உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஒருமைப்பாட்டை சிதைத்து விடாதீர்கள்!

Go down

ஒருமைப்பாட்டை சிதைத்து விடாதீர்கள்! Empty ஒருமைப்பாட்டை சிதைத்து விடாதீர்கள்!

Post by nandavanam Thu Dec 15, 2011 12:45 am

ஒருமைப்பாட்டை சிதைத்து விடாதீர்கள்! Mullai-periyar-protest-pic-1

முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து என்று குரலெழுப்பி, மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பி அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேட நினைத்த கேரள அரசியல்வாதிகளுக்கு, உச்ச நீதிமன்றம் தக்க பதிலடி கொடுத்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, அணையின் நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்க வேண்டும் என்கிற கேரள அரசின் கோரிக்கையை நிராகரித்திருப்பதுடன், கேரள அரசு குறிப்பிட்டிருப்பதுபோல, நில அதிர்வுகளால் அணைக்கு ஆபத்து என்கிற கருத்தையும் நிராகரித்திருக்கிறது.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் ஆரம்பம் முதலே, கேரள அரசு வேண்டுமென்றே பிடிவாதம் பிடிக்கிறது என்பது மட்டுமல்ல, தமிழகத்தின் நியாயமான கோரிக்கையை நிராகரிப்பதில் முனைப்பும் காட்டி வருகிறது.

கேரள மாநில சட்டமன்றத்தின் சிறப்புக்கூட்டம் 9-12-11 அன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து கீழ்க்கண்ட தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன.

116 ஆண்டுகள் பழமையான முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக புதிய அணை கட்டுவது ஒன்றே பிரச்னைக்குத் தீர்வு.

புதிய அணை கட்டப்படும்வரை இப்போதுள்ள அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 120 அடியாகக் குறைக்க வேண்டும்.

2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு இந்தத் தீர்மானம் முற்றிலும் எதிரானதாகும். எனவே, உச்ச நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டுக்கு கேரள அரசும் ஒட்டுமொத்த சட்டமன்றமும் அனைத்துக் கட்சிகளும் உள்ளாகியுள்ளன.

இந்த இரண்டு கோரிக்கைகளை உள்ளடக்கிய, இந்தத் தீர்மானத்தின் மீது பேசிய முதல்வர் உம்மன்சாண்டி, புதிய அணை கட்டப்பட்டாலும் தமிழகத்துக்கு தற்போது வழங்கப்படும் நீரில் ஒரு சொட்டுகூட குறையாமல் வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளார். கேரளத்துக்குப் பாதுகாப்பு, தமிழகத்துக்குத் தண்ணீர் என்ற புதிய முழக்கத்தையும் அறிவித்துள்ளார்.

கேரள அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள் நீர்மேல் எழுத்துக்கு நேரானவையாகும். திருவாங்கூர் சமஸ்தானமாக இருந்தபோது அதில் குமரிமாவட்டம் இணைந்திருந்தது. அப்போது நெய்யாறு என்ற ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டது. இந்த அணையின் இடதுபுற கால்வாயின் மூலம் திருவாங்கூர் பகுதிக்கு 19,100 ஏக்கர் நிலத்துக்குப் பாசன வசதி அளிக்கப்பட்டது. இதில் 9,200 ஏக்கர் நிலம் 1956-ம் ஆண்டு குமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டபோது தமிழகத்தின் பகுதியாயிற்று. ஆனால், இந்த நிலத்துக்கு அளிக்க வேண்டிய நீரைத் தர கேரளம் பிடிவாதமாக மறுக்கிறது. இந்தக் கேரளமா புதிய அணைகட்டி பெரியாற்று நீரை நமக்குத் தரப்போகிறது?

தமிழகத்துக்குத் தண்ணீர் தருவோம் என்று ஒருபுறம் கூறும் கேரள அரசு ஆனந்த் குழுவிடம் செப்டம்பர் மாதம் அளித்துள்ள மனுவின் 37-ம் பக்கத்தில் ""முல்லைப் பெரியாறு ஆறு கேரளத்துக்கு மட்டுமே சொந்தமானது ஆகும். இரு மாநிலங்களுக்கு இடையே ஓடும் ஆறு அல்ல. எனவே, அந்த ஆற்று நீரில் தமிழகம் உரிமை கோர முடியாது'' என்றும், அந்த அறிக்கையின் 23-ம் பக்கத்தில் ""தமிழகத்துக்குத் தண்ணீர் தருவது என்பது கிடைக்கும் நீரின் அளவைப் பொறுத்தது ஆகும்'' எனவும் குறிப்பிட்டுள்ளது.

அதாவது கர்நாடக அணைகளில் தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொண்டு நமக்கு உரிமையான நீரை கர்நாடகம் எப்படித் தர மறுக்கிறதோ அதைப்போல கேரளமும் எதிர்காலத்தில் செய்யும் என்பதுதான் இதன் உட்கருத்து.

புதிய அணை கட்டவேண்டும் என்று கேரளம் வலியுறுத்துவது ஆழமான உள்நோக்கம் கொண்டதாகும். புதிய அணை கட்டப்பட்டால் இப்போது உள்ள அணையின் மீது 999 ஆண்டுகளுக்கு நமக்குள்ள உரிமை பறிபோகும். புதிய அணையை தற்போதைய அணைக்குக் கீழே கட்டினால், அதிலிருந்து நமக்குத் தண்ணீர் தருவது என்பது மிகமிகக் குறையும். புதிய அணையின் மீது கேரள அரசின் கட்டுப்பாடுகள் அதிகரிக்கும்.

இப்போதுள்ள அணையை வலுப்படுத்தும் பணியைச் செய்யவிடாமல் 21 ஆண்டுகாலம் இழுத்தடித்தார்கள். புதிய அணை கட்டுவதற்கு எத்தனை ஆண்டுகாலம் இழுத்தடிப்பார்களோ தெரியாது.

புதியதாகப் போடப்படவேண்டிய ஒப்பந்தம் மிகக் குறைந்த ஆண்டுகளுக்கே போடப்படும். இப்போதைய குத்தகைப் பணம் மற்றும் மின் உற்பத்திக்கான கட்டணம் ஆகியவற்றை அதிகமாகக் கொடுக்க நேரிடும். பணிகள் முடியும்வரை நீர்மட்டம் 120 அடியில் இருக்கும்.

இதன் விளைவாக தென் தமிழகத்தில் உள்ள 2 லட்சம் ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிடும். அணை பலவீனமாக இருக்கிறது என்ற கேரளத்தின் குற்றச்சாட்டு எவ்வளவு பொய்யான குற்றச்சாட்டு என்பதை அம்மாநிலத்தின் அட்வகேட் ஜெனரல் கேரள உயர் நீதிமன்றத்தில் அளித்துள்ள கீழ்க்கண்ட அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்துக்கும் அணையின் பாதுகாப்புக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. அணை உடைந்தாலும் அதன் நீர் அதற்குக் கீழ் உள்ள இடுக்கி, செறுதோணி, குளம்மாவு அணைகளுக்குப் போய்ச் சேரும். இந்த அணைகள் அந்தத் தண்ணீரைத் தாங்கிக் கொள்ளும் அளவுக்கு வலிமை பெற்றவையாகும். செறுதோணி அணையின் நீரைத் திறந்துவிட்டால் நேராக அரபிக்கடலுக்குச் சென்றுவிடும் என்று அவர் கேரள அரசின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் அளித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பேரிடர் ஏற்படும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெரியாறு ஆற்றுப் பகுதியில் இருந்து 450 குடும்பங்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி விட்டோம் என்றும் அட்வகேட் ஜெனரல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அணை உடைந்தால் 4 மாவட்டங்களில் உள்ள 35 லட்சம் மக்கள் செத்து மிதப்பார்கள் என இடைவிடாது புளுகித் தள்ளிய கேரள அரசு 450 குடும்பங்களை மட்டும் வெளியேற்றியிருக்கிறது என்று கூறியதன் மூலம் அது இதுவரை கூறிவந்த பொய் அம்பலமாகிவிட்டது.

கேரள மாநில இயற்கைப் பேரிடர் மேலாண்மைத் துறையின் செயலர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் அதிலிருந்து வெளியேறும் வெள்ளம் இடுக்கி அணையைச் சென்றடைய 4 மணிநேரமும், செறுதோணி அணை மூலம் அரபிக் கடலைச் சென்றடைய 10 முதல் 12 மணி நேரமும் பிடிக்கும். எனவே மக்களுக்கு எத்தகைய அபாயமும் ஏற்படாது என்று கூறியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரான அச்சுதானந்தன் உயர் நீதிமன்றத்தில் அட்வகேட் ஜெனரல் தெரிவித்த கருத்துகள் சதித்திட்டமும், துரோகமும் கலந்தது. அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வற்புறுத்தினார். ஆனால், விசாரணை நடத்திய, கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவரைக் கொண்ட ஆயம் முல்லைப் பெரியாறு அணை குறித்து கேரள அரசின் அட்வகேட் ஜெனரல் தெரிவித்த கருத்துகள் திருப்திகரமாக இருந்தன என்று குறிப்பிட்டுள்ளது. இந்தப் பிரச்னை குறித்து, உச்ச நீதிமன்றமும், தேசிய மனித உரிமை ஆணையமும் ஆராய்ந்து வருவதால், நாங்கள் இதில் தலையிட மாட்டோம் என கேரள மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நீதியரசர் ஜே.பி. கோஷியும் அறிவித்திருக்கிறார்.

முல்லைப் பெரியாறு அணை உடைந்தால், அதன் நீரை இடுக்கி அணை முழுமையாக ஏற்றுக்கொள்ளும். எனவே, பயப்பட வேண்டிய தேவையில்லை. அணை உடைந்தாலும் 106 அடிக்குமேல்தான் உடையும். அவ்வாறு உடையும்போது 6 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே வெளியேறும். அவ்வாறு வெளியேறும் நீர் நேராக இடுக்கி அணைக்குப் போகும் வகையில்தான் அணையின் அமைப்பு உள்ளது. இடுக்கி அணையின் கொள்ளளவு 70 டி.எம்.சி. ஆகும். எனவே அணை உடைந்தால் வெளியேறும் நீர் முழுவதையும் இடுக்கி அணை தாங்கிக்கொள்ளும்.

அணை உடையும் நிலை ஏற்பட்டாலும் தண்ணீர் முழுவதும் அணையை ஒட்டியுள்ள மிக ஆழமான பள்ளத்தில்தான் விழும். அங்கு எந்தச் சமவெளிப் பகுதியும் இல்லை. பெரியாறு ஆற்றங்கரை ஓரம் உள்ள குடியிருப்புப் பகுதிகள் அனைத்தும் பெரியாறு அணைக்கு மேல்தான் உள்ளன. பெரியாறு அணை நீர் இவற்றுக்குள் ஒருபோதும் செல்லாது.

பெரியாறு அணையின் நீர்க்கசிவு அதிகம் இருப்பது அபாயகரமானது என்றும் கேரளம் குற்றம் சாட்டுகிறது. அணைகளில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச நீர்க்கசிவு நிமிடத்துக்கு 250 லிட்டர் ஆகும்.

முல்லைப் பெரியாறு அணையில் நிமிடத்துக்கு 45 லிட்டர்தான் நீர்க்கசிவு ஏற்படுகிறது. அனுமதிக்கப்பட்ட நீர்க்கசிவில் இது 5-ல் ஒரு பகுதியாகும். எனவே இது அபாயம் அற்றது.

உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு கூறும்வரை காத்திருக்காமல் அணை உடைந்து பல லட்சம் மக்கள் பலியாவார்கள் என இடைவிடாது கூப்பாடு போடும் கேரள அரசு பெரியாறு அணைப்பகுதியில் படகு சவாரியை மட்டும் இன்னமும் நிறுத்தவில்லை. பெரியாறு அணையில் கேரள வனத்துறை, சுற்றுலாத்துறை ஆகியவற்றின் சார்பில் படகுகள் இயக்கப்படுகின்றன. தினமும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும், இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும், படகு சவாரி செய்கின்றனர். அணை உடையப்போகிறது என்பது உண்மையாக இருந்தால், படகு சவாரியை உடனடியாக கேரள அரசு நிறுத்தியிருக்க வேண்டுமே, ஏன் இதுவரை, நிறுத்தவில்லை?

9-12-11 அன்று உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்த மனுவில் அணை உடைந்தால் ஏற்படும் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல என உச்ச நீதிமன்றத்தையே மிரட்டும் அளவுக்குச் சென்றிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட முன்னாள் தலைமை நீதியரசர் ஏ.எஸ். ஆனந்த் குழு பெரியாறு அணைப் பிரச்னை குறித்து முழுமையாகப் பரிசோதனை செய்து வருகிறது. இக்குழு அணையின் வலிமை குறித்து, நன்கு ஆராய்ந்து தனக்கு அறிக்கை தருவதற்காக மத்திய நீர் ஆணையம், மத்திய நீர் மற்றும் மின்சார ஆராய்ச்சி நிலையம், இந்திய புவியியல் அளவுத்துறை, பாபா அணுஆராய்ச்சி மையம், மத்திய மண் மற்றும் கட்டுமான ஆராய்ச்சி நிலையம் போன்ற அமைப்புகளின் சேவையைப் பயன்படுத்தியுள்ளது. இந்த அமைப்புகளைச் சேர்ந்த நிபுணர்கள் பெரியாறு அணை நீருக்குள் மூழ்கியும் மேலும் பல்வேறுவிதமான சோதனைகளை மேற்கொண்டும் நவீன சாதனங்களைப் பயன்படுத்தியும் உண்மையைக் கண்டறிந்து, ஆனந்த் குழுவினரிடம் கடந்த 5-12-11 அன்று அளித்துவிட்டனர்.

இந்தக் குழுவின் ஆய்வு வேலைகளுக்காக தமிழக அரசு இதுவரை ரூ.1.38 கோடி கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அணை வலிமையாக இருப்பதாக இந்த அறிக்கையில் திட்டவட்டமாகவும், தெளிவாகவும் குறிப்பிடப்பட்டுள்ள செய்தியை அறிந்த கேரள அரசியல்வாதிகள், அவசரஅவசரமாகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனந்த் குழு தனது இறுதி அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் அளித்து, உச்ச நீதிமன்றம் அதை ஏற்றுக்கொண்டு தனக்கு எதிராகத் தீர்ப்புச் சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று அச்சத்தின் காரணமாக அதை எப்படியாவது தடுப்பதற்குக் கேரளம் திட்டமிட்டுள்ளது. கேரளத்தின் சூழ்ச்சிவலையில் சிக்கி தமிழகம் பேச்சுவார்த்தைக்குப் போனால், அதைக் காரணமாகக் காட்டி உச்ச நீதிமன்றத்தை எத்தகைய முடிவும் எடுக்கவிடாமல் தடுக்க முடியும். நல்ல வேளையாக தமிழக அரசு இந்த சூழ்ச்சி வலையில் சிக்க மறுத்துவிட்டது.

1984-ம் ஆண்டில் சோவியத் நாட்டுக்குச் செல்லக்கூடிய நல்ல வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது சோவியத் நாட்டில் பல்லாயிரம் ஆண்டுகாலமாக பாலைவனமாக இருந்த ஒரு பகுதியில் அண்டை மாநிலத்தில் இருந்து ஆற்று நீரைக் கால்வாய் வெட்டிக் கொண்டுவந்து சோலைவனமாக்கிவிட்டதை நான் பார்த்தேன்.

துர்க்மேனிய குடியரசுக்கு நான் சென்றபோது வியப்பூட்டும் இக்காட்சியை நேரில் கண்டேன். வறண்ட பாலைவனமாக இருந்த துர்க்மேனியாவுக்கு அண்டை மாநிலத்தில் ஓடும் அமுதாரியா ஆற்றின் நீரை 1,400 கி.மீ. தூரத்துக்கு கால்வாய் வெட்டி திருப்பிக்கொண்டுவந்து மகத்தான சாதனை செய்திருக்கிறார்கள்.

இதன் விளைவாக 25 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றிருக்கிறது. லெனின்-காரகம் கால்வாய் என்று அழைக்கப்படும் இந்தக் கால்வாய் உண்மையில் பெரிய ஆறு ஆகும். இதில் கப்பல்கள்கூட செல்லுகின்றன. இந்த ஆற்றை வெட்டுவதற்கு சோவியத் நாட்டிலிருந்த பல்வேறு தேசிய இனமக்களும் ஒன்றுசேர்ந்து அளித்த ஒத்துழைப்பும், உழைப்பு மட்டுமே காரணம் அல்ல, அந்த மக்கள் உண்மையான மார்க்சியவாதிகளாக இருந்ததுதான் முக்கியமான காரணமாகும்.

தேசிய ஒருமைப்பாடு பற்றி வாய்கிழியப் பேசும் காங்கிரஸ் கட்சியும், விவசாயிகள்-பாட்டாளி வர்க்க நலன் பற்றி ஓயாது பேசும் மார்க்சிய கம்யூனிஸ்டுக் கட்சியும் இணைந்து பொய்யான தளத்தின் மேல் நின்று பெரியாறு அணைநீரை தமிழக விவசாயிகள் பயன்படுத்தவிடாமல் தடுத்து வருகின்றன. இந்தியா ஒரே நாடு, மக்கள் அனைவரும் சகோதரர்கள் என்று இவர்கள் பேசுவது உண்மையானால் தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்படுவது ஏன்?

சோவியத் திருநாடு உடைந்து சிதறியதற்கு வேறு காரணங்கள் இருந்தன. இந்த நிலைமை நீடிக்குமானால், இந்தியா உடைந்து சிதறுவதற்கு உம்மன்சாண்டிகளும், அச்சுதானந்தன்களும்தான் முழுமையான காரணமாக இருப்பார்கள்!

நன்றி தினமணி

nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum