உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

சமயம் இதுவே

Go down

சமயம் இதுவே Empty சமயம் இதுவே

Post by nandavanam Wed Jan 04, 2012 3:36 am

இந்திய அரசியல் சாசனத்தின் தொடக்கத்தில் கூறப்படும் குறிக்கோள்கள் சாசனத்தின் அடிப்படை நோக்கங்களை விளக்குகின்றன.

இந்திய மக்களுக்குச் சமுதாய, பொருளாதார, சமத்துவக் கோட்பாடுகளைப் பகிர்ந்து கொடுப்பதுதான், அரசியல் சாசனம் மூலம் தோற்றுவிக்கப்படும் அமைப்புகளான, நாடாளுமன்றம், அரசாங்கம், அமைச்சரவை, நீதிமன்றங்கள், அரசு நிர்வாகம் போன்றவற்றின் தலையாய கடமை.

எது சிறந்த நாடு என்று பார்த்தால், எங்கு நல்லாட்சி நடக்கிறதோ, எங்கு மக்கள் சுபிட்சமாக, அமைதியாக, சந்தோஷத்தோடு வாழ்கிறார்களோ அதுவே சிறந்த நாடு. "வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால், திண்மை இல்லை நேர் செறுநர் இன்மையால், உண்மை இல்லை பொய்உரை இலாமையால், ஒண்மை இல்லை பல் கேள்வி ஓங்கலால்' என்ற கோசல நாட்டின் பெருமையை நயமுடன் விளக்குகிறார் கம்பன். அவ்வாறு இருந்த நாடுதான் நமது நாடு.

சுயநலம் ஆட்கொண்டதாலும் எல்லோரையும் அணைத்துச் செல்லும் ஒப்புரவு குறைவதாலும் பிரச்னைகள் தீராமல் நின்ற இடத்திலேயே ஓடிக்கொண்டிருக்கிறோம்.

கிரேக்க நாட்டின் சட்ட வல்லுநர் ஐஸ்டின் கூறும் சட்ட கோட்பாடுகள் மூன்று. அவை: நேர்மையாக வாழ்தல், ஒருவருக்கும் கெடுதல் செய்யாதிருத்தல், கடன்பட்டதைத் திருப்பி அளித்தல்.

எந்தச் சமுதாயத்தில் பாதிப்புக்கு உள்ளாகாதவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து பாதிப்பு ஏற்படுத்தியவரை, தவறு இழைத்தவரைத் தண்டிக்க ஒருங்கிணைந்து முற்படுகின்றனரோ அதுவே, வாழச் சிறந்த நகரம் என்கிறது பண்டைக்கால கிரேக்க அடைமொழி. இவை இன்றும் மக்களாட்சிக்குப் பொருந்தும்.

வெளிப்படையான நிர்வாகம், அமைதியான சூழல், திறமையாக இயங்கும் நிர்வாக அமைப்புகள், பயமில்லாத வாழ்க்கை இவற்றை உறுதி செய்தாலே மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்.

ஆப்பிள் கணினியைக் கண்டுபிடித்த ஸ்டீவ் ஜாப்ஸ், ஹார்வர்ட் பல்கலைக்கழக உரையில் பொருளாதார மதிப்பீட்டில் ஈடுகட்டமுடியாத மூலதனம் நேரம் ஒன்றுதான் என்பதை வலியுறுத்தியுள்ளார். காலம் பொன்னானது என்று பெயரளவில் கூறுகிறோமே தவிர, நேரத்தை மதிப்பதில்லை. காலம் ஓடிக்கொண்டுதான் இருக்கும்.

கழிந்த நேரத்தைப்பற்றி அங்கலாய்க்கிறோம், ஓட்டுநர் நாம்தாம் என்பதை மறந்துவிட்டு. இல்லாவிட்டால் சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் ஆகியும் வறுமை ஒழிந்தபாடில்லை, தரமான கல்வி எல்லோருக்கும் சென்றடையவில்லை. நாற்பது ஆண்டுகளாக ஊழல் ஒழிப்பு மசோதாவைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோம். ஊழலும் ஒழியவில்லை. சட்டமும் நிறைவேற்றப் படவில்லை. சர்வதேச அளவில் சென்னை விமான தளம் விரிவடைய வேண்டும்.

அதற்கு நிலம் 2002-ல் ஒதுக்கப்பட்டும் சில சுயநலவாதிகளின் போராட்டங்களால் ஸ்தம்பித்தது. ஆனால், ஹைதராபாத், பெங்களூரில் புதிய விமான நிலையங்கள் அமைக்கப்பட்டுவிட்டன. சென்னை நகரில் உள்ள நெரிசலுக்குத் தீர்வு, சாட்டிலைட் நகரங்களை சென்னையைச் சுற்றி உருவாக்க வேண்டும்.

அதற்கு திட்டம் 2001-06 ஆட்சியின்போது வகுக்கப்பட்டது. மீண்டும் சில சுயநலவாதிகள் அரசியல் நோக்கத்தோடு தலையிட்டு முன்னேற்றத்தை முடக்குவதிலேயே குறியாக இருந்தனர்.

இத்தகைய முட்டுக்கட்டைகளினால் விலைமதிக்க முடியாத நேரம் விரயமானது. மற்ற மாநிலங்கள் முந்திக் கொண்டன.

வெளிநாடு சென்று வருபவர்கள் அங்கு இருக்கும் தூய்மையையும், வெளிப்படையான நிர்வாகத்தையும், நேர்த்தியான கட்டமைப்புகளையும் புகழ்கின்றனர். நம்மிடம் திறமை இருக்கிறது. பொருளாதாரமும் பெருகியிருக்கிறது. இருந்தும், ஏன் சாதாரண பிரச்னைகளுக்கும் தீர்வு இல்லை.

சாலைகள் செப்பனிடப்படுகின்றன. சில மாதங்களில் மீண்டும் பழுதடைகின்றன. மெரீனா கடற்கரை உலகப் பிரசித்தி பெற்றது.

கடல் ஆர்ப்பரிப்புக்கு முன் வேறு ஏதாவது செயற்கை அழகு எடுபடுமா? பீச் முகப்பைச் செப்பனிடும் பணியில் கோடிக்கணக்கான பணம் விரயமாக்கப்பட்டது.

புறநகர்ப் பகுதிகளில் சாலைகள் எவ்வளவு மோசமாக உள்ளன. அதைச் செப்பனிடாமல் வேண்டியவர்கள் வீடுகள் இருக்கும் சாலைகளை அகலப்படுத்துவது, நன்றாக உள்ள நடைபாதைகளில் டைல்ஸ் ஒட்டுவது போன்ற பணிகள்தான் திரும்பத் திரும்ப நடந்தன. இந்நிலை மாற வேண்டும்.

முன்னேறிய நாடுகளுக்கும் வளர்ந்து வரும் நாடுகளுக்கும் உள்ள முக்கிய வித்தியாசம், அந்தந்த நாட்டு மக்களின் உழைக்கும் திறன். முன்னேறிய நாடுகளில் உழைக்கும்போது முழு கவனம் செலுத்தி உழைப்பார்கள். நேரத்தை வீணாக்க மாட்டார்கள். ஆனால், வளர்ந்து வரும் நாடுகளில் அதற்கு நேர்மாறான அணுகுமுறை. ஈடுபாடின்மை, தாமஸமான செய்கைகள், கவனமின்மை, வம்பளப்பது.

மொத்தத்தில் பணி நேரத்தை விரயமாக்குவது போன்ற தரமற்ற குணங்கள் காணப்படும். உழைப்பே உயர்வு என்று போற்றுவதால்தான் ஜப்பான் போன்ற நாடுகள் உற்பத்தியை பெருக்கியுள்ளன.

கடந்த சில ஆண்டுகளில் இலவசங்கள் என்ற மாயையில் மக்களின் உழைக்கும் சக்தியை மழுங்கடித்து தொலைக்காட்சி மூலம் கேளிக்கைகள், விரசங்கள், அர்த்தமற்ற கொண்டாட்டங்கள்தான் பிரதானம் என்ற நிலையை உருவாக்கி விட்டனர். அறுபதுகளில் மதுவிலக்கு தளர்த்தப்பட்டு இளைய சமுதாயம் சீரழிக்கப்பட்டதோ அதே நிலை உருவாகாமல் தெய்வாதீனமாக இப்போது தடுக்கப்பட்டுள்ளது.

நமது நாட்டுக்கு இப்போது தேவை தரமான கல்வி மற்றும் பொருள் உற்பத்தியில் வேலை வாய்ப்பு. குஜராத் மாநில அரசைப் பற்றி பலவிதமான விமர்சனங்கள் வந்தாலும் அம் மாநிலம் பல துறைகளில் மற்ற மாநிலங்களைவிட முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதை மத்திய திட்டக் கமிஷன் அங்கீகரித்துள்ளது.

முக்கியமாக, விவசாயத்தில் உற்பத்திப் பெருக்கம், விவசாயிகளுக்கு உழைப்புக்கு ஏற்ற ஈடு, விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளது. பல கிராமங்களில் மழைநீர் சேகரிப்பு மிகச் சிறப்பாகத் திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

(ஸ்பீட், ஸ்கில், ஸ்கேல்) வேகம், திறமை, வளமை என்பதை நிர்வாகத்தின் குறிக்கோளாகக் கொண்டு குஜராத் அரசு செயல்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஊழலும் சோம்பலும்தான் நிர்வாகச் சக்கரத்தைப் பழுதடையச் செய்கின்றன. சரி செய்ததால் நிர்வாகம் நிறைவாகச் செயல்படுகின்றது என்று கூறப்படுகிறது.

நமது முதல்வர் முன்பு மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை நகர்ப்புறங்களில் முழுமையாக நிறைவேற்றி, வீராணம் குடிநீர் திட்டத்தையும் பூர்த்தி செய்து சென்னைக் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு அளித்தார். அதுபோல் தமிழ்நாட்டில் உள்ள 17,250 ரெவின்யூ கிராமங்கள், அறுபதாயிரத்துக்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் போர்க்கால அடிப்படையில் மழைநீர் சேகரிப்புத் திட்டம் அமலாக்கப்பட்டால் வேளாண்மை பெறும் கிராமங்கள் செழிப்படையும்.

ஒரு மாணவி அரசு அளித்த கணினியை வைத்துப் படித்துக் கொண்டிருக்கும் படம் மனதைக் கவர்ந்தது. ஆனால், அவள் இருக்கும் வீடோ குடிசை வீடு. இந்த வீட்டை பசுமை வீடாக மாற்ற அரசு அறிவித்து இருக்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டால் சிறப்பாக மக்கள் வாழ்கைத் தரத்தை உயர்த்தும்.

பசுமை வீடுகளுக்கு லட்சக்கணக்கில் செங்கல் தேவைப்படும். செங்கல் உற்பத்தி கிராம குடிசைத்தொழில். தரிசு நிலத்தில் செங்கல் செய்வது மக்களுக்கு உழைப்புக்கு ஏற்ற தொகையும் கிராம முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்.

சூரிய ஒளியிலிருந்து மின்சார உற்பத்தி மிகச் சிறப்பான திட்டம். வீடுகளில் சோலார் தகடுகள் மூலம் வீட்டுக்குத் தேவையான மின் சக்தி கிடைக்கும். மின் வெட்டு வருமோ என்ற கவலை இருக்காது. பல ஐரோப்பிய நகரங்களில் வீடுகளின் மாடியில் சோலார் பேனல் வைப்பதற்காக வாடகைக்கு விடப்படுகிறது.

அந்த வகையில் சூரிய சக்தி ஈர்க்கும் திட்டம் நகரங்களில் விரிவாக்கப்பட்டால் சோலார் தகடுகளின் விலை குறையும், சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் அதிக செலவு என்ற நிலை மாறும்.

ஐக்கிய நாடுகள் சபை நாட்டின் நிர்வாகத்தின் ஆளுமையைப் பற்றி விவரிக்கும்பொழுது, வெளிப்படையான ஊழலற்ற நிர்வாகம்தான் சிறப்பான அமைப்புக்கு அடித்தளம் என்று உறுதிபடக் கூறியிருக்கிறது. நாடெங்கிலும் ஊழல் பிரச்னை விசுவரூபம் எடுத்துள்ளது.

எல்லோரும் ஊழலை எதிர்க்கிறார்கள். ஆனால், அதற்கான சட்டம் நிறைவேற்றுவதில்தான் எவ்வளவு சிக்கல்கள். ஒவ்வொருவரும் தான் பிடித்த முயலுக்கு மூன்றேகால் என்று விதண்டாவாதம் செய்து கொண்டிருப்பது வியப்பாக இருக்கிறது.

ஆனால், சட்டம் நிறைவேற்றுவதில் மட்டும் ஊழல் அடங்குமா என்பது பெரிய கேள்விக்குறி. "எந்தச் செயலைச் செய்தால் நமக்குத் தூக்கம் தொலையுமோ அதுதான் நேர்மையற்ற செயல்' என்று முதலமைச்சர் நேர்மைக்குத் தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.

2011-ம் ஆண்டு போராட்டம் நிறைந்த ஆண்டு என்று கூறலாம். உலகில் பல நாடுகளில் பல இடங்களில் ஆட்சியாளர்க்கு எதிராகப் போராட்டம் ஏற்பட்டது. எகிப்து, துருக்கி, லிபியா போன்ற மத்திய கிழக்காசிய நாடுகளில் ஒருவிதமான போராட்டம். பொருளாதார வீழ்ச்சிக்கு எதிராக கிரீஸ், போர்ச்சுகல், ஸ்பெயின் போன்ற நாடுகளில் மக்கள் தெருக்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஏன், பொருளாதார தலைநகரமாகிய நியூயார்க் நகரத்திலும் தொடர் போராட்டம் ஏற்பட்டது. ஊடகங்கள் விரிவடைந்துவிட்டதால் கருத்துப் பரிமாற்றம் துரிதமாக நடைபெறுவதும் ஒரு காரணம்.

எல்லா மக்களும் விரும்புவது அமைதியான அபிவிருத்திக்கு வித்திடும் சூழல். நிர்வாகத்திறன் பற்றாக்குறையால் பல மாநிலங்களில் பிரச்னை ஏற்பட்டுள்ளன. இந்தப் பற்றாக்குறையைச் சரிசெய்வது ஒன்றும் கடினமல்ல. துறைக்கு உகந்த அமைப்பை உருவாக்க வேண்டும்.

செயல்பாடுகளையும் முன்னேற்றத்தையும் தெளிவாக மேற்பார்வையிட வேண்டும். குறுக்கீடுகள் இல்லாது நேர்மையான பணிகளை உறுதி செய்ய வேண்டும்.

முன்னேற்றப்பாதையில் தடைக்கற்கள் இல்லாமல் இருக்காது. ஆனால், அவற்றைத் தகர்த்து வெற்றிப் படிக்கட்டுகளாக மாற்றுவதுதான் நிர்வாகத்தின் திறமை. நிர்வாகத் திறமை முக்கியம். ஆனால், அதே நேரத்தில் திண்மையான ஈடுபாடும் மக்கள் மேல் அக்கறையும் இருக்க வேண்டும்.

நல்லியல்புகளும் நேர்மையும் இல்லாவிட்டால் எவ்வளவுதான் திறமையும் திண்மையும் இருந்தாலும் விழலுக்கு இறைத்த நீர்போல மறைந்து விடும். நேர்மைதான் நிர்வாகத்தை நிமிர்த்தும் முதுகெலும்பு.

திறமை, திண்மை, நேர்மை தாரக மந்திரமாக அமைந்தால் மேலை நாடுகளைப் பார்த்து நாம் ஏங்க வேண்டாம். மற்றவர்கள் நம்மைப் பார்த்து வியப்பார்கள், போற்றுவார்கள், கூட்டுச் சேர விழைவார்கள்.

"தேவி ப்ரோவ சமயமிதே' காப்பாற்றும் சமயமிதுதான் என்று தேவியைத் துதிக்கும் அழகான கர்நாடக சங்கீதப் பாடல். திறமை, திண்மை, நேர்மை இவற்றை அணிகலன்களாகக் கொண்டு துணிவுடன் நிர்வாகத்தை முன்னேற்றப்பாதையில் இட்டுச்செல்லும் சமயம் இதுவே.

நன்றி தினமணி

nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum