உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

வலிப்பு நோயை வெல்ல தேவை விழிப்புணர்வு

Go down

வலிப்பு நோயை வெல்ல தேவை விழிப்புணர்வு Empty வலிப்பு நோயை வெல்ல தேவை விழிப்புணர்வு

Post by nandavanam on Sat Nov 19, 2011 3:28 am

வலிப்பு நோயை வெல்ல தேவை விழிப்புணர்வு 21a

ஓவ்வோராண்டும் இந்திய வலிப்பு நோய் விழிப்புணர்வு நாள் நவம்பர் 17-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. 2001-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி இந்தியாவில் 5.5 லட்சம் மக்கள் வலிப்பு நோயால் துன்பப்படுகின்றனர். இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் 50 ஆயிரம் என்ற அளவுக்கு அதிகரித்து வருகிறது.

வலிப்பு நோயாளிகளுள் 74% பேர் கிராமப்புற மக்கள் ஆவர். கிராமப்புற வலிப்பு நோயாளிகளுள் 75% பேர் தகுந்த சிகிச்சை இன்றிப் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். போதிய கல்வி அறிவு, பொருளாதார வசதி ஆகியவை இல்லாமை இதற்குக் காரணம்.

கிராமப்புற மக்களின் வலிப்பு நோயை எப்படித் தீர்ப்பது என்பதே இன்றைய கேள்வி.
"இது வலிப்பு நோய்' என்று சொன்ன அளவிலேயே "ஐயோ அதுவா? மோசமான நோய் ஆயிற்றே. அதைத் தீர்க்கவே முடியாதே, மூளை மழுங்கிவிடுமே. இறுதியில் பைத்தியம் ஆக்கிவிடுமே' என்று அலறும் அளவுக்குப் பொது மக்களிடையே வலிப்பு நோய் பற்றிய கருத்து நிலைத்துவிட்டது.
கல்லாமை, அறியாமை, வறுமை, அச்சம், மூடநம்பிக்கை போன்றவற்றால் இக்கருத்து இன்றும் கிராம மக்களிடையே நிலைபெற்றுள்ளது. இந்தக் கருத்து மிகவும் தவறானது, வருந்தத்தக்கது.

வலிப்பு நோய் என்பது மூளை தொடர்பான நோய். எதனால் வலிப்பு நோய் வருகிறது? கருவுற்ற பெண்ணுக்கு உண்டாகும் ரத்த அழுத்தம், சர்க்கரை, வலிப்பு போன்றவை கருவில் உள்ள குழந்தை மூளையில் சிறு சிதைவை ஏற்படுத்தி, பிறந்த பிறகு குழந்தைக்கு வலிப்பு நோயை உண்டாக்கிவிடும். இதைத் தடுக்க கருவுற்ற பெண்ணுக்கு மருத்துவர் கண்காணிப்பு மிகவும் அவசியம். இவ்வாறு வலிப்பு நோயாளிகளுள் 75% பேருக்குக் கருக்காலத்தில் மூளையில் ஏற்படும் சிறு சிதைவாலேயே குழந்தைப் பருவம் முதலே வலிப்பு நோய் ஏற்படுகிறது. கருவுற்ற நாள் முதல் ஒரு பெண்ணை அவள் குடும்பத்தாரும் சமூகமும் அவளது உடல் நலத்தையும் மனநலத்தையும் பேணிப் பாதுகாக்க வேண்டும்.

பிறந்த குழந்தை, பலவித தொற்று நோய்களால் பீடிக்கப்படும் வாய்ப்பு உண்டு. அவற்றையெல்லாம் தடுக்க குழந்தை மருத்துவரின் கண்காணிப்பில் அக் குழந்தையைப் பராமரிக்க வேண்டும். தொற்று நோய்களிடமிருந்து அக்குழந்தையைக் காக்க தடுப்பூசி போட்டு நோய்த் தடுப்பாற்றலை வளர்க்க வேண்டும்.

இவ்வாறு செய்வதால் அக்குழந்தை நல்ல உடல் நலத்துடன் மூளைச்சிதைவு சிறிதும் இன்றி மன வளர்ச்சியுடனும் வளரும். இதனால் 99% குழந்தைகளுக்கு வலிப்பு நோய் வராமல் தடுக்கப்பெறும்.
வலிப்பு நோய் கட்டுப்படுத்தப்பட்ட குழந்தை கட்டாயம் பள்ளிக்குச் செல்ல வேண்டும். அக்குழந்தையைப் பள்ளியில் அனுமதிக்க நிர்வாகம் மறுத்தால் அதன்மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம். வலிப்பு நோய் கட்டுப்படுத்தப்படாத குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பாமல் தனியாக வீட்டில் படிக்க வைக்கலாம்.

பெரும்பாலும் இந்நிலை ஏற்படாது. புதிய மருந்துகள் மூலம் வலிப்பு நோயைக் கட்டுப்படுத்திவிடலாம்.
இளவயதினர் புகைபிடித்தால், அவர்களுக்கு மூளை ரத்தக் குழாய்களில் பெரிதும் தீமை ஏற்படுகிறது. மது, சாராயம், போதைப் பொருள் போன்றவற்றை நுகர்ந்தால் அவை இளவயதினருக்கு நேர்முகமாகவும் மறைமுகமாகவும் மூளைச்சிதைவை ஏற்படுத்துகின்றன.

போதையில் வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் ஏற்பட்டுத் தலைக்காயம் உண்டாகி மூளைச்சிதைவைத் தோற்றுவிக்கின்றன. இவ்விபத்துகளால் அப்பாவி பொதுமக்களும் உடல் காயங்களுக்கும் முறிவுகளுக்கும் ஆட்படுகின்றனர். குறிப்பாக, இளவயது இருசக்கர வாகன ஓட்டிகளே பெரிதும் தலைக்காயங்களால் பாதிக்கப்பட்டு வலிப்பு நோயால் துன்புறும் அவலத்தைச் சந்திக்கின்றனர்.
சாராயம் குடிப்பதாலும், மது அருந்துவதாலும் நரம்பு செல்கள் அழிந்து மூளை மழுங்கிச் சுருங்கிவிடுகிறது. அதனாலும் வலிப்பு நோய் ஏற்படுகிறது.

மேலும், சமூகப் பொருளாதாரச் சீர்கேடுகளும் ஏற்படுகின்றன. ஆகவே, மேற்கூறிய எல்லாவற்றையும் மக்கள் கருத்தில்கொண்டு தங்கத்தைவிட உயர்ந்த தம் மூளையைப் பாதுகாத்து வலிப்பு நோயற்ற வாழ்வு வாழ வேண்டும். பகலில் தூங்குவது வலிப்பு நோயாளிகளுக்கு நல்லதல்ல. இரவில் நெடுநேரம் கண்விழித்துத் தொலைக்காட்சி பார்ப்பது, சினிமா பார்ப்பது, கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பது, டிஸ்கோ போன்ற களியாட்டங்களில் களிப்பது ஆகியவற்றைக் கைவிட வேண்டும். தானாகத் தூக்கம் வரும் நேரம் முதல் தானாக விழிப்பு வரும் நேரம் வரை நன்றாகத் தூங்க வேண்டும்.


50 வயதைக் கடந்தவர்கள் தம் ரத்த அழுத்த அளவு, ரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவு, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, சிறுநீரகச் செயல்பாடுகள் ஆகியவற்றைக் கால அட்டவணைப்படி சோதித்துச் சரிசெய்து கொள்ள வேண்டும்.


உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீரகக் கோளாறு ஆகியவற்றால் ரத்தக் குழாய்கள் பாதிக்கப்பட்டு மூளையில் ரத்தக்கசிவு மற்றும் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டு மூளைச்சிதைவு உண்டாகிறது. இதனால் முதுமையில் வலிப்பு நோய் ஏற்பட்டுத் தீராத தொல்லை தருகிறது.
ஆகவே, இக்கருத்துகளை மக்கள் புரிந்துகொண்டு விழிப்புணர்வு அடைந்து தம் வசதிக்கேற்ப வாய்ப்புக்கேற்ப அரசு மருத்துவமனையிலோ தனியார் மருத்துவமனையிலோ தம் உடல் நலத்தையும் தம் குடும்பத்தார் உடல் நலத்தையும் பேணிப் பாதுகாத்தால் வலிப்பு நோயை முற்றிலும் கட்டுப்படுத்திவிட முடியும்.


நன்றி தினமணி
nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum