உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

பாராட்டலாம்தான், ஆனால்...

Go down

பாராட்டலாம்தான், ஆனால்... Empty பாராட்டலாம்தான், ஆனால்...

Post by nandavanam on Mon Nov 14, 2011 4:15 am

பாராட்டலாம்தான், ஆனால்... 26-corruption-200


அசையா சொத்து விற்பனைத் தொழிலில் (ரியல் எஸ்டேட்) வெளிப்படைத்தன்மையை உருவாக்கவும் மோசடிகளைத் தடுக்கவும் அசையா சொத்துகள் (ஒழுங்காற்று மற்றும் மேம்பாடு) சட்ட முன்வரைவு அமைச்சரவையின் ஒப்புதலுக்காகத் தயாராக இருக்கிறது என்றும், குளிர்காலக் கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தில் வைக்கப்படவுள்ளது என்றும் மத்திய வீட்டுவசதித் துறை அமைச்சர் ஷெல்ஜா கூறியிருக்கிறார்.

மனை, வீடு மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டி விற்கப்படுவதில் நடைபெறும் முறைகேடுகள் கணக்கில் அடங்காதவை. எல்லா இடங்களிலும் இந்தப் பிரச்னை இருக்கிறது என்றாலும், அண்மையில் புதுதில்லியின் புறநகர்ப் பகுதியான நொய்டாவில் பல்வேறு குடியிருப்புகள் முறைப்படுத்தப்படாமலும், அனுமதியில்லாமல் கட்டப்பட்டும் இருந்ததால், அவற்றின் மீது அரசு நடவடிக்கை எடுத்தபோது தில்லியில் ஏற்பட்ட பலத்த ஓலம்தான் மத்திய அரசின் காதில் விழுந்தது என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.

தற்போது மத்திய அரசு தயாரித்துள்ள சட்ட முன்வரைவு, ரியல் எஸ்டேட் தொழிலில் வெளிப்படைத் தன்மையை உருவாக்குவதையும், ஏமாற்றப்படும் நுகர்வோருக்கு இழப்பீடு மற்றும் நியாயம் பெற்றுத்தரவும் மிக அடிப்படையான சட்ட விதிமுறைகளை உள்ளடக்கியதாக இருக்கிறது.

இந்தச் சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தில் அப்படியே ஏற்கப்பட்டு, சட்டமாக மாறினால் அதனால் நிச்சயமாக நுகர்வோருக்கு அதிக நன்மை இருக்கிறது என்பது உறுதி. வீட்டுமனைகள் மற்றும் குடியிருப்புகளைக் கட்டி விற்போர் அனைவரையும் கண்காணிக்கவும், அந்த அமைப்பின் மூலமாகவே அனுமதிகளை வழங்கவும், பாதிக்கப்படும் நுகர்வோருக்கு நியாயம் கிடைக்கச் செய்யவும் ஒவ்வொரு மாநிலத்திலும் அசையா சொத்துகள் விற்பனைத் தொழில் ஒழுங்காற்று ஆணையம் அமைப்பதுதான் இந்தச் சட்டத்தின் அடிப்படை நோக்கம்.

இந்த அசையாச் சொத்துகள் ஒழுங்காற்று ஆணையத்தில் பதிவு செய்யாமல் எந்தவொரு ரியல் எஸ்டேட் நிறுவனமும் மனைகளை வாங்கி விற்கவோ அல்லது அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டும் பணியைத் தொடங்குவதோ முடியாது. இன்னும் நுட்பமாகச் சொல்வதானால், தாங்கள் செயல்படுத்த இருக்கும் திட்டம் குறித்த விளம்பரத்தைக்கூட, பதிவு செய்யாதவர்கள் கொடுக்கக் கூடாது என்கிறது இந்தச் சட்ட முன்வரைவு.

ரியல் எஸ்டேட் நிறுவனம் தனது திட்டத்தைப் பதிவு செய்யும்போதே அந்த இடத்துக்கான முழு ஆவணங்களையும் கொடுத்தாக வேண்டும். அது கூட்டுத் தொழிலா, அதில் இடம்பெற்றுள்ளவர்கள் யார்,யார், நிலம் வாங்கப்பட்டதா அல்லது ஒப்பந்த அடிப்படையிலானதா, விவசாயம் செய்யப்படாத நிலமா, இங்கே மனைகள் ஒதுக்க அல்லது வீடுகள் கட்ட அதற்கான துறையிடம் உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா என எல்லா விவரங்களையும் தந்தால்தான் ஒழுங்காற்று ஆணையத்தில் பதிவு செய்யவே முடியும். அதுமட்டுமன்றி, இந்த ஆவணங்கள் அனைத்தும் இணையதளத்தில் எந்தவொரு நுகர்வோரும் பார்க்கக் கூடியதாக இருக்கும்.

இந்தச் சட்ட முன்வரைவில் குறிப்பிடப்பட்டிருக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டால் மிகப்பெருமளவிலான முறைகேடுகளைத் தடுத்துவிட முடியும் என்பது உறுதி. மேலும், இந்தச் சட்ட முன்வரைவில் தெரிவிக்கப்பட்டுள்ள இன்னொரு விதிமுறையும் பாராட்டுக்குரியது. ஒழுங்காற்று ஆணையத்தில் பதிவு செய்து அனுமதி பெறாமல், எந்தவொரு வீடு, மனை விற்பனைத் திட்டத்துக்காகவும் முன்பணம் அல்லது இட்டுவைப்பு (டெபாஸிட்) என எந்த விதத்தில் பணம் பெற்றாலும் குற்றம். பதிவு பெற்ற பின்னர், ரியல் எஸ்டேட் நிறுவனம், தான் குறிப்பிடும் திட்ட மதிப்பீட்டில் (நிலத்தின் சந்தை மதிப்பு உள்பட) 5 விழுக்காட்டுத் தொகையை தனியாக வங்கிக் கணக்கில் போட்டு வைக்க வேண்டும். நுகர்வோர் வழக்குத் தொடர்ந்தால் உடனடி இழப்பீடு வழங்க இந்த ஏற்பாடு.

தனக்குத் தவறான தகவல் கொடுத்து நிலம் அல்லது வீட்டை விற்பனை செய்துள்ளதாக ஒரு நுகர்வோர் இந்த ஒழுங்காற்று ஆணையத்திடம் முறையீடு செய்தால், அவர் சொல்வது உண்மையாக இருக்கும்பட்சத்தில் எந்தப் பிடித்தமும் இல்லாமல், செலுத்திய தொகையை வட்டியுடன் நுகர்வோருக்குத் திரும்பக் கிடைக்க இந்த ஒழுங்காற்று ஆணையம் உத்தரவிடக்கூடிய அளவுக்கு சட்டத்தில் வலிமை தரப்பட்டுள்ளது.

இந்தச் சட்டம் அமலுக்கு வந்து, முறையாகச் செயல்படுத்தப்படுமேயானால், நிச்சயமாக நுகர்வோருக்குப் பயன் கிடைக்கும் என்பதோடு, கறுப்புப் பணப் புழக்கமும் பெருமளவு குறையும். இன்றைய நாளில் வீட்டுமனை, அடுக்குமாடிக் குடியிருப்புகள், நிலம் ஆகியன கடுமையாக விலை உயர்ந்துவிட்டதற்கு அடிப்படைக் காரணம் கறுப்புப் பணம்தான். கணக்கில் காட்டப்படாத பணத்தின் வலிமையால் எதையும் எந்த விலைக்கும் வாங்க முடியும் என்ற மனப்போக்குதான் ரியல் எஸ்டேட் தொழிலில் மிகக் கடுமையான விலையேற்றத்துக்குக் காரணம்.

இந்த மசோதா சட்டமாக மாறினால், வீடுகளும் மனைகளும் நடுத்தர மக்களுக்கு நியாயமான விலையில் கிடைப்பதற்கான வாய்ப்பு உறுதி செய்யப்படும் என்பதில் சந்தேகமில்லை.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி, ஆதர்ஷ் அடுக்குமாடிக் குடியிருப்பு போன்ற பல மெகா ஊழல்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பல சாதனைகளைப் பாராட்டவிடாமல் செய்துவிட்டன. தகவல் பெறும் உரிமைச் சட்டம், கல்விபெறும் உரிமைச் சட்டம், உணவுக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டம், வர இருக்கும் அசையா சொத்துகள் (ஒழுங்காற்று மற்றும் மேம்பாடு) சட்டம் போன்றவை, சுதந்திர இந்திய சரித்திரத்தில் மிகப்பெரிய திருப்புமுனைச் சட்டங்கள் என்பதை நாளைய சரித்திரம் பதிவு செய்யக்கூடும்தான். மிகப்பெரிய மாற்றங்களுக்கு இந்த ஆட்சியில்தான் அடித்தளம் இடப்பட்டிருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை.

கைகொடுத்துப் பாராட்ட வேண்டும் போலத்தான் இருக்கிறது. ஆனாலும் என்ன செய்ய? கையெல்லாம் ஊழல் கறைபடிந்து நம்மை அருவருப்படையச் செய்கிறதே!

நன்றி தினமணி

nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum