உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

சீனாவுடன் போரிட வேண்டுமா, ஏன்?

Go down

சீனாவுடன் போரிட வேண்டுமா, ஏன்?  Empty சீனாவுடன் போரிட வேண்டுமா, ஏன்?

Post by nandavanam on Sun Dec 04, 2011 3:58 am

சீனாவுடன் போரிட வேண்டுமா, ஏன்?  Dragonvstiger


இந்திய - சீனப் போர் முடிந்து 50 ஆண்டுகள் ஆகும் நிலையில், இந்தியாவின் கடந்த காலத் தோல்விக்கும் எதிர்கால வெற்றிக்கும் நம்முடைய ஆங்கில ஊடகங்கள் 'கண்டுபிடிக்கும்’ காரணங்கள் புல்லரிக்க வைக்கின்றன!

''சீன ராணுவத்தினரின் எண்ணிக்கை 22.85 லட்சம்; இந்திய ராணுவத்தினரின் எண்ணிக்கை 13.25 லட்சம். சீனாவிடம் 309 போர்க் கப்பல்களும் 1,200 போர் விமானங் களும் இருக்கின்றன. இந்தியாவிடம் 66 போர்க் கப்பல்களும் 100 போர் விமானங்களும் மட்டுமே இருக்கின்றன. எப்படிப் போதும்?'' என்பதே நம்முடைய ஊடகங்களின் தலைபோகும் கவலை.

சரி, இந்தியா - சீனா இடையே இன்னொரு போர் மூண்டால், அதற்கு இந்தியா எப்படித் தயாராக வேண்டும்? நம்முடைய ஊடகங்கள் முன்வைக்கும் தீர்வுகள் இவை: ''இந்திய ராணுவத்துக்காக அரசு 2.2 லட்சம் கோடியை ஒதுக்க வேண்டும்; குறைந்தபட்சம் 24 ஆயிரம் கோடிக்கு 2,700 பீரங்கி கள், 10 ஆயிரம் கோடிக்குத் தொடர்புக் கருவிகள், 9 ஆயிரம் கோடிக்கு ஏவுகணைகள் வாங்க வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில் படையில் மேலும் 90 ஆயிரம் வீரர் களைச் சேர்க்க வேண்டும்.''

கடந்த ஒரு மாதமாக இந்தியாவின் இந்த 'இமாலயத் தேவை’ மீண்டும் மீண்டும் செய்தியாகிவருவது அரசுக்கும் ஆயுத வியாபாரிகளுக்கும் வசதியாகி இருக்கிறது. நம்முடைய பாதுகாப்புத் துறை இப்போது 64 ஆயிரம் கோடி திட்டம் ஒன்றை நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி இருக்கிறது. சில நாட்களுக்கு முன் 4 ஆயிரம் கோடிக்கு இஸ்ரேலிய அவாக்ஸ் போர் விமானங்களை வாங்க அனுமதி அளித்திருக்கிறது இந்திய அரசு.

இந்திய - சீன ராணுவ வலிமையை ஒப்பிடுபவர்கள், சீன எல்லையோரத்தில் இருக்கும் வியூக முக்கியத்துவம் வாய்ந்த தவாங் சாலை மண் சாலையாக இருப்பதைச் சுட்டிக்காட்டத் தவறுவது இல்லை. நம்முடைய ராணுவத் தளவாடங்களை எல்லைப் பகுதிக்கு எடுத்துச் செல்ல உதவும் வியூக முக்கியத்துவம் வாய்ந்த சாலை இது. சுமார் 320 கி.மீ. நீளமுள்ள இந்தச் சாலை குண்டும் குழியுமாக மண் சாலையாகக் காட்சி அளிப்பதையும் மறுபுறம் சீனா தன் எல்லையோரப் பாதைகளை கான்கிரீட் சாலைகளாலும் ரயில் தடங்களாலும் நிறைத்திருப்பத்தையும் சுட்டிக்காட்டுகிறார்கள். இது புதிதல்ல. கார்கில் யுத்தத்துக்குப் பின் 12 ஆண்டுகள் கழித்தும்கூட அந்தப் பகுதியில் உள்ள சாலைகள் இன்னமும் மோசமாகவே இருக்கின்றன. நம்முடைய எல்லையோரச் சாலைகள் பல ராணுவத் தளவாடங்களை உடனடியாக எடுத்துச் செல்லும் அருகதை அற்றவை. ஆனால், இதற்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு வேண்டும் என்று கூச்சல் போடுபவர்கள் ஏற்கெனவே ஆண்டுக்கு லட்சம் கோடி ராணுவத்துக்குக் கொடுக்கிறோமே அதில் இதைவிடவெல்லாம் என்ன முக்கியமாக செய்து கிழிக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டால் நன்றாக இருக்கும்.

இந்தியாவை சீனாவுடன் ஒப்பிட்டு எழுதுவது இந்தியர்களுக்கு சுவாரஸ்யத்தைத் தரலாம். ஆனால், உண்மை நிலவரம் இந்தியர்களால் சகித்துக்கொள்ள முடியாதது!
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் தனிநபர் உற்பத்தி இந்தியாவைக் காட்டிலும் சீனாவில் 4 மடங்கு அதிகம். ஓர் உதாரணம், இந்தியக் குடிமகனின் சராசரி ஆண்டு வருமானம் கடந்த 2009-ல் 3,200 டாலர்கள். சீனா 9 ஆண்டுகளுக்கு முன் எட்டிய அளவு இது.

ஒரு சீன விவசாயி சராசரியாக ஒரு ஹெக்டேருக்கு உற்பத்தி செய்யும் தானியத் தின் அளவு 10,500 கிலோ; இந்திய விவசாயி 2,203 கிலோ.
கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்துக்காக சீன அரசு செலவிடும் தொகை இந்தியாவைக் காட்டிலும் 4 மடங்கு அதிகம். முத்தடுப்பூசி போடப்படும் குழந்தைகள் எண்ணிக்கை சீனாவில் 97 சதவிகிதம்; இந்தியாவில் 66 சதவிகிதம்.
சீனாவில் ஒரு குடிமகனின் சராசரி ஆயுள் 73.5 ஆண்டுகள்; இந்தியாவில் 64.4 ஆண்டுகள். சீனாவில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 94 சதவிகிதம்; இந்தியாவில் 63 சதவிகிதம். உயர்கல்விக்குச் செல்வோரின் எண்ணிக்கை சீனாவில் 25 சதவிகிதம்; இந்தியாவில் 13 சதவிகிதம்.

கடந்த 30 ஆண்டுகளில், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் எண்ணிக்கையை 64 சதவிகிதத்தில் இருந்து 10 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது சீனா. இந்தியா அல்ல; உலகின் எந்த ஒரு நாட்டுடனும் இதை ஒப்பிடவே முடியாது.

இந்தப் புள்ளிவிவரங்களால் எல்லாம் எந்த உறுத்தலும் அடையாதவர்களை ராணுவப் புள்ளிவிவரங்கள் மட்டும்எப்படி வருத்துகின்றன? இந்தியா சீனாவுடன் போட்டி போடுவதைவிடக் கற்றுக்கொள்ள முயல்வதே புத்திசாலித்தனம்.

அமெரிக்காவுடன் ஒரு கையைக் குலுக்கிக்கொண்டே இரானுடன் இன்னொரு கையைக் குலுக்க சீனாவால் முடிகிறது. வட கொரியாவை அச்சுறுத்த தென் கொரியாவுக்கு அமெரிக்கக் கப்பல்கள் வந்தால், தயவுதாட்சண்யமின்றி சீனாவால் எச்சரிக்க முடிகிறது. எந்த நாட்டின் மீது நேசப் படைகள் புகுந்தாலும் சீனாவால் கண்டிக்க முடிகிறது. இந்தியாவால் முடிகிறதா?

இந்தியாவைச் சுற்றியுள்ள அத்தனை நாடுகளும் சீனாவின் நெருக்கமான கூட்டாளிகள். நமக்கோ மறைமுக எதிரிகள். காரணம், என்ன? நாம் முதலில் வளர்த்தெடுக்க வேண்டியது ராஜதந்திரத் துறையையா, பாதுகாப்புத் துறையையா?

இந்தியாவில் விற்பனையாகும் மூன்றில் ஒரு பொருள் சீனாவில் இருந்து இறக்குமதியாவது. இந்திய உற்பத்தித் துறைக்கான 25 சதவிகிதப் பொருட்கள் சீனாவில் இருந்தே இறக்குமதி ஆகின்றன. இந்தியாவுக்கான ஏற்றுமதிப் பொருட்களின் விலையை 10 சதவிகிதம் வரை சீனா இந்த ஆண்டு உயர்த்தியது. இந்தியாவில் விலைவாசி உயர்வு ஏற்பட இதுவும் ஒரு காரணம் என்கிறது பொருளாதாரக் கொள்கை ஆய்வு மைய அறிக்கை. இதையும்கூட மறைமுகத் தாக்குதலாகக் கருதலாம் இல்லையா?

திபெத்தில் இருந்து இந்தியா நோக்கிப் பாயும் நதிகளுக்குக் குறுக்கே பெரிய பெரிய அணைகளைக் கட்டிக்கொண்டு இருக்கிறது சீனா. நீர்ப் பங்கீட்டில் தகராறு வந்தால், நீராதாரத்துக்கு மாற்று ஏற்பாடுகள் என்ன?

இந்தியா முதலில் தன் சொந்தக்காலில் நிற்கப் பழக வேண்டும். பிறகு, அதன் கையில் இருக்கும் அரிவாளுக்குச் சாணை தீட்டுகிறவர்கள் தீட்டலாம்!

நன்றி ஆனந்த விகடன்


nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum