக இந்தக் கொள்முதலைச் செய்வதால் அரசுக்கு மிகமிகக் குறைந்த விலையில் மருந்து மாத்திரைகள் கிடைக்கின்றன. அதாவது, வெளிச்சந்தையில் ஒரு மாத்திரைக்கு என்ன விலையோ அதில் பத்தில் ஒரு பங்கு விலைக்கே மாத்திரைகளைக் கொள்முதல் செய்ய முடிகிறது. உதாரணமாக, ஒரு பாரசிட்டமால் மாத்திரை விலை வெளிச்சந்தையில் ஒரு ரூபாய் என்றால், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் இந்த மாத்திரையை உற்பத்தியாகும் இடத்தில் மொத்தக் கொள்முதல் செய்யும்போது ஒரு மாத்திரையின் விலை வெறும் பத்து காசுகள் மட்டும்தான். விலை குறைவு என்பதால் தரம் குறைந்த மாத்திரைகள் என்று அர்த்தம் இல்லை.

ஒரு மருத்துவமனையில் சிகிச்சையின் பெரும்பகுதி செலவு மருந்து மாத்திரைகளுக்காகத்தான் செலவிடப்படுகிறது. மருத்துவத் துறையின் கணக்கின்படி 50 விழுக்காடு முதல் 80 விழுக்காடு வரை மருந்து மாத்திரை செலவுகள்தான். டாக்டருக்கான செலவு வெறும் ஆலோசனை என்கின்ற நிலையில் மிகக் குறைவான விழுக்காடுதான். அறுவைச் சிகிச்சை என்கின்றபோதுதான் ஒரு நோயாளி தனது மருத்துவச் செலவில் பாதியை மருத்துவமனை மற்றும் மருத்துவருக்காகச் செலவிடுகிறார்.

தமிழ்நாட்டைப் பின்பற்றி, தற்போது கேரள மாநிலமும் மருந்து கொள்முதலில் தானே நேரடியாக ஈடுபடத் தொடங்கிவிட்டது. பிகார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களும் இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் இந்த மருந்து மாத்திரைக் கொள்முதலில் அனைத்து மாநிலங்களையும் நேரடியாக ஈடுபடச் செய்வது என்பதுதான் தற்போது ஐந்தாண்டு திட்டப் பணிக்குழுவில் விவாதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்தத் திட்டம் அரசு மற்றும் அரசு இணைந்து செயல்படும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மட்டும்தான் பொருந்தும். இருப்பினும், இதுவே 52 விழுக்காடு நோயாளிகளுக்குப் பயன் அளிக்கும் என்கின்றது அரசு. இந்தத் திட்டத்தை 12-வது ஐந்தாண்டு திட்டக் காலம் முழுவதற்கும் செயல்படுத்த ரூ. 28,675 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை அனைத்து மக்களுக்கும் விரிவாகக் கொண்டு செல்ல இடமிருக்கிறது. அரசு மருத்துவமனைகளுக்கு வருவோருக்கு மருந்து மாத்திரைகளை இலவசமாகவும், வெளிச்சந்தையைவிட மிக மலிவான விலையில், அதாவது 75 விழுக்காடு குறைந்த விலையில், இந்த மாத்திரைகளை விற்பனை செய்வது சாத்தியம்.

அதற்காக அரசே மருத்துவமனைகளில் மருந்துக் கடைகளைத் திறக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவ்வாறு செய்தால், கூட்டுறவு பண்டக சாலையில் இணைப்பாக உள்ள மருந்துக்கடைகள் தூசுபடிந்து நட்டத்தில் இருப்பதைப் போன்ற நிலைதான் உருவாகும். இந்த விவகாரத்தைப் பொருத்தவரை, மருந்து விற்பனைக்குத் தகுதி பெற்ற எவரும் அரசு வழங்கும் மருந்து மாத்திரைகளை மட்டும் விற்பனை செய்யும் மருந்துக்கடைகள் தொடங்க அனுமதிக்கலாம். விற்பனையில் கிடைக்கும் கமிஷன் அவர்களது லாபம். இவ்வாறு செய்தால், அனைத்து ஊர்களிலும் அரசு கொள்முதல் செய்யும் மாத்திரைகள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும்.

அரசு அலுவலகமாகச் செயல்படும் அரசு மருத்துவமனைகளை, தொண்டு மனப்பான்மையுடன் செயல்பட வைக்க முடியாத நிலைமைதான் தொடர்கிறது. மருத்துவம் என்பது சேவையாக இல்லாமல், தொழிலாக மாறிவிட்ட நிலைமை குறைந்த மக்கள்தொகையும், பொருளாதார வளமையும் உள்ள மேலைநாடுகளுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். இந்தியாவுக்கு அது ஏற்புடையதாக இருக்காது.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள், மருத்துவமனைகளை வளப்படுத்தத்தான் உதவுகின்றன. அதுமட்டும் அல்லாமல், மருத்துவக் காப்பீடு வழங்கும் நிறுவனங்கள் மக்கள் வரிப்பணத்தில் கொழிக்கவும், அதன் மூலம் ஆளும் கட்சிக்கு மிகப்பெரிய வருமானத்தை மறைமுகமாகப் பெற்றுத் தரவும்தான் உதவுகின்றன என்பதைப் புள்ளிவிவரத்துடன் பலமுறை எழுதிச் சோர்ந்துவிட்டோம். சாமானியனுக்கு மருத்துவ உதவி என்பது, அரசு மருத்துவமனைகளில் தரமான, ஊழலற்ற, அர்ப்பணிப்புடனான சேவையின் மூலம் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும், முடியும்.

100 விழுக்காடு அன்னிய நேரடி முதலீடு மருந்து தயாரிப்புத் துறையில் உள்ளதால், அவர்கள் இந்தியாவில் உள்ள ரான்பாக்சி போன்ற நல்ல நிறுவனங்களை விலைக்கு வாங்கிவிட்டனர். இந்த நிலைமை முழுவீச்சில் நடந்தால், அவர்கள் வைக்கும் விலைதான் மருந்தின் விலை. ஆகவே, இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்தின் விலையை நிர்ணயிக்க வேண்டிய பொறுப்பையும் அரசு ஏற்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

நன்றி தினமணி


nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum