உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஜெயிக்குமா கூடங்குளம் போராட்டம்? ,

Go down

ஜெயிக்குமா கூடங்குளம் போராட்டம்? , Empty ஜெயிக்குமா கூடங்குளம் போராட்டம்? ,

Post by nandavanam on Sun Oct 16, 2011 2:57 am


எழுதியவர் ஓ பக்கங்கள் , ஞாநி
கூடங்குளத்தில் மத்திய அரசு நிர்மாணித்து வரும் அணு உலைகள் தங்களுக்கு வேண்டாம் என்று அந்த வட்டார மக்கள் நடத்திவரும் போராட்டம் ஜெயிப்பது போன்ற தோற்றத்தை முதலில் அளித்தது. உண்மையில் அது ஜெயிக்கும் வாய்ப்பு இருக்கிறதா இல்லையா என்று பார்ப்போம்.


ஆயிரக்கணக்கான மக்கள், குறிப்பாக மீனவர்கள், வேலை, கல்வி எல்லாவற்றையும் தற்காலிகமாக நிறுத்தி விட்டுப் போராடினார்கள். நூற்றுக் கணக்கானோர் இரு வாரங்களுக்கு மேல் உண்ணாவிரதம் இருந்தார்கள். முதலில் இதை ஒதுக்கிய மீடியா, வேறு வழியின்றி கவனம் செலுத்தும் அளவுக்குப் போராட்டக்காரர்களின் உறுதி வலிமையாக இருந்தது. முதலமைச்சர் ஜெயலலிதா, அணு உலையின் பாதுகாப்புப் பற்றி மக்களின் அச்சம் போக்கப்படும் வரை அணு உலை வேலையை நிறுத்தி வைக்கும்படி அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினார். அரசு அனுப்பும் அனைத்துக்கட்சிக் குழுவினரையும் போராட்டக் குழுவினரையும் சந்திக்க பிரதமர் ஒப்புக் கொண்டார். இவையெல்லாம் போராட்டக்காரர்களுக்குக் கிடைத்த வெற்றியாகவே கருதப்பட்டன.


பிரதமரை, குழுக்கள் சந்தித்துத் திரும்பி விட்டனர். இனி அடுத்த கட்டம்? மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்கப் போவதில்லை என்றே தோன்றுகிறது. தனக்குச் சாதகமான நிபுணர்களை வெவ்வேறு பத்திரிகைகளிலும், மீடியாவிலும் கருத்துத் தெரிவிக்கச் செய்யும் வேலையை மத்திய அரசு முதலில் ஆரம்பித்து விட்டது. தொழிலதிபர்களின் கூட்டமைப்பைக் கொண்டு அணு உலை நாட்டுக்கு அவசியம் என்ற கருத்தைப் பரப்பத் தொடங்கி இருக்கிறது. தெலங்கானா போராட்டத்தின் விளைவாக ஆந்திரத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டதால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடும் மின் வெட்டு செய்யும் நிலை ஏற்பட்டதை, தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த அணு உலை ஆதரவு சக்திகள் முயற்சிக்கின்றன.

கூடங்குளம் கட்டி முடிக்கும் நிலைக்கு வந்துவிட்டது. முதலிலேயே எதிர்த்திருக்க வேண்டும். இப்போது டூ லேட். இதை மட்டும் அனுமதிப்போம், அடுத்து வேண்டாம்... என்று ஒரு அபத்தமான வாதம் பேசப்படுகிறது. அணு உலைகளால் நாளைக்கு வரக்கூடிய ஆபத்தைக் கணக்கிட்டால், இதுவரை செலவிட்டதோடு நிறுத்திக் கொள்வதே குறைந்த நஷ்டம்.அணு உலை ஆபத்தான தொழில்நுட்பமாக இருந்தால்கூட, இந்தியாவுக்கும் தமிழ் நாட்டுக்கும் இனி அதை விட்டால் மின்சாரத்துக்கு வேறு கதியில்லை என்ற பிரசாரங்கள் அவிழ்த்துவிடப்பட்டிருக்கின்றன. அரசு தரப்பில் இருந்தே தரப்படும் எல்லா புள்ளி விவரங்களையும் பரிசீலித்தாலும் தெரிய வரும் உண்மை இதுதான்: இன்னும் 50 ஆண்டுகளுக்குப் பிறகு கூட இந்தியாவின் மொத்த மின்சாரத் தேவையில் 25 சதவிகிதத்தைக் கூட அணு உலைகள் தரப் போவதில்லை. இப்போது தரும் வெறும் 2.75 சதவிகிதத்தை அதிகபட்சம் 15 சதவிகிதம் ஆக்குவதற்கே பிரம்மாண்ட முதலீடு தேவைப்படுகிறது.அந்த முதலீட்டை தனியார் நிறுவனங்கள் கொண்டுவந்து கொட்டும் என்பது மன்மோகன் சிங் அரசின் கணக்கு. குறிப்பாக ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ்... ஆகிய நாடுகளின் தனியார் நிறுவனங்களிடம் அணு உலைகள் வாங்குவதுதான் திட்டம். அந்த வர்த்தகம் தங்கள் நாடுகளுக்குச் சாதகமானவை என்பதால் அந்த அரசுகள் இதில் ஆர்வம் காட்டுகின்றன. ஆபத்தான தொழில்நுட்பத்துக்கு தங்கள் நாடுகளில் எதிர்ப்பு பலமாக இருக்கும்போது அதை நம் போன்ற முட்டாள் நாடுகளின் தலையில் கட்டுவதுதான் அவற்றின் வாடிக்கை. தோல் பதனிடுதல், துணிகளுக்குச் சாயம் ஏற்றுதல் இரண்டும் சுற்றுச்சூழலைக் கடுமையாகப் பாதிக்கின்றன என்று மேலை நாடுகளில் எதிர்ப்பு வந்ததும், அந்த வேலையை நம் தலையில் அவை கட்டிவிட்டன. டாலருக்கும் யூரோவுக்கும் ஆசைப்பட்டு நம் தொழிலதிபர்கள் நம் ஆறுகளையும் விளைநிலங்களையும் தொடர்ந்து நாசமாக்கி வருகிறார்கள். நம் ஊரை நாசமாக்கி வெளிநாட்டினர் உபயோகத்துக்கு ஏற்றுமதி செய்கிறோம்.

அடுத்த 50 ஆண்டுகளில் பல மேலைநாடுகளிலும் அணு உலைகளைப் படிப்படியாக மூடும் திட்டங்கள் தொடங்கப்பட்டுவிட்டன. அங்கேயுள்ள அணு உலை தயாரிப்பாளர்களுக்கு அடுத்த மார்க்கெட்டாக இந்தியா போன்ற ஏமாளி நாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. கூடங்குளத்தில் ரஷ்ய உலைகள்; ராஜஸ்தான் ஜெய்தாபூரில் பிரெஞ்ச் உலைகள்... என்பதுதான் இந்திய அரசின் திட்டம். ஜெய்தாபூரிலும் அணு உலைக்குப் பெரும் மக்கள் எதிர்ப்பு இயக்கம் நடந்துவருகிறது.ஜெய்தாபூருக்கு வாங்கவிருக்கும் பிரெஞ்ச் அணு உலைகளைத் தயாரிக்கும் அரேவா கம்பெனி தொடர்பாக சில முக்கியமான, கவலை ஏற்படுத்தக்கூடிய தகவல்கள் இந்த வாரம் வெளியாகி இருக்கின்றன. அரேவாவுக்குச் சொந்தமான சொகாட்ரி கம்பெனி, தெற்கு பிரான்ஸில் டிரிகாஸ்டின் என்ற இடத்தில் அணு உலை நடத்தி வந்தது. அங்கே 2008ல் இந்த உலையிலிருந்து பூமிக்கு அடியில் செலுத்திய யுரேனியம் திரவத்தினால் நிலத்தடி நீர் மாசுபட்ட வழக்கில் மூன்று லட்சம் யூரோக்கள் அபராதம் இப்போது விதிக்கப்பட்டுள்ளது. யுரேனியம் கசிவால், ஆற்று நீர் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 27 மடங்கு கதிரியக்கத்துக்கு உள்ளாயிற்று. அந்த வட்டாரக் குடிநீர் பாதிக்கப்பட்டது. கசிவு ஏற்பட்ட தகவலையே கம்பெனி அதிகாரபூர்வமாக 24 மணி நேரம் கழித்துத்தான் பகிரங்கப்படுத்தியது.கசிவு ஏற்பட்ட தகவலையே கம்பெனி அதிகாரபூர்வமாக 24 மணி நேரம் கழித்துத்தான் பகிரங்கப்படுத்தியது.

இந்த பிரெஞ்ச் தனியார் கம்பெனி அணு உலைக் கட்டுமானப் பணிகளுக்கு போலந்து, பல்கேரியா, ஹங்கேரி, செக் குடியரசு... நாடுகளிலிருந்து அடிமாட்டு விலைக்கு, கூலித் தொழிலாளர்களைக் கொண்டு வருவதும் இப்போது அம்பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. குறைவான கூலி, அதிலும் பிடித்துக் கொண்ட வருமானவரியைக் கட்டாதது, மாதக் கணக்கில் கூலி தராமல் பாக்கி வைத்திருப்பது என்றெல்லாம் இந்தக் கம்பெனியின் நடவடிக்கைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.இந்தியச் சூழ்நிலை என்ன? நொய்யல் ஆற்றை மாசுபடுத்தி அழித்த சாயப்பட்டறைகளுக்கோ பாலாற்றை நாசமாக்கிய தோல் பதனிடும் கூடங்களுக்கோ... எந்த கோர்ட்டிலும் தண்டனை எதுவும் தரப்பட்டது இல்லை; அவர்களிடம் அபராதம் வசூலித்ததும் இல்லை. விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு கொடுத்ததில்லை. மாறாக அரசாங்கப் பணத்தைக் கோடிக்கணக்கில் சாயப்பட்டறை முதலாளிகளுக்கு, போலி சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக மான்யமாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். போபால் விஷ வாயு விபத்தில் தவறு செய்த கம்பெனி முதலாளியை விமானத்தில் தப்பிச்செல்ல விட்டுவிட்டு, அவரை கோர்ட்டில் ஒப்படைக்கும்படி கோரிக்கை கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.மன்மோகன்சிங் போட்ட 123 ஒப்பந்தத்தில் முக்கியமான ஒரு பிரிவு, அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால் நஷ்ட ஈடு தருவது பற்றியதாகும். இந்த நஷ்ட ஈடுக்கு உச்சவரம்பு வைக்கும்படியும், ஒரு பகுதியை மட்டுமே கம்பெனி தரவேண்டும் என்றும், மீதியை அரசு தரவேண்டுமென்றும் வெளி நாட்டுத் தனியார் நிறுவனங்கள் வலியுறுத்துவதை அப்படியே ஏற்றுக்கொண்டிருக்கிறார் மன்மோகன்சிங்.

நாளைக்கு இந்தியாவில் தனியார் வசம் அணு உலைகள் வந்தால், என்னென்ன விளைவுகள் ஏற்பட்டு முடியும் என்று கற்பனை செய்யவே பயமாக இருக்கிறது. அரசிடம் தொடர்ந்து நீடித்தால்; அதுவும் சிக்கல்தான். ஏனென்றால் இந்தியாவில் அணு உலைகளைக் கண்காணிக்க தனி அமைப்பு இல்லை. குற்றவாளியேதான் நீதிபதியும்கூட என்பதே நிலைமை. பிரான்ஸில் நீதிமன்றத்துக்குச் செல்வது போல இந்தியாவில் செல்ல முடியாது. இங்கே மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் எல்லாம் ஊழல்மயமாக இருப்பவை. எனவே, கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என்று அரசு அவிழ்த்துவிட்டிருக்கும் பிரசாரத்துக்குப் பதிலாக, சில கோரிக்கைகளை நாம் முன்வைக்க வேண்டும். இந்தியாவில் ஏற்கெனவே இயங்கிவரும் அணு உலைகளின் நிலை என்ன? குறிப்பாக கல்பாக்கம் அணு உலை. கல்பாக்கத்தைச் சுற்றியுள்ள மீனவர் வாழ்க்கையும் மீன்வளமும் அந்தப் பகுதியில் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளன? அங்கு பணிபுரிவோரில் கதிரியக்கத்துக்கு உட்படுத்தப்படுவோர் யார் யார்? அதில் தினக்கூலிகள் எத்தனை பேர்? இதுவரை நடந்த விபத்துகள், அவற்றின் விளைவுகள்..? இதைப் பற்றியெல்லாம் அரசுக்குத் தொடர்பில்லாத சுயேச்சையான மருத்துவர்கள், அறிஞர்கள், நீதிபதிகள் கொண்ட குழுவை ஏற்படுத்தி விசாரிக்க வேண்டும். கல்பாக்கத்தில் பணியாற்றுவோர், பணியாற்றினோர் ரகசியமாக, குழுவின் முன்பு தகவல் தெரிவிக்க அனுமதிக்க வேண்டும். இதற்கு மத்திய அரசு முன் வருமா? அந்தக் குழுவின் அறிக்கை வரும்வரை புதிய அணு உலைப் பணிகள் எல்லாம் நிறுத்தி வைக்கப்பட வேண்டும்.

இப்படித் தெளிவான கோரிக்கையுடன் கூடங்குளம் போராட்டம் தொடர்ந்தால் மட்டுமே அடுத்த கட்டத்தை அது சென்றடைய முடியும். இல்லாவிட்டால் மக்களின் தாக்குப்பிடிக்கும் சக்தியைப் பலவீனமாக்கி மத்திய அரசு அவர்களைக் களைப்படையச் செய்து, தன் நோக்கத்தை நடத்திக்கொள்ளும். தமிழக அரசியல் கட்சிகள் யாரும் இதில் நம்பத் தகுந்தவர்களாக இல்லை. இடதுசாரிகள் குழப்பத்தில் இருக்கிறார்கள். காங்கிரசும், பி.ஜே.பி.யும் ஒரே அணுக்கொள்கை உடையவர்கள். தி.மு.க, அ.தி.மு.கவுக்கு எல்லாம் இதில் இருக்கும் கட்டட காண்ட்ராக்ட்டுகள் தாண்டி அக்கறை காட்டும் நிலையில் இல்லை.1987-88ல் முரசொலி மாறனுடம் சுமார் இரண்டு மணி நேரம் பேசி ஏன் அணு உலை ஆபத்தானது என்பதை விளக்கினேன். தி.மு.க. அப்போது எதிர்க்கட்சி. கூடங்குளம் அணு உலை வேண்டாம் என்று செயற் குழுவில் தீர்மானம் கொண்டு வந்தார் முரசொலி மாறன். அடுத்த சில மாதங்களில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடங்குளம் அணு உலையை அமைக்கும்படி இன்னோர் தீர்மானம் போட்டது. ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று முரசொலி மாறனிடம் கேட்டேன். இது டிஃபென்ஸ் பிரச்னை. மத்திய அரசு நிர்ப்பந்தம் இருக்கு. ஒண்ணும் பண்ண முடியாது என்றார். இதேபோல நிர்ப்பந்தம் இன்று ஜெயலலிதாவுக்கும் மத்திய அரசால் தரப்படும்.

கூடங்குளம் மக்களின் போராட்டம் அவர்களுக்கானது மட்டுமல்ல. இதில் தமிழர்கள், இந்தியர்கள் எல்லோர் நலனும் அடங்கியுள்ளன. தமிழ்நாட்டின் எழுத்தாளர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள், திரைப்படத் துறையினர், கல்வியாளர்கள் என்று எல்லாரும் பகிரங்கமாக இதை விவாதிக்க முன்வர வேண்டும். இதே இடிந்தகரையில் இருபதாண்டுகளுக்கு முன்னர் அணு எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் பேசச் சென்றபோது சுமார் இருபதாயிரம் மீனவர்கள் கூடியிருந்தனர். அந்த எழுச்சியைப் பார்த்த போது அப்போதே கூடங்குளம் திட்டம் கைவிடப்படும் என்று தோன்றியது. ஆனால் இன்று அணு உலை கட்டியே முடித்துவிட்டார்கள். இப்போதைய எழுச்சி அன்றையதை விடப் பல மடங்கு அதிகமானதுதான்.ஆனால் எதிரியும் அன்றை விட பல மடங்கு அதிக பலத்துடன் இருப்பதை நினைக்கும்போது கலக்கமாகவே இருக்கிறது. கூடங்குளம் போராட்டம் ஜெயிக்குமா? தெரியவில்லை. ஆனால் ஜெயிக்க வேண்டும்.

எழுதியவர் ஓ பக்கங்கள் , ஞாநி
nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum