உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஜெயலலிதாவுக்கு இது தேவைதானா?

Go down

ஜெயலலிதாவுக்கு இது தேவைதானா? Empty ஜெயலலிதாவுக்கு இது தேவைதானா?

Post by nandavanam on Sun Nov 06, 2011 4:09 am

ஜெயலலிதாவுக்கு இது தேவைதானா? 2
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சி அகற்றப்பட்டு ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்ததுமே, கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட தலைமைச் செயலகம் கைகழுவப்படும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். அதனால் புதியதாகக் கட்டப்பட்ட தலைமைச் செயலகம், சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனையாக மாற்றப்படும் என்கிற அதிமுக அரசின் முடிவு சற்று அதிருப்தியை ஏற்படுத்தியதே தவிர, அதிர்ச்சியை அளிக்கவில்லை.

ஆனால், அண்ணா நூற்றாண்டு நூலகம் குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றப்படும் என்கிற அரசின் முடிவு, நிஜமாகவே தூக்கிவாரிப் போடுகிறது.

கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டுவது என்ற முடிவு உள்நோக்கம் உடையது என்று நம்புவதற்கு இடமுண்டு. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் அவர் தேர்ந்தெடுத்துப் பூஜை போட்டிருந்த இடத்தில் தலைமைச் செயலகம் கட்டித் தான் கட்டிய தலைமைச் செயலகத்தைச் செயலிழக்க வைத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் முன்னாள் முதல்வர் கருணாநிதி அந்த இடத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தைக் கட்டினார் என்கிறார்கள். இருக்கலாம். அதற்காக? நூலகம் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கும் வந்த பிறகு, சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்களை இன்னொரு கட்டடத்துக்கு இடம் மாற்றி, நூலகத்துக்காகக் கட்டப்பட்ட அமைப்பை மருத்துவமனையாக மாற்றுவது என்பது, நமது இளைஞர்களின் பாஷையில் சொல்வதாக இருந்தால், "ரொம்ப ஓவர்!'

தலைமைச் செயலகக் கட்டடம் மருத்துவமனையாக மாற்றப்படும் என்று முதல்வரின் அறிவிப்பு வந்தபோது நாம் முன்வைத்த அதே கருத்தைத்தான் இப்போதும் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம். அலுவலக வளாகத்துக்காக, நூலகத்துக்காக, மருத்துவமனைக்காக வெவ்வேறு விதமான பயன்பாடுகளைக் கருதி அதற்கேற்றாற்போன்ற கட்டட அமைப்புகளை நமது கட்டடக் கலை வல்லுநர்கள் உருவாக்குகிறார்கள்.

அதற்கு என்று வெவ்வேறு கட்டடக் கலை நிபுணர்கள் (ஆர்க்கிடெக்ட்ஸ்) இருக்கிறார்கள். திரையரங்குகளைக் கூடத் திருமண மண்டபங்களாக அப்படியே மாற்ற முடியாத நிலையில் அலுவலக வளாகத்தையும், நூலகத்தையும் மருத்துவமனைகளாக மாற்றி அமைக்கப் போகிறோம் என்பது விபரீத யோசனை மட்டுமல்ல, வெட்டி வேலையும்கூட.

எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனை ஆசியாவிலேயே சிறந்த மருத்துவமனையாக ஒருகாலத்தில் இருந்தது. ஆனால், இப்போது பராமரிப்புகூடச் சரியாக இல்லாமல், குழந்தைகளை நாய் கவ்விச் சென்ற சம்பவங்கள் வெளியில் வராமல் அடக்கி வாசிக்கப்படும் அவலத்தில் இருக்கிறது. அந்த மருத்துவமனையை சர்வதேசத் தரத்துக்குத் தரம் உயர்த்தி ஏழைகளுக்கும் சிறப்பான சேவையை அளிக்க முன்வருவதை விட்டுவிட்டு, சர்வதேசத் தரத்தில் அமைக்கப்பட்டிருக்கும், செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நூலகத்தை இடமாற்றம் செய்கிறேன், அறிவுசார் பூங்கா அமைக்கிறேன் என்றெல்லாம் அரசு கூறுவது நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.

அண்ணா நூற்றாண்டு நூலகம் ஊழலின் ஒரு மிகப்பெரிய அடையாளச் சின்னம் என்பதை முதல்வருக்கு ஏன் அவரது ஆலோசகர்கள் சுட்டிக்காட்டாமல் விட்டார்கள் என்று தெரியவில்லை. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து இன்னொரு தலைமைச் செயலகத்தை கட்டிவிடக்கூடாது என்பதற்காக மட்டும் அந்த நூலகம் கட்டப்படவில்லை. தனது குடும்பத்தினரும் அமைச்சர்கள் சிலரும் மக்கள் வரிப்பணத்திலிருந்து பல கோடி ரூபாய்களைச் சாப்பிட்டு ஏப்பம் விடுவதற்காகவும் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கட்டப்பட்டது அந்த நூலகம் என்பது விவரம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

சென்னை கோட்டூர்புரத்தில் ரூ. 170 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் தொடங்கி ஏறத்தாழ ரூ. 230 கோடி ரூபாயை விழுங்கி இருக்கிறது இந்த நூலகம். சுமார் 8 ஏக்கர் நிலப்பரப்பில் 3.75 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டடத்துக்கு இவ்வளவு பணம் செலவாக வேண்டிய அவசியம் என்ன?

சதுர அடிக்கு ரூ. 2,000 என்று கணக்கிட்டாலும், 3.75 லட்சம் சதுர அடி அளவில் கட்டடம் கட்ட அதிகபட்சம் ரூ. 75 கோடிதானே செலவாகி இருக்கும்? இத்தனைக்கும், இடம் இலவசம், கட்டட அனுமதி, குடிநீர் வடிகால் உள்ளிட்ட கட்டமைப்புகளுக்கு உடனடி அனுமதி, லஞ்சம் கிடையாது எனும்போது இத்தனை கோடி செலவுக்கு என்ன காரணம்?

சுமார் ஆறு லட்சம் புத்தகங்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். இதில் ஏறத்தாழ 4 லட்சம் புத்தகங்கள் பல்வேறு பல்கலைக் கழகங்கள் மற்றும் அமைப்புகள் மூலம் பெறப்பெற்றவை. தமிழ்நாட்டிலுள்ள ஒட்டுமொத்தப் பதிப்பாளர்களிடம் உள்ள அத்தனை புத்தகங்களையும் வாங்கினால்கூட ரூ. 5 கோடிக்குமேல் தேவையில்லையே... வெளிநாட்டுப் புத்தகங்களை ரூ. 5 கோடிக்குமேல் வாங்கினாலும்கூட ரூ. 10 கோடிதானே செலவாகி இருக்கும்? எல்லா செலவும் சேர்த்து அதிகபட்சம் ரூ. 100 கோடியைத் தாண்ட வாய்ப்பில்லையே, எங்கே போயிற்று மீதம் செலவாகியிருக்கும் ரூ. 130 கோடி?

உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட்டு, நூலகத்தின் பெயரால் நடந்த மோசடியை வெளிச்சம்போட்டுக் காட்டியிருந்தால், அரசைப் பாராட்டி இருக்கலாம். அதைவிட்டுவிட்டு, மக்கள் வரிப்பணத்தில் கட்டி முடிக்கப்பட்டு, செயல்பட்டுக் கொண்டிருக்கும் நூலகத்தை குழந்தைகள் நல மருத்துவமனையாக்குகிறோம் என்று கிளம்பினால், மக்களின் அதிருப்தியை வலியப்போய் விலை கொடுத்து வாங்குகிறது அரசு என்றுதானே பொருள்?

நூலகத்துக்காகக் கட்டப்பட்ட இடம் நூலகமாகவே தொடரட்டும். அறிவுசார் பூங்காவில் இன்னொரு நூலகம் அமைவதாக இருந்தால் அமையட்டும், அதில் தவறொன்றுமில்லை. எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை முழுக் கவனமும் செலுத்தப்பட்டு, சர்வதேசத் தரத்தில் செயல்படட்டும். மக்கள் வரிப்பணத்தை நூலகம் என்ற பெயரில் கபளீகரம் செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிப்பதைப் பற்றியும் அரசு யோசிக்கட்டும். அதுதான் ராஜதந்திரமான முடிவாக இருக்கும்!

நன்றி தினமணி

nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum