உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தெரிந்துதான் செய்கிறார்களா?

Go down

தெரிந்துதான் செய்கிறார்களா? Empty தெரிந்துதான் செய்கிறார்களா?

Post by nandavanam on Tue Nov 08, 2011 3:59 am

தெரிந்துதான் செய்கிறார்களா? Pumpsave
எண்ணெய் நிறுவனங்களே விலை நிர்ணயம் செய்யும் உரிமையைப் பெற்ற பிறகு இரண்டு மாதத்தில் மீண்டும் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 2011-ல் லிட்டருக்கு ரூ.3.14 உயர்த்தப்பட்டது. இன்னும் இந்தச் சுமையையே தாங்கிக்கொள்ள முடியாத நிலையில், மேலும் ரூ.1.80 விலையை உயர்த்தி இருக்கிறார்கள்.

பெட்ரோல் விலை உயர்வைத் திரும்பப்பெறாவிட்டால் மத்தியில் காங்கிரஸýக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக்கொள்ளத் தயங்கமாட்டோம் என்று திரிணமூல் காங்கிரஸ் அச்சுறுத்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. திமுக உள்ளிட்ட ஏனைய கூட்டணிக் கட்சிகளும் இந்த விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கின்றன.

இந்த பெட்ரோல் விலை உயர்வை நிதியமைச்சகம் நினைத்திருந்தால் தவிர்த்திருக்க முடியும். இருந்தும்கூட, இதற்கு நிதியமைச்சகம் உடன்படவில்லை. பெட்ரோலிய அமைச்சரும் நிதியமைச்சரும் சந்தித்துப் பேசியும்கூட உடன்பாடு எட்ட முடியவில்லை.

இந்திய அரசு பெட்ரோல் மீது ரூ.14.35 வரி விதிக்கின்றது. இதில் ரூ.6.35 சுங்கவரி, ரூ.6 கூடுதல் தீர்வை, இதனினும் கூடுதல் தீர்வையாக சாலை மேம்பாட்டுக்காக ரூ.2 மேலும் வசூலிக்கப்படுகிறது. பிறகும் ஏன் தங்க நாற்கரச் சாலையில் சுங்கம் வசூலிக்கிறார்கள் என்று கேட்டுச் சலித்துவிட்டது.

இதில் ஏதாவது ஒரு தீர்வையில் கொஞ்சம் விட்டுக் கொடுத்தாலும், இந்த விலை உயர்வை மத்திய அரசு தவிர்த்திருக்க முடியும். ஆனால், இதில் மத்திய நிதியமைச்சகம் மிகவும் கறாராக மறுப்புத் தெரிவித்துவிட்ட நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை உயர்த்தின. இந்த விவகாரங்கள் நிச்சயமாக பிரதமருக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கும். அவர் தெரிந்துதான் இந்த விலை உயர்வை அனுமதித்திருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை.

அரசு தரும் மானியங்களைக் குறைக்க வேண்டும் என்பதுதான் பிரதமர் மன்மோகன் சிங் அரசியலுக்கு வந்த நாள் முதலாகக் கூறி வரும் பொருளாதார வளர்ச்சிக்கான பாடம். ஆனால், எந்த நேரத்தில் மானியங்களை விலக்கிக் கொள்வது என்கிற கட்டுப்பாடு இல்லாமல், எப்போது மானியத்தின் தேவை மிக இன்றியமையாததோ அந்த நேரத்தில் விலக்கிக் கொண்டால் எப்படி?

கடந்த செப்டம்பர் மாதம் முதல் விலைவாசி உயர்வு 10.1 விழுக்காடு என்ற நிலையில் உயர்ந்து கிடக்கும்போது, பெட்ரோல் விலையை உயர்த்தினால் பொருள்களின் விலை மேலும் உயராதா? இதுகூட மத்திய அரசுக்குத் தெரியாதா?

பிரதமர் மொரார்ஜி தேசாய் நிர்வாகத்துக்கு கிடைத்த மிகப்பெரும் பெருமை என்னவென்றால், நியாயவிலைக் கடைக்குப் போய் சர்க்கரை வாங்க வேண்டும் என்ற எண்ணமே மக்களுக்கு இல்லாமல் போனது என்பதுதான்.

ஜனதா ஆட்சிக்கு மொரார்ஜி தலைமையேற்றிருந்த நாளில், சர்க்கரை அரசியலில் இருக்கும் அனைத்துச் சிக்கலையும் நீக்கியதுடன், வெளிச்சந்தை சர்க்கரையின் விலையும், நியாயவிலைக் கடையில் கிடைக்கும் சர்க்கரையின் விலையும் ஏறக்குறைய சமமாக இருக்கும் நிலைமையை உருவாக்கினார். அதற்கு முன்புவரையிலும், நியாயவிலைக் கடையில் வெளிச்சந்தையைக் காட்டிலும் பாதியாக, மானியம் கொடுத்து விலைக்குறைப்பு செய்யப்பட்ட சர்க்கரை கிடைத்த காரணத்தால் மக்கள் வரிசையில் நின்று சர்க்கரை வாங்கினார்கள். விலை எல்லா இடங்களிலும் ஒன்று என்றான பின்பு இந்த மானியம் குறித்தோ அல்லது நியாயவிலைக் கடைச் சர்க்கரை குறித்தோ யாரும் கவலைப்படவில்லை. தற்போது மீண்டும் நியாயவிலைக் கடையில் சர்க்கரை கிலோ ரூ.13.65-க்கும் வெளிச்சந்தையில் ரூ.30-க்கும் விற்கப்படும் நிலை வருவதற்கு வழிசெய்துவிட்டார்கள் என்பது வேறு விஷயம்.

விலைஉயர்வு வெறும் 6 விழுக்காடு அளவுக்கு இருக்குமானால், பெட்ரோல் விலை உயர்வு குறித்து இந்த அளவுக்கு யாரும் எதிர்ப்பு சொல்லப்போவதில்லை. ஆனால், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்துகொண்டே போகும்போது இத்தகைய பெட்ரோல் விலை உயர்வினால் மற்ற பொருள்களின் விலையும் உயரத்தானே செய்யும்?

பெட்ரோல் விலையை அரசு உள்வாங்கி, மானியம் தந்து ஈடு செய்யும் வழக்கம் நீக்கப்பட வேண்டும் என்பது அரசின் உறுதியான திட்டம் என்றால், அவர்கள் என்ன செய்ய வேண்டும்? யார்யாரெல்லாம் பெட்ரோலை அதற்குரிய விலையில் வாங்க வேண்டும் என்பதையும், யார் யார், எந்தெந்தப் பயன்பாட்டுக்கு பெட்ரோலை மானிய விலையில் பெறலாம் என்பதையும் பிரிக்க வேண்டும். எல்லாருக்கும் ஒரே விலையில் பெட்ரோல் வழங்குவதன் மூலம், பெட்ரோலியப் பொருளை வீணடிப்பவர்கள் பணம் வசதி படைத்தவர்களாகவும், விலைஉயர்வால் அவதிப்படுவோர் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களாகவும் இருக்கிறார்கள்.

கச்சா எண்ணெயை இந்திய அரசு வாங்கி வந்து கொடுக்க, அதனை சுத்திகரிப்பு செய்து தரும் தனியார் நிறுவனங்கள் பெறும் லாபம் அபரிமிதமானது. இதை ஏன் அரசு நிறுவனங்களான எண்ணெய் நிறுவனங்களே செய்யக்கூடாது? என்ற கேள்விக்கும் பதில் இல்லை. ஏன் தீர்வையை குறைந்தது ரூ.2 விலக்கு அளித்து, இந்த ரூ.1.80 விலை உயர்வைத் தவிர்க்கக்கூடாது? இந்தக் கேள்விக்கும் பதில் இல்லை.

பத்திரிகைகளில் தங்கம் விலை என்று தனி பத்தியில் ஒவ்வொரு நாளும், "இன்று ரூ.40 உயர்ந்தது", "இன்று தங்கம் விலை ரூ.10 குறைந்தது' என்று செய்தி வருவதைப் போல, இனி இந்தியாவில் பெட்ரோலுக்கும் தினசரி விலை விவரம் எழுதப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால், அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயரும் என்பதுகூடத் தெரியாமல், ஒருபுறம் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக்கொண்டு இன்னொருபுறம் விலைவாசியை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று நிதியமைச்சகமும் ரிசர்வ் வங்கியும் யோசிக்கும் விசித்திரம் இந்தியாவில் மட்டும்தான் நடக்கும். நடப்பது பொருளாதார மேதைகளின் ஆட்சியாயிற்றே!

நன்றி தினமணி


nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum