உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

இதுகூடவா புரியவில்லை....

View previous topic View next topic Go down

இதுகூடவா புரியவில்லை....

Post by nandavanam on Fri Dec 16, 2011 1:57 am


லோக்பால் மசோதா, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு ரூபாய் மதிப்புக் குறைவு போன்ற பிரச்னைகள் வெறும் அரசியல் பிரச்னையாக மட்டுமே பார்க்கப்படுகின்றன. ஆனால், இவை ஒவ்வொன்றுமே நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வேகமாகப் பின்னுக்கு இழுக்கும் தன்மையன என்பதை யாரும் உணர்வதாகத் தெரியவில்லை.

லோக்பால் மசோதா என்பது உயர் இடத்து ஊழலைக் குறி வைத்து எழுப்பப்பட்டாலும் அங்கிங்கெனாதபடி எங்கும் பரவிவிட்ட ஊழலைக் களைந்தால்தான் மக்களுக்கு அரசின் திட்டங்களுடைய பலன் ஓரளவுக்காவது கிடைக்கும் என்பதால் இதன் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது.

அடுத்ததாக, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு வேண்டும் என்கிற அரசின் பிடிவாதத்தை எடுத்துக் கொள்வோம். இந்தியாவில் பொது விநியோக திட்டத்தை முறையாகவும் வலுவாகவும் கொண்டுவரத் தவறிவிட்டு இதையெல்லாம் வால்மார்ட் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களால்தான் முடியும், அவர்களால்தான் விவசாயிகளுக்கும் அதிக விலை கொடுத்து, நுகர்வோர்களுக்கும் குறைந்த விலையில் பொருள்களை விற்க முடியும் என்பது நம்முடைய கையாலாகத்தனத்தைப் பட்டவர்த்தனமாக ஒப்புக்கொள்வதாகும்.

ஆரம்பத்தில் விவசாயிகளுக்கு அதிக விலை கொடுத்து ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தும் இந்தப் பன்னாட்டுச் சில்லறை வர்த்தக நிறுவனங்கள் இந்தியாவின் சில்லறை வர்த்தகத்தின் முதுகெலும்பை முறித்துப் போட்டபிறகு தங்களது சுய ரூபத்தைக் காட்டத் தொடங்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

அதைவிட பரிகாசத்துக்கு உரியது, அவர்களால் ஒரு கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த முடியும் என்பது. 53 நகரங்களில் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டு ஒரு கோடிப் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் சக்தியும் திறமையும் அவர்களுக்கு இருந்தால், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வேலையில்லாத் திண்டாட்டமும் தொழில்துறை மந்தமும் ஏன் இன்னமும் நீடிக்க வேண்டும்? அங்கேதான் பல வால்மார்ட்டுகள் இருக்கின்றனவே?

தொழில்துறை உற்பத்தி முதல் முறையாக இந்த ஆண்டு மைனஸ் 5.1% ஆக அக்டோபரில் பதிவாகியிருக்கிறது. நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வீதம் 2011-12-ல் 7% ஆகத்தான் இருக்கும். 2013-14-ல் தான் 8% என்ற அளவை எட்டும் என்று "ஃபிட்ச்' என்ற தர நிறுவனம் கணித்திருக்கிறது.

இது ரிசர்வ் வங்கியும் மத்திய திட்டக் கமிஷனும் மத்திய நிதித்துறையும் கணித்ததைவிட மிகவும் குறைவு என்பது மட்டுமல்ல, உண்மையும்கூட.

சர்வதேச அளவில் காணப்படும் பொருளாதார மந்த நிலை மட்டும் அல்லாமல் கடன்கள் மீது வங்கிகள் வசூலிக்கும் வட்டியை மார்ச் 2010 முதல் ரிசர்வ் வங்கி ஒவ்வொரு காலாண்டிலும் இடைவிடாமல் உயர்த்திக் கொண்டே வருவதும் இதற்கு ஒரு முக்கிய காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

கடைசியாக, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துகொண்டே வருகிறது. திங்கள்கிழமை ஒரு டாலருக்கு நிகரான மதிப்பு ரூ.52.84 ஆக இருந்தது செவ்வாய்க்கிழமை ரூ.53.23 ஆக மேலும் சரிந்துவிட்டது. இது 2012 பிப்ரவரி வரை நிச்சயம் தொடரும் என்றே பேசிக்ஸ் பாரெக்ஸ் என்ற அமைப்பின் இயக்குநர் கே.என். தே தெரிவிக்கிறார்.

டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்புக் குறைந்ததற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. வெளிநாட்டு நிறுவனங்கள் வாங்கியிருந்த கடன் பத்திரங்களின் காலம் முடிவடைந்து வருவதால் அவற்றுக்கு டாலர்களாகத் திருப்பித் தர வேண்டியிருக்கிறது. அடுத்ததாக, வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் இந்தியச் சந்தையில் முதலீடு செய்த தொகையைத் திரும்பப் பெற்று தாய் நாடுகளுக்கு அதிக அளவில் அனுப்பி வருகின்றன.

குளிர்காலம் நெருங்குவதால் சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலிய எண்ணெயை இந்தியா அதிகம் வாங்க நேர்கிறது. இதற்காக அதிகம் அன்னியச் செலாவணி தேவைப்படுகிறது. இந்தக் காரணங்களால் டாலருக்குத் தேவை மிகுந்து இந்திய ரூபாயின் மதிப்பு குறைகிறது என்று தெரிகிறது.

எல்லாவற்றையும்விட இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பண்டங்களின் மதிப்பைவிட இறக்குமதி செய்யும் பண்டங்களின் மதிப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது. இந்த வகையில் வெளிவர்த்தகப் பற்றாக்குறை கடந்த நவம்பரில் 19.5 பில்லியன் டாலர் என்ற அளவை எட்டிவிட்டது. இவையெல்லாம் நம்முடைய பொருளாதாரம் நல்ல நிலையில் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டும் அறிகுறிகள்.

இன்னமும் இவற்றையெல்லாம் பூசி மெழுகாமல் உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். சமதர்மக் கொள்கைகள் வெறும் சித்தாந்த கோஷங்கள் அல்ல; இந்தியா போன்ற 30% அதிகமான மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் ஏழை நாடுகளில் கிடைப்பவற்றை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து வறுமையிலிருந்து மீள சுயச்சார்பைப் பெறுவதே சரியான வழிமுறையாக இருக்கும்.

இதையெல்லாம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கவனிக்கிறதா, கவலை கொள்கிறதா என்று தெரியவில்லை. பெட்ரோலியப் பொருள்களின் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை அரசுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களிடம் வழங்கியதைப்போல, நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் குறித்து கவலைப்படும் பொறுப்பையும் யாரிடமாவது ஒப்படைத்துவிட்டதோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.

வீட்டுக்கு வீடு வாசல்படி என்பதைப்போல, நாட்டுக்கு நாடு அதனதன் பிரச்னைகள் இருக்கின்றன. ஒரு நாட்டுக்குப் பொருத்தமான தீர்வு இன்னொரு நாட்டுக்கும் பொருந்தும் என்று எதிர்பார்ப்பது தவறு. நமது பிரச்னையைத் தீர்க்க, டோக்கியோவையும், வாஷிங்டனையும், மாஸ்கோவையும், லண்டனையும் எதிர்பார்க்காமல் கட்சி மனமாச்சரியங்களை மறந்து கைகோக்க வேண்டிய நேரம் இது. இதுகூட ஏன் நமது தலைவர்களுக்குப் புரியவில்லை?

நன்றி தினமணி

avatar
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

View user profile http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum